மரபு விதைகளை பரிசளித்து இயற்கை விவசாயம் பழக்கும் தாளாளர்!

பள்ளிகள் கல்வி, இதர செயல்பாடுகள் கற்றுத் தரும் இடம் மட்டுமல்ல, மாணவர்கள் மத்தியில் மரபு சார்ந்த அறிவையும் புகட்டலாம் என்பதை நிரூபித்துள்ளது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வாணி மழலையர் பள்ளி மற்றும் அதன் தாளாளார் ரமேஷ் குமார்!

0

“இனி விதைகளே நமக்கு பேராயுதம்” என்று சொல்லி மறைந்த 21ம் நூற்றாண்டின் வெண்தாடிக்காரர் நம்மாழ்வாரின் வழிபற்றி பள்ளி மாணவர்களிடையே 2 ஆண்டு காலமாக மரபு விதைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது திண்டுக்கல் மாவட்டம் எரியோடை சேர்ந்த வாணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

10 நிமிடங்களுக்கு ஒரு முறை டிவியில் வந்து செல்லும் நூடுல்ஸ் விளம்பரம், எச்சில் ஊறும் நிறம், மணத்தில் சாப்பிட வா வா என்று அழைக்கும் துரித உணவுகளுக்கு அடிமையாகி பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் இருந்து பிறழ்ந்ததால் இன்று சிறு வயதிலேயே உடல்பருமன், பெண் பிள்ளைகள் சிறு வயதில் பூப்பெய்தல், 30 வயதிற்குள்ளாக இல்லாத நோய்கள் எல்லாம் வந்து மருத்துவமனையும் வீடுமாக அலைய வேண்டிய நிலை. இந்த அவல நிலைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு பள்ளிகளில் பாலியல் கல்வியைப் போல மரபு வழி உணவு, காய்கறி மற்றும் பழங்களை உண்ணும் பழக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

இன்றைக்கு பல குழந்தைகளுக்கு மரபு வழி உணவுகள் பற்றி தெரியவில்லை என்பது ஆச்சரியப்படும் விஷயமல்ல ஏனெனில் பெரியவர்களில் பலருமே மரபு வழி காய்கறி என்றால் என்ன? அதனால் என்ன பயன் என்பதை அறியாமலேயே தான் இருக்கிறார்கள். 

எனவே சிறு வயதில் குழந்தைகளிடம் மரபு வழி விதைகள் பற்றி கற்பித்தால் அது அவர்களின் பெற்றோருக்கும் சேர்த்து கற்றுத்தந்தற்கான பயனைத் தரும் என்று திட்டமிட்டு அதனை தன்னுடைய மழலையர் பள்ளியில் செயல்படுத்திக் காட்டி இருக்கிறார் ரமேஷ்குமார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எரியோடில் செயல்பட்டு வருகிறது வாணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி. இந்தப் பள்ளியின் தாளாளரான ரமேஷ்குமாரின் முயற்சியால் கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு மரபு வழி விதைகள் பரிசுகளாக அளிக்கப்பட்டு பண்டைய விவசாய முறை வாழ்க்கைப்பாடமாக கற்றுத் தரப்பட்டு வருகிறது. 

“சுமார் 300 மாணவர்கள் படிக்கும் மழலையர் பள்ளியில் 5ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. அப்பாவின் மரணத்திற்கு பிறகு 2006ம் ஆண்டு முதல் பள்ளியை நான் நிர்வகித்து வருகிறேன். மாணவர்களுக்கு கல்வியைத் தாண்டி நமது பாரம்பரிய உணவு மற்றும் விவசாய முறையை அறிமுகம் செய்ய நினைத்தேன். இதற்கு முக்கியக் காரணம் இந்தப் பகுதியில் விவசாயம் மானவரியாக நடைபெற்றது. 

சிறு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் என பொன்னாக விளைந்த பூமி, ஆனால் மரபணு மாற்றப்பட்ட விதைகளால் இந்த பூமியும், அதனை உண்ணும் மக்களின் உடலும் பாதிக்கப்படுவதை பார்த்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என நினைத்தன் விளைவே பள்ளி மாணவர்களுக்கு விதைகளை பரிசாக அளிக்கும் திட்டம்,” என்கிறார் ரமேஷ்குமார்.

சுப நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தவிர்த்து இயற்கையை ஊக்குவிக்கும் விதமாக செடிகளை பரிசாக கொடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதன் அடுத்தகட்டமாக மரபு விதைகளை மாணவர்களுக்கு பரிசாக அளிப்பது பாராட்டக்கூடிய விஷயமே. ஒரே பிள்ளை ஆசையாக வளர்க்கும் பிள்ளை என்று பெற்றோரே குழந்தைகளுக்கு அனைத்தையும் வாங்கி கொடுத்துவிடுகின்றனர், அப்படி இருக்கையில் பள்ளிகளில் விதைகளை கொடுத்தால் அதை வளர வைக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு தோன்றுவதோடு, அதனை பராமரித்து வளர்க்கும் பொறுப்புணர்வும் கூடவே கிடைக்கும். 

இயற்கை விவசாயத்தை சொல்லிக் கொடுத்தது போலவும் ஆகி விடும் மற்றொரு புறம் அந்த விதை முளைவிட்டு செடியாகி, பூப்பூத்து, காய் காய்க்கும் பருவம் என ஒவ்வொன்றையும் நேரடியாக பார்க்கும் போது குழந்தைகளுக்கு தனி அனுபவத்தோடு தானே வளர்த்த செடியில் காய்த்த காய் என்ற பெருமிதமும் கிடைக்கும் இந்த அனுபவங்களை அவர்களுக்கு தந்துள்ளார் ரமேஷ்குமார்.

மரபணு மாற்றப்பட்ட காய்கறிக்கும், மரபு வழி காய்கறிக்கும் என்ன வித்தியாசம். ஹைபிரிட் காய்கள் 2 வாரமானாலும் கெட்டுப் போகாது, அதில் விதையும் இருக்காது, விதைக்காக நாம் மீண்டும் மரபணு மாற்றப்பட்ட விதையை வழங்கும் நிறுவனத்தை நம்பி இருக்க வேண்டும். மரபு வழி காய்கள் 3 நாட்கள் தாங்குவதே கடினம், இயற்கை முறையில் விளைவிக்கும் போது பூச்சிக்கொல்லிகள் அடிக்கப்படாததால் காய்க்குள் பூச்சிகள் இருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக அதில் இருந்து கிடைக்கும் விதையை நாம் மீண்டும் பயன்படுத்தி விளைவிக்க முடியும் என்ற புரிதல் மாணவர்களுக்கு வந்துள்ளதாகக் கூறுகிறார் ரமேஷ்குமார்,

எங்கள் வயல்களில் நெற்பயிர் விளைவித்து வந்தோம், இந்தப் பகுதியில் இயற்கை விவசாயம் சிறந்த முறையில் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்று நிலைமையே தலைகீழாகிவிட்டது. மரபு வழி விதைகள் விலை அதிகம், அதிக விளைச்சல் தராது என்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட பிரச்சாரத்தின் விளைவை இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆனால் இன்றும் கூட எங்களது வயல்களில் தென்னை மரங்கள் இயற்கை முறையில் வளர்க்கப்படுகின்றன. 

மாணவர்கள் மூலம் மாற்றத்தை கொண்டு வர முடியும், இன்றைய மாணவர்களே நாளைய இளைஞர்கள் அவர்களே நாட்டின் எதிர்காலம் என்பதை மனதில் வைத்தே தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து மாணவர்களை வைத்து பிளாஸ்டிக்கிற்கு எதிரான பேரணியை நடத்தினோம். மேலும் பள்ளியில் ஆண்டுவிழா, போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு  மரபு விதைகளை பரிசளித்தோம். அதனை மாணவர்கள் வீட்டில் வைத்து வளரவைத்து பயன் பெற்றுள்ளனர். 

மாணவர்களின் பெற்றோர் என்னை சந்தித்து மரபு விதையில் காய்ப்பு இருக்காது என நினைத்தோம் ஆனால் இந்த விதைகளில் இருந்து நல்ல ஆரோக்கியமான காய்கள் கிடைப்பதாகக் கூறினர் இதுவே என்னுடைய முயற்சிக்கான வெற்றியாக கருதுகிறேன் என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் ரமேஷ்குமார்.

இயற்கை விவசாயம், மரபுக்கு மாறுவோம் விழிப்புணர்வை விதைகள் விநியோகம் மூலம் மட்டுமின்றி பள்ளிக் கூடத்திலேயே ஒரு தோட்டத்தை உருவாக்கி விதைகளை விதைத்து அதற்கு கால்நடைகளின் கழிவுகளை மட்டுமே உரமாக போட்டு அதன் வளர்ச்சியை கண்கூடாக மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாரத்தில் ஒரு நாள் மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தை வகுப்பாகவே ஆசிரியர்கள் மூலம் கற்றுத் தருவதையும் வழக்கமாக வைத்துள்ளார் ரமேஷ்குமார்.

மழலையர் மனதில் பதியும் விஷயம் பசுமரத்தாணி போல இருக்கும் என்பதை தொடக்கமாக வைத்து தன்னுடைய பள்ளி மாணவர்களின் சீருடையிலும் ஏர் கலப்பை சின்னத்தை பதிய வைத்து விவசாயத்தின் அவசியத்தையும் கல்வியின் ஊடே பயிர் செய்து வருகிறார் இவர்.

ரமேஷ்குமாரின் முயற்சியை ஊக்குவிக்கும் விதமாக இயற்கை விதைகளை விநியோகம் செய்யும் அமைப்புகள் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வாணி மழலையர் பள்ளி மாணவர்கள் தற்போது பிளாஸ்டிக்கால் ஏற்படும் கேடுகள் என்ன, இயற்கை விவசாயம் நம் குலம் காக்கும் என்பதை உணர்ந்துள்ளனர். இதே போன்று ஜங்க் உணவு வகைகளை தவிர்த்து பாரம்பரிய தின்பண்டங்களை மாணவர்கள் ருசிக்க வேண்டும் என்பதற்காக பள்ளி வளாகத்திலேயே கடலைமிட்டாய், கமருகட் என்று 80, 90 களின் தின்பண்டங்களையே விற்பனைக்கு வைத்துள்ளோம் இதனை வாங்கி சுவைத்த மாணவர்கள் பெற்றோரிடமும் அதனையே வாங்கித் தருமாறு கேட்பதாகக் கூறுகிறார் ரமேஷ்குமார்.

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது துணிப் பைகளைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று பெற்றோருக்கு ஆலோசனை கூறும் வகையில் மாணவர்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். எங்கள் பள்ளி மாணவர்களின் செயல்களை குறும்படமாக எடுத்து பிற பள்ளி மாணவர்களுக்கும் முன் உதாரணமாக காட்ட சிலர் விருப்பம் தெரிவித்துள்ளது ரமேஷ்குமார் போட்ட விதை விருட்சம் பெற்று வருகிறது என்பதை உணர்த்துகிறது.

பள்ளிகளில் விவசாயம் சார்த்த நிகழ்வுகளை அடிக்கடி நடத்துவதில் ஆர்வத்துடன் பங்கேற்கும் மாணவர்கள் விவசாய விழிப்புணர்வு நாடகங்கள், நவீனத்தால் அழிந்து வரும் வாழ்க்கை பற்றிய பாடல்கள், மரபு வழி விதைகளை விளைவித்து பெற்ற காய்கறி, மரபு வழி வீடுகளின் மாதிரிகள் உள்ளிட்டவற்றை அறிந்து அவற்றை ஆர்வத்துடன் காட்சிப் படுத்தவும் செய்கின்றனர். 

விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை என்ற நம்மாழ்வாரின் கூற்றை பின்பற்றி தற்சார்பு வாழ்வியலின் வழித்தடத்தில் பயணித்திட விரும்பும் ரமேஷ்குமாரின் பயணம் வெற்றிப் பயணமாக மாற நாமும் அவர் வழியை பின்பற்றி சிறு மாற்றத்தையேனும் ஏற்படுத்துவோம்.