23 வயது இளம்பெண், காது கேளாத கலைஞர்களின் குரலாக மாறிய கதை

0

காதலுக்கு மொழி கிடையாது என்று சொல்வார்கள். ஸ்மிருதி நாக்பாலின் இரண்டு அக்காக்கள் காது கேளாத மாற்றுத்திறனாளிகள். ஆனால் அவர்கள் மூன்று பேரும் தங்களுக்குள் கருத்துகளை பகிர்ந்துகொள்வதற்கு இது எந்த வகையிலும் தடையாக இல்லை. மற்ற எல்லா குடும்பங்களையும் போல இவர்களும் தங்கள் கருத்துகளை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்துகொண்டனர். தனது அக்காக்களின் குரலாக இருப்பதற்காக ஸ்மிருதி, சைகை மொழியை கற்றுக் கொண்டார்.


23 வயதில் ஸ்மிருதி தற்போது அடுல்யகலா (Atulyakala) என்ற சமூக நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.,வாக இருக்கிறார். வரைகலை பங்களிப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான கூட்டணிகள் மூலம் காது கேளாத கலைஞர்களின் வாழ்வில் வளம் சேர்க்கிறது இந்த நிறுவனம். “என்னை விட 10 வயது மூத்த சகோதரிகள் இருவருடன் வளர்ந்தவள் நான். சைகை மொழியை கற்பதன் மூலமாக மட்டுமே அவர்களுடன் நான் தொடர்புகொள்ள முடியும். அந்த வகையில் அது எனது தாய்மொழியாகவே மாறிவிட்டது. எனது பெற்றோருக்கும், எனது சகோதரிகளுக்கும் இடையில் நான் ஒரு பாலமாக இருந்ததால், நான் அந்த மொழியை கற்பது எனது குடும்பத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது,” என்கிறார் ஸ்மிருதி. இந்தியாவில் பல லட்சக்கணக்கான (0.9 - 14 மில்லியன் பேர்) காதுகேளாதோர் என கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் காது கேளாதோர் எண்ணிக்கையில் 5இல் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார். எனவே இந்த குறைபாடுடன் உள்ளவர்கள் அதிக அளவு உள்ள தேசமாக இந்தியா இருக்கிறது. இவர்கள் அதிக அளவில் இருநப்பதால், இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் எக்கச்சக்கமாக இருக்கின்றன. அதில் முக்கியமானது கல்விக் குறைபாடு. அவர்கள் தொடர்புகொள்வதற்கு இரண்டு வழிகள் மட்டுமே இருக்கின்றன – எழுதுவது மற்றும் சைகை மொழி. அமைப்பு முறைகளும், கொள்கைகளும் போதுமான அளவு இல்லாததால், அவர்கள் சரியாக எழுதக் கற்றுக் கொள்வது சிரமமானதாக இருக்கிறது.

இந்த பிரச்னைகளை அவரின் அக்காக்கள் எதிர்கொண்டதை, ஸ்மிருதி கண்ணெதிரில் பார்த்திருக்கிறார். அவருக்கு 16 வயதான போது, தேசிய காது கேளாதோர் அமைப்பில் (NAD - National Association of Deaf) தன்னார்வலராக இணைந்து கொண்டார். சமூகத்திற்கான தனது பங்களிப்பை அவர் இப்படி திருப்பிச் செலுத்தினார். சில ஆண்டுகள் கழித்து, அவர் வணிக மேலாண்மை துறையில் இளங்கலை படித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு ஒரு டிவி சேனலில் இருந்து அழைப்பு வந்தது. செய்தி நிகழ்ச்சியை சைகை மொழியில் மொழிபெயர்க்க அவர்களுக்கு ஒருவர் தேவைப்பட்டார், அவர்களின் தேர்வு ஸ்மிருதியாக இருந்தது. இப்படி, கல்லூரி படித்துக் கொண்டிருக்கும்போதே, தூர்தர்ஷன் நெட்வொர்க்கின் காது கேளாதோருக்கான காலை செய்திகளுக்கு அவர் பொறுப்பாளரானார்.

ஏராளமான வாய்ப்புகளுக்கு இந்த வேலை அவருக்கு வாசலைத் திறந்துவிட்டது. காதுகேளாதோர் சமூகத்தின் பிரச்னைகளை தீர்ப்பதில் அவருக்கு உள்ள ஆர்வத்தை அறிந்துகொள்ள இது வாய்ப்பாக அமைந்தது. பட்டப்படிப்பு முடித்த ஏழு மாதங்களுக்கு பிறகு, அவர் ஒரு கதையை கேள்விப்பட்டார். அவருக்கு களத்தில் இறங்கும் உத்வேகத்தை தந்தது அந்த கதைதான். “நுண்கலைகளில் முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு மூத்த கலைஞரை நான் சந்தித்தேன். துரதிர்ஷ்டவசமாக, அவர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உடலுழைப்பு சார்ந்த வேலையை செய்து கொண்டிருந்தார். அவரின் திறமைகள் முழுமையாக வீணடிக்கப்பட்டிருந்தன. நான் வீடு திரும்பியதும், இதுகுறித்து கொஞ்சம் ஆராய ஆரம்பித்தேன். அப்போதுதான் காது கேளாத கலைஞர்களுக்கு கை கொடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று தெரிந்துகொண்டேன். எனவே எனது நண்பர் ஹர்ஷித்துடன் இணைந்து, அடுல்யகலாவை ஆரம்பிக்க முடிவெடுத்தேன். நான் என்.ஜி.ஓ.வில் சந்தித்த அந்த கலைஞர் எங்கள் பிராஜெக்டில் இணைந்துகொண்டார்,” என்கிறார் ஸ்மிருதி.

அடுல்யகலா, லாப நோக்கத்துடன் நடத்தப்படும் ஒரு சமூக நிறுவனம். காது கேளாத கலைஞர்கள் வளரவும், கற்றுக்கொள்ளவும், கௌரவமும், பெருமிதமும் நிறைந்த ஒரு வாழ்வை வாழவும், அதை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் அடுல்யகலா வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. காது கேளாத கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளை ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் விற்பனை செய்து அவர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். ஆனால் மற்ற என்ஜிஓ.,க்களிடம் இருந்து அவர்கள் தங்களை பெருமையுடன் தனித்துக் காட்டுகிறார்கள். “பொதுவாக அவர்களின் படைப்பாற்றல் குடத்திலிட்ட விளக்காக இருக்கிறது. இந்த தடையிலிருந்து வெளியில் வந்து, தங்களின் படைப்பாற்றலை பரவச் செய்வதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு பெற்றுத் தருகிறோம். அவர்களின் பெயரை முன்னிலைப்படுத்துவதன் மூலம் இதனை சாத்தியப்படுத்துகிறோம். எங்கள் பிராண்ட்டின் பெயரை பிரபலமடையச் செய்வதற்காக நாங்கள் காது கேளாத கலைஞர்களை பணியில் அமர்த்த விரும்புவதில்லை. எங்களின் பிராண்ட் அவர்களின் பெயரை பிரபலப்படுத்த உதவ வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால்தான் ஒவ்வொரு படைப்பிலும் அவர்கள் கையெழுத்திடுகிறார்கள். நாம் சொந்தமாக ஒன்றை உருவாக்குகிறோம் என்ற உணர்வை அவர்கள் பெற வேண்டும் என்று விரும்புகிறோம்” என்கிறார் ஸ்ம்ருதி.


அடுல்யகலா – டிசைன்கள் மூலம் காதுகேளாத கலைஞர்களின் வாழ்வை வளமாக்குகிறது
அடுல்யகலா – டிசைன்கள் மூலம் காதுகேளாத கலைஞர்களின் வாழ்வை வளமாக்குகிறது

அடுல்யகலா வேறு சில பிராஜெக்ட்களிலும் ஈடுபட்டுள்ளது. “முக்கியமான கூட்டுத் திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். காது கேளாத சமூகத்தினருக்கான, முதல் பாடலை உருவாக்க பிரபலமான இசைக் கலைஞர்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். இதேபோல விளக்கப்படம் தயாரிக்கவும் முயன்று வருகிறோம். காதுகேளாத கலைஞர்களின் வாழ்வில் வளம் சேர்க்க, பிரபல கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இன்னும் சில மாதங்களில் இவற்றில் சில முயற்சிகள் பதிப்பிக்கப்படும்.” என்கிறார் ஸ்மிருதி. காதுகேளாத கலைஞர்களுடன் மட்டும் தங்களின் வேலையை சுருக்கிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஒட்டுமொத்த காது கேளாத சமூகத்திற்கும் பயன்தரக் கூடிய வகையில் செயல்பட விரும்புகிறார்கள். “சைகை மொழி பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். மாற்றம் என்பது அடுத்த தலைமுறைக்கு இதுபற்றி கற்பிப்பதில் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால்தான் பல்கலைக்கழகங்களில் இதுபற்றி நிறைய கருத்தரங்குகளை நடத்துகிறோம். சைகை மொழியின் அடிப்படைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ள வசதியாக கையேடு ஒன்றையும் தயாரித்து வருகிறோம்” என்கிறார் ஸ்மிருதி.

தனது வாழ்நாள் முழுவதையும் காதுகேளாதோருடன் செலவிட்டாலும், கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. “அவர்களுடன் நீண்ட காலம் பழகி இருந்தாலும், நான் அவர்களுடன் பணியாற்றியது இல்லை. அவர்கள் என் நண்பர்கள். ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றுவோம். ஆனால் இப்போது எனது பார்வை மாறியிருக்கிறது. அவர்களிடம் எல்லையற்ற திறமைகள் கொட்டிக் கிடந்தாலும், அவர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை அவர்களுடன் பணிபுரியும்போது நான் புரிந்துகொண்டேன் என்கிறாய் ஸ்மிருதி.

மாற்றுத்திறனாளிகள் பற்றிய பொதுமக்களின் மனோபாவம் தான் இதற்கு காரணம். அவர்கள் சிறுபான்மையினர் அல்ல, இந்த உலகத்தின் பிரிக்க முடியாத அங்கத்தினர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” என்று கூறும் அவர், “முன்பை விட நான் இப்போது இன்னும் நிதானமானவளாகவும், வெறுப்புணர்ச்சி குறைந்தவளாகவும் மாறி இருக்கிறேன். தற்போது இருக்கின்ற இடைவெளியை கடக்க அவர்களுக்கு யாருடைய உதவியாவது தேவைப்படுகிறது” என்று தெரிவிக்கிறார்.

அடுல்யகலா சில மாதங்களுக்கு முன்புதான் ஆரம்பிக்கப்பட்ட மிக இளம் ஸ்டார்ட்அப் நிறுவனம். ஆனால் எதிர்காலம் பற்றிய தெளிவான பார்வை அவர்களிடம் இருக்கிறது. “முற்றிலும் காதுகேளாதவர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் சமூக நிறுவனமாக அடுல்யகலா இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதை சிறப்பான முறையில் செய்ய, பலமான பிராண்டை உருவாக்க வேண்டும். ஆனால் அது வெறும் பிராண்ட் பற்றியதாக இல்லாமல், அதன் பின்னால் உள்ள கலைஞர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும். இதுமட்டுமின்றி, நாங்கள் செய்து வரும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும், தொழில்முறைக் கலைஞர்களுடனான கூட்டணியையும் தொடர விரும்புகிறோம். தாங்கள் தனித்துவிடப்பட்டதாக இனி இந்த சமூகத்தினர் நினைக்கவே கூடாது” என ஆணித்தனமாக கூறுகிறார் ஸ்ம்ருதி.

ஸ்மிருதியின் இந்த வேலைக்கு தொடர்ந்து சிறப்பான அங்கீகாரம் கிடைத்து வருகிறது. இதுமட்டுமின்றி, இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை இந்தியாவில் உள்ள காதுகேளாதோருக்காக தேசிய தொலைக்காட்சியில் சைகை மொழியில் வழங்கும் வாய்ப்பும் ஸ்மிருதிக்கு கிடைத்தது. கடந்த 64 ஆண்டுகளில் இது போன்ற முதல் நிகழ்வு இதுதான்.

மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் இளம்தலைமுறையினருக்கு ஸ்மிருதி சொல்வது இதுதான், “உங்களின் கனவுகளை ஒருபோதும் கை விடாதீர்கள். நான் கனவு காண்பவள். கனவு காண்பதும், இதயம் சொல்வதை கேட்பதும் நம் வயதில் உள்ளவர்களுக்கு மிகவும் முக்கியமானது. அது ஒன்றுதான் நம்மை முன்னோக்கி நகர்த்திச் செல்லும். இந்த சமூகத்திற்கு எதையாவது திருப்பித் தருவது நமது கடமை. இது உங்களால் நினைத்துப் பார்க்க முடியாத மகிழ்ச்சியை உங்களுக்குத் தரும். இதை செய்வதற்கு நீங்கள் ஒரு சமூக தொழில்முனைவோராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மக்களுக்கும், சமூகத்திற்கும் நீங்கள் தினமும் ஏதாவது சிறிய வேலையை செய்தாலே போதுமானது.”

அடுல்யகலா பற்றிய விவரங்களுக்கு: https://www.facebook.com/atulyakala?fref=ts