இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் குளோபல் வென்ச்சர் அலயன்ஸ் ஆகியவை இணைந்து ஆதரவளிக்கும் ‘இந்திய ரஷ்ய புதுமைகளுக்கான பாலம்’ என்ற பெயரில் இருதரப்பு தொழில் முனைவோர் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் நடைபெறும் இந்த நிகழ்வினை மும்பை ஐஐடியின் சொசைட்டி பார் இன்னோவேஷன் அண்ட் ஆன்ட்ரிப்ரீனர்ஷிப் மும்பையிலும், குளோபல் வென்ச்சர் அலையன்ஸ் மாஸ்கோவிலும் ஒருங்கிணைக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதுமிருந்து 10 புதிய தொழில் முனைவு நிறுவனங்கள் கலந்து கொள்ளுகின்றன. மாஸ்கோவில் இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், இந்திய தொழில் நிறுவனங்கள் கல்வி, செயல்முறை, நெட்வொர்க்கிங் மற்றும் கலாச்சார பிரிவுகள் உள்ளிட்ட துறைகளில் ரஷ்ய சந்தையில் ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தும் வகையிலான நோக்கத்தை கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் ரஷ்ய நாடுகளிடையே அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த புதிய தொழில் முனைவுகளுக்கு கவனம் செலுத்தும் வகையில் முதன் முதலாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட திட்டங்களை ஊக்குவிக்கும் முயற்சியும் இந்த நிகழ்வின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிகழ்விற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தொழில் முனைவுகள் மருத்துவ உபகரணங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள், ஆற்றல், கல்வி மற்றும் சில்லறை தொழில் நுட்பங்களின் தளங்களில் செயல்படுபவை. இந்த நிகழ்வின் மூலம், இந்த தொழில் முனைவோர்கள் ஒருங்கிணைந்த சூழலில் ரஷ்யாவின் உள் நாட்டு சந்தையில் தங்கள் பொருட்களை சோதனை செய்து பார்க்கவும், உள்ளூர் தொழில் கூட்டாளிகளை கண்டுபிடிக்கவும், வாடிக்கையாளர்கள் மற்றும் அந்த நாட்டில் உள்ள அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களின் அறிவினையும் பெற்றுக் கொள்ள முடியும்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி ரொகொசினும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜும் செப்டம்பர் 13 அன்று புது டெல்லியில் நடைபெற்ற இந்தோ ரஷ்ய வியாபார, பொருளாதார, அறிவியல், தொழில் நுட்ப மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு இயக்கத்தின் 22 வது அமர்வில் இருதரப்பு வர்த்தகத்தை 30 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்துவது உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இந்த அமர்வு முடிந்த மறு நாளே 10 புதிய தொழில் முனைவு நிறுவனங்கள் இந்திய ரஷ்ய தொழில் முனைவு பரிமாற்ற திட்டத்தின் கீழ் மாஸ்கோ செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், வரும் அக்டோபர் மாதம் 15,16 தேதிகளில் கோவாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் சந்திக்க உள்ளனர்.அப்போது அடுத்த பத்தாண்டுகளில் இரு நாடுகளுக்கிடையே உள்ள இருதரப்பு வர்த்தகத்தை மூன்று மடங்கு அதிகரிக்க செய்யும் திட்டத்தை நடைமுறைபடுத்துவார்கள் என அதிகாரிகளும், தொழில் முனைவர்களும் எதிர்பார்க்கின்றனர். கூடவே இது போன்ற நிகழ்வுகள் இரு நாடுகளுக்குமிடையே உள்ள பொருளாதார உறவுகளையும், தொழில் முனைவு முயற்சிகளையும் வலுப்படுத்த உதவும் எனவும் கருதுகின்றனர்.

இந்திய ரஷ்ய புத்தாக்கத்திற்கான இணைப்பினைப் பற்றி(IRBI)

கல்வி, செயல்முறை,னெட்வொர்க்கிங், மற்றும் கலாச்சார தளங்களில் ஒரு தெளிவான அறிமுகத்தை புதிய தொழில் முனைவு நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொள்ள இந்த நிகழ்வானது பயன்படுகிறது. மேலும், 15 கோடி மக்கள் தொகை கொண்ட ரஷ்ய சந்தையில் வலுவாக காலூன்றுவதற்கு தேவையான நுணுக்கங்களை இந்த நிகழ்ச்சியானது தொழில் முனைவோர்களுக்கு கற்றுத்தருகிறது.

மேலும் இந்த தொழில் முனைவர்கள், ‘குளோபல் மைண்ட் : புத்தாக்க சமூகத்தை சர்வதேசமயமாக்கல்,வளர்ச்சி மற்றும் நிலையானதாக்கல்’ என்ற தலைப்பில் நடைபெறும் புத்தாக்கம் தொடர்பான உலகாளவிய மாநாடுகளில் பங்கேற்கவும் வழிவகை செய்யப்படும். இதன் ஒரு பகுதியாக, மாஸ்கோவிற்கு வெளியே ஸ்கோல்கோவோ இன்னோவேஷன் பார்க் Skolkovo Innovation Park எனப்படும் புத்தாக்க மற்றும் தொழில் முனைவு முனையத்திற்கும் இந்த தொழில் முனைவர்கள் வருகை தந்து புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பங்கு கொள்ளும் தொழில் முனைவு நிறுவனங்கள்

பீல்டு அசிஸ்டென்ட் என்ற நிறுவனம் மொபைல்களுக்கான விற்பனையை ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லட்கள் மூலம் கண்காணிக்கும் கருவியை மொபைல் விற்பனையாளர்களுக்காக செய்து தருகிறது. http://www.fieldassist.in/

எக்கோலிபிரியம் எனர்ஜி என்ற நிறுவனம் ஆற்றல் பயன்பாடு மற்றும் அதற்கு சமமான அளவில் பயன்படுத்தப்படும் சொத்துக்களின் அளவுகளால் ஏற்படும் மாற்றங்களை பற்றிய விவரங்களை பெரிய அளவிலான டேட்டா எனர்ஜி அனாலிடிக்ஸ் பிளாட்பார்ம் மூலம் வழங்குகிறது. http://ecolibriumenergy.com

ட்ரான்செல் பயோலொஜிக்ஸ் என்ற நிறுவனம் ஸ்டெம் செல் தொடர்பான புத்தாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. http://transcell.in

ப்ரோடோ என்ற இந்த நிறுவனம் சாகச செயல்களை படம் பிடிப்பதற்கு தேவையான கேமராக்களை உற்பத்தி செய்யும் தொழில் நுட்பங்களை கொண்டுள்ளது. http://www.frodocam.com

ஏ3 ஆர்எம்டி கம்பியில்லா மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்து சந்தைபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது. http://a3rmt.com

மெட்ப்ரைம் டெக்னாலஜி என்ற இந்த நிறுவனம் நோயாளிகள் கண்காணிப்பு மற்றும் நோய் கண்டறியும் மருத்துவ உபகரணங்களில் கவனம் செலுத்தி வருகிறது http://medprimetech.com

கேர்என்எக்ஸ் இன்னோவேஷன் என்ற நிறுவனம் தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கான மருத்துவ சேவையை மொபைல் தொழில் நுட்பம் வழி வழங்க வகை செய்கிறது. http://carenx.com

அல்கோசர்க் ப்ராடக்ட்ஸ் என்ற நிறுவனம் அடுத்த தலைமுறைக்கு தேவையான அறுவை சிகிச்சை தொழில் நுட்பத்தையும், கணிப்பு முறைகளையும் உருவாக்குகிறது. http://www.algosurg.com/

கேம்பஸ் டைம் ஒரு மொபைல் செயலி வடிவமைப்பு நிறுவனம். இது மாணவர்கள் தங்களது கல்லூரி சூழலில் இயங்குவதற்கு தேவையான செயலிகளை உருவாக்குகிறது. http://www.campusti.me

ஷாப்ஸப் என்ற நிறுவனம் உள்ளூரில் உள்ள உயர்தர வியாபார நிறுவனங்களை கண்டுபிடித்து தரும் மொபைல் செயலிகளை உருவாக்குகிறது. http://www.shopsup.com

இந்த பத்து தொழில் முனைவு நிறுவன்ங்களும் இந்த நிக்ழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் சொசைட்டி பார் இன்னொவேஷன் அன்ட் ஆன்ட்ரிப்ரீனர்ஷிப் ஐஐடி மும்பையின் உதவியால் வர்த்தக நுட்பங்களை பாதுகாக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் உதவியுடன் 85 க்கும் அதிகமான புதிய தொழில் நிறுவனங்கள் வருமானத்தை மிகைப்படுத்தல் உள்ளிட்ட பயன்களை பெற்றுள்ளன.

இது போன்றே மாஸ்கோவை மையமாக கொண்டு செயல்படும் குளோபல் வென்ச்சர் அலையன்ஸ் என்ற நிறுவனம் உயர் தொழில் நுட்பத்தை கொண்டு செயல்படும் தொழில் முனைவர்கள் மீது கவனத்தை செலுத்துகிறது. இவர்களுக்கு போதிய பயிற்சிகளையும், முதலீடு பற்றிய ஆலோசனையும் வழங்கி வருகிறது. மேலும் உலகின் பல நாடுகளில் உள்ள அரசுகளுடனும், கார்ப்பரேட் நிறுவனங்களுடனும், பல முதலீட்டாளர்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. மாஸ்கோ மற்றும் சான்பிரான்ஸிஸ்கோ நகரங்களில் நிரந்தர அலுவலகங்களை கொண்டுள்ள இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள 20 நாடுகளில் தங்களுக்கான தொழில் கூட்டாளிகளை கொண்டுள்ளது.