'டெக்30' ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்: ஒரு தொகுப்பு!

0

இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு என தொழில்நுட்பத்தைக் கொண்டு பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காண முற்படும் ஸ்டார்ட் அப்களில் சிறந்த தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்’பாக கௌரவிக்கப்பட்ட சில டெக்30 ஸ்டார்ட் அப்களின் செயல்பாடுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Worxogo 

நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகமாகும்போது தனிப்பட்ட கவனம் அவசியமாகிறது. இதை மனிதவளத் துறையினால் வழங்க முடிவதில்லை. எனவே ரமேஷ் ஸ்ரீனிவாஸ், ரவி பமிதிபதி, சுதா பமிதிபதி, சுனீல் ஐயர், அனந்த் சூட், சிவராமகிருஷ்ணன் ஆகிய ஆறு ஆலோசகர்களும் இணைந்து செயற்கை நுண்ணறிவு சார்ந்து செயல்படும் ப்ராடக்டை ஆய்வு செய்யத் துவங்கினர். 

இது ஊழியர் நடத்தையை கணிக்கக்கூடியதாகும். நிறுவனங்களில் உற்பத்தித்திறன் குறைவதைத் தடுப்பதுடன் மேம்படவும் உதவுகிறது. 

வலைதள முகவரி: Worxogo

Fyle

இந்த ஸ்டார்ட் அப்’பானது நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் செலவு மேலாண்மைத் தீர்வுகளை வழங்குகிறது. பயனர் தனது செலவுகளை நேரடியாக வணிகரின் தளத்திலேயே பதிவு செய்துகொள்ளலாம். ஊழியர் தனது செலவு அறிக்கையை Fyle செயலி மூலம் நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்ளலாம். இது மோசடிகளை தடுக்கிறது. இதுவே இந்நிறுவனத்தின் தனித்துவமாகும்.

”பணி தொடர்பான செலவுகளில் எண்பது சதவீதம் பயணம் தொடர்பான செலவுகள் என்பதால் அந்தப் பகுதியில் செயல்பட்டு பயனர்களுக்கு சிக்கலில்லாத அனுபவத்தை வழங்க விரும்புகிறோம்,” என்றார் இதன் நிறுவனர்களில் ஒருவரான யஷ்வந்த்.

வலைதள முகவரி: Fyle

FirstHive

பெங்களூவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் வாடிக்கையாளர்களின் தொடர்புகள் மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்பான தரவுகளைக் கொண்டு தனித்துவமான வாடிக்கையாளர் அடையாளத்தை உருவாக்குகிறது.

தகவல்களை ஒருங்கிணைக்க இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் தரவுகள் குறித்த ஒருங்கிணைந்த பார்வையைப் பெறவும் அதைக் கொண்டு அர்த்தமுள்ள வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவும் இந்தத் தளம் உதவுகிறது. 

வலைதள முகவரி: FirstHive

CricHeroes

இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஒவ்வொரு விளையாட்டு போட்டியையும் பதிவு செய்துகொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்ள இந்தச் செயலி உதவுகிறது. கிரிக்கெட் விளையாட்டில் பயிற்சியளிக்க பல பயிற்சி மையங்கள் உள்ளபோதும் ஸ்கோர்கள் பெரும்பாலும் பேப்பர்களிலேயே பதிவிடப்படுகிறது. இதனால் விளையாட்டு வீரரின் வளர்ச்சியை கண்காணிக்க வாய்ப்பிருப்பதில்லை. 38-க்கும் அதிகமான கிரிக்கெட் அசோசியேஷன்கள் தங்களது அதிகாரப்பூர்வமான போட்டிகளை ஸ்கோர் செய்ய இந்தச் செயலியைப் பயன்படுத்துகிறது.

”பொதுவாக கிரிக்கெட் குறித்த மக்களின் விவாதங்கள் தரவுகள் ஏதுமின்றியே காணப்படும். போட்டி முடிந்ததும் அதுகுறித்த தரவுகளை சேகரிப்பது சாத்தியமில்லாமல் போகிறது. எனவே ஒருவர் தான் ஒரு கிரிக்கெட் வீரராக முன்னேறுகிறாரா என்பதை அறிந்துகொள்ள தரவுகளை ஒருங்கிணைக்கவேண்டியது அவசியமாகிறது,” என்றார் நிறுவனர் அபிஷேக்.

வலைதள முகவரி: CricHeroes

PregBuddy

கர்ப்பிணிப் பெண்களின் தனித்தேவைக்கேற்ற பராமரிப்பு வழங்கும் நோக்கத்துடன் செயல்படும் இந்த ஹெல்த்கேர் தளம் சுகாதார நிபுணர்களையும் மருத்துவர்களையும் அவர்களுடன் இணைக்கிறது.

PregBuddy மருத்துவமனைகளுடன் இணைந்துகொள்கிறது. மருத்துவர்களும் மருத்துவமனை நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களும் கர்ப்பிணிப் பெண்கள் இந்த தளத்தில் இணைந்துகொள்ள பரிந்துரைக்கின்றனர். இவர்களது தரவுகள் ஒரே இடத்தில் சேமிக்கப்பட்டுகிறது. 

பயனர்கள் இதை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். நோயாளிகளிடம் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதை மருத்துவருக்குத் தெரியப்படுத்துகிறது.

வலைதள முகவரி: PregBuddy