என்னுடைய முதல் தோல்வியிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள்!

14

இரண்டு வருட செயல்பாட்டிற்கு பிறகு, சமீபத்தில் எனது முதல் சுயதொழில் நிறுவனத்தை மூடிவிட முடிவு செய்தேன். எங்கே, என்ன தவறு நடந்தது என்பதை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுகொள்வது அதைவிட முக்கியம். அப்படி நான் கற்றுக்கொண்ட பாடங்களின் சுருக்கம் இதோ:

1. தயாரிப்பில் கவனம் செலுத்துங்கள்

விற்பனையும், நிதி மேலாண்மையும்தான் என்னுடைய பிரதான வேலைகளாக இருந்தன. என்னுடையது டெக்னாலஜி தொடர்பான நிறுவனமாய் இருந்தாலும், என்னால் வெளியிலிருந்து தேவையானவற்றை வாங்கியிருக்க முடியும். உங்களை போன்றே ஆர்வமுடைய ஒரு முதன்மை தொழில்நுட்ப அதிகாரியை உங்களோடு வைத்துகொள்வது நிறையவே பலனளிக்கும். அதுவும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கு இதில் நிறையவே லாபம்.

2. ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ளுங்கள்

உங்களுக்கு போதுமான நிதி கிடைத்தால் நீங்கள் விரைவாக செயல்பட தொடங்குவீர்கள். நீங்கள் முதலில் வேலைக்கு எடுக்கும் ஊழியர்கள் முக்கியமானவர்கள். உங்கள் நிறுவனம் பற்றிய புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். காரணம், நாளை உங்கள் முயற்சி தோற்றால் அவர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள்.

3. பண விஷயத்தில் அதிக நேரம் செலவழிக்காதீர்கள்

பணம் முக்கியம்தான். ஆனால் எந்நேரமும் நீங்கள் முதலீட்டைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால் உங்கள் தயாரிப்பு வீணாய்ப் போகும். நான் நிதியை பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததால் என் தயாரிப்பு பாழாய் போவதை தடுக்க முடியவில்லை.

4. திறமையானவர்களை வேலைக்கு அமர்த்துங்கள்

நண்பர்கள், உறவினர்களை பழக்கத்திற்காக வேலைக்கு எடுக்காமல், திறமையானவர்களை வேலைக்கு எடுங்கள். திறமை தவிர்த்து உங்களுக்கு நம்பிக்கையானவர்களையும் வேலைக்கு எடுங்கள். சமயங்களில் திறமையைவிட நம்பிக்கையே கைகொடுக்கும்.

5. சிக்கனமாய் இருங்கள்

நிதி குவிந்தவுடன் கண்டபடி செலவு செய்யும் நிறுவங்களை நான் பார்த்திருக்கிறேன். வேலைக்கு ஆட்கள் எடுப்பது, தொழிநுட்ப ரீதியாக வலுப்படுத்துவது ஆகியவற்றுக்கு செலவு செய்வது நியாயம்தான். ஆனால், வீண் ஆடம்பர செலவுகள் உங்கள் நிறுவனத்தை பாதிக்கும்.

6. கொள்கைகளை தளர்த்த தயாராய் இருங்கள்

சுயதொழிலின் முக்கிய பலமே உங்களால் நீங்கள் விரும்பியவற்றை செய்யமுடியும் என்பதுதான். அதனால், கொண்ட கொள்கைகளையே பிடித்துத் தொங்காமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுங்கள்.

7. எல்லாவற்றையும் நிறுத்தத் தயாராய் இருங்கள்

நிறைய பேர் தங்களின் நிறுவனங்களோடு உணர்ச்சிவசப்பட்டு நெருங்கிவிடுவார்கள். அது தவறு. உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது எனத் தோன்றினால் தயங்காமல் நிறுவனத்தை மூடிவிடுங்கள். அது பெரிய புதைகுழியில் நீங்கள் விழுவதை தடுக்கும்.

ஆக்கம்: ஆதித்ய மேத்தா | தமிழில்: சமரன் சேரமான்