நீங்கள் எடுத்துக்கொள்ளும் 5 விநாடிகள் இடைவெளி உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடும்...

0

ஒரு குறிப்பிட்ட விதத்தில் பேசியதற்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட விதத்தில் நடந்து கொண்டதற்காகவோ நீங்கள் எத்தனை முறை வருத்தப்பட்டிருப்பீர்கள்? இது போன்ற சந்தர்ப்பங்களை பலமுறை நான் கடந்து வந்துள்ளேன். அந்தச் சந்தர்ப்பத்தில் வேறு விதமாக பேசியிருக்கலாம் அல்லது நடந்துகொண்டிருக்கலாம் என்று வருத்தப்பட்டுள்ளேன்.

நம்முடைய மூளையைத் தாண்டி உணர்வுகள் ஆதிக்கம் செலுத்த நாம் அனுமதிக்கும்போதுதான் அவ்வாறு வருத்தப்படுவதோ அல்லது நாமே நம்மை குற்றம் சாட்டிக்கொள்ளும் நிலையோ ஏற்படும். ஒருவேளை நீங்கள் உங்கள் நிதானத்தை இழந்து கோபமாக நடந்துகொண்டிருப்பீர்கள் அல்லது உங்களுக்கு ஏற்படும் பயம் அல்லது பதட்டம் உங்களது உற்சாகத்தை இழக்கச் செய்வதால் பேசாமல் இருப்பீர்கள். எப்படி இருந்தாலும் உங்களுக்கு தேவையான விளைவு ஏற்பட்டிருக்காது. ஏனெனில் நீங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தீர்களோ அவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளவில்லை.

உங்களது வீடு பணியிடம் என எங்கும் இது பொருந்தும். ஒரு சூழல் குறித்து அதிகம் சிந்திக்காமல் ஒவ்வொரு முறை நாம் எதிர்செயலாற்றும்போதும் ஒரு தொடர் நிகழ்வுகள் ஏற்பட நாம் வழிவகுக்கிறோம். அதாவது மிகச் சிறிதாக துவங்கி ஒரு மிகப்பெரிய எதிர்மறை தாக்கத்தை நமது வாழ்வில் ஏற்படுத்திவிடும்.

இந்த முறையை நம்மால் மாற்றமுடியுமா?

ஒரு தனிப்பட்ட இடைநிறுத்த பட்டனை உருவாக்கிக் கொள்ளுங்கள்

ஒரு சூழலுக்கு நீங்கள் எதிர் செயல் ஆற்றுவதற்கு சற்று முன்பாக உங்கள்முன் உள்ள அனைத்தும் அப்படியே உறைந்திருப்பது போலவும் ஒரு பெரிய இடைநிறுத்த பட்டன் உங்கள் கண்முன் தோன்றுவது போலவும் கற்பனை செய்துகொள்ளுங்கள். சூழ்நிலையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த நீங்கள் அந்த பட்டனுக்கு அருகே சென்று அதை அழுத்துங்கள்.

என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?

முதல் முறை இடைநிறுத்த பட்டனை பார்க்கும்போது சற்றும் சிந்திக்காமல் அதை அழுத்திவிட்டு தொடர்ந்து கோபம் அல்லது அழுகை அல்லது பயம் ஆகிய உணர்வுகளுடன் எதிர் செயலாற்றவும் வாய்ப்புள்ளது. ஆனால் அந்த பட்டனை 20 முறை அல்லது 100 முறை அழுத்திய பிறகு என்ன நடக்கும்? உங்களது மூளை ஒரு சிறிய இடைவெளியை எதிர்பார்க்கத் துவங்கும். நீங்கள் செயல்படுவதற்கு முன்பு அது குறித்து சிந்திக்க ஒரு சிறிய இடைவெளியை உருவாக்கிக் கொள்வதற்கும் வாய்ப்பாக அமையலாம்.

ஒரு சூழ்நிலைக்கு எதிர் செயலாற்றுவதற்கு பதிலாக அதற்கு பதிலளிக்கும் நிலைக்கு நீங்கள் மாறியிருப்பதால் இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும்.

நீங்கள் கோபமோ அல்லது பதட்டமோ அடையமாட்டீர்கள் என்பது இதன் அர்த்தம் இல்லை. துறவியாக மாறவேண்டும் என்றோ அல்லது ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டவேண்டும் என்பது குறித்தோ நாம் பேசவில்லை. உங்களது மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாகும். அந்தச் சிறிய இடைவெளியில் உங்களது எதிர் செயல் குறித்து சற்று சிந்தித்த பிறகு நீங்கள் கத்துவதா அல்லது அழுவதா அல்லது விலகி ஓடுவதா என்பதைத் தீர்மானிக்கலாம். உணர்ச்சிகளால் உந்தப்படாமல் நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்படுகிறீர்கள் என்பதுதான் மிகப்பெரிய வேறுபாடு.

அதை எப்படி அமைப்பது?

சரியான நேரத்தில் அந்த இடைநிறுத்த பட்டனை எவ்வாறு உங்கள் முன்னால் தோன்ற வைப்பது என்பதுதான் கேள்வி. இதற்கான பதில் உங்களுக்குள் இருக்கிறது.

நமது மூளையில் இரண்டு பகுதிகள் உள்ளது. ஒன்று கார்டெக்ஸ் எனப்படும் புறணி. இது தர்க்கவியல் மற்றும் சிந்தனைகளை கட்டுப்படுத்தும். இரண்டாவது அமிக்டாலா (amygdala) என்னுன் பகுதி. இது நமது உணர்ச்சிகள் மற்றும் நினைவுகளை கட்டுப்படுத்தும். நமது நடத்தை மூளையின் உணர்ச்சி பகுதியுடன் ஒன்றியில்லாமல் சிந்தனை பகுதியுடம் ஒன்றியிருக்க உதவும் உத்திகளை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இது மிகவும் எளிதானதாகும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த உத்திகளை தொடர்ந்து பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இடைநிறுத்த பட்டனை உருவாக்கிக்கொள்ளும் திறன் உங்கள் மனதிற்கு கிடைக்கும். இதற்கு சில மாதங்கள் ஆகும். மாரத்தான் பயிற்சியைப் போல நினைத்துக்கொள்ளுங்கள். உங்களது உடலுக்குத் தேவையான பயிற்சிக்கு நேரம் ஒதுக்கவில்லையெனில் திடீரென்று மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்கலாம் என தீர்மானிக்கமுடியாது.

வாழ்த்துக்கள். தொடர்ந்து பயிற்சி செய்து உங்களால் இடைநிறுத்த பட்டனை உருவாக்க முடிந்ததா என்பதைத் தெரியப்படுத்துங்கள்.

ஆங்கில கட்டுரையாளர் : மீடா மல்ஹோத்ரா