ரூ.1.2 கோடி ஆண்டு வருவாயுடன் கூகுளில் இணைய தேர்வாகி உள்ள இந்திய மாணவன்!

கூகுளின் செயற்கை நுண்ணறிவுக் குழுவில் இணைகிறார் ஆதித்யா. 

1

கூகுளின் செயற்கை நுண்ணறிவுக் குழுவில் இணைய பெங்களூரு மாணவரான ஆதித்யா பாலிவால் தேர்வாகியுள்ளார். உலகளவில் தேர்வெழுதிய 6,000 மாணவர்களில் ஆதித்யாவும் ஒருவர். தற்போது ஆண்டு வருவாயாக 1.2 கோடி ரூபாய் நிர்ணயித்து கூகுள் இவரை பணியிலமர்த்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஆதித்யா, பெங்களூரு சர்வதேச தகவல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIITB) ஒருங்கிணைந்த எம்.டெக் மாணவர். ’நியூஸ் 18’-உடனான உரையாடலில் அவர் குறிப்பிடுகையில்,

கூகுளில் இருந்து இந்த பணி வாய்ப்பு கிடைத்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என்னுடைய பணி காலத்தில் நான் புதிய விஷயங்கள் பலவற்றை கற்றறிவேன்.

இந்த ஓராண்டு கால ப்ராஜெக்ட் முழுவதும் ’ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் கூகுள் ரெசிடென்சி ப்ரோக்ராம்’ உடன் ஆதித்யா பணிபுரிவார். முழு நேர பணி வாய்ப்பை அவர் தேர்ந்தெடுக்கமுடியும் என ’பிசினஸ் டுடே’ தெரிவிக்கிறது.

ஆதித்யாவிற்கு கணிணி மொழி குறியீடுகளில் ஆர்வம் உள்ளது. 2017-ம் ஆண்டு மற்றும் 2018-ம் ஆண்டின் ’ஏசிஎம் சர்வதேச காலேஜியேட் ப்ரோக்ராமிங் கண்டெஸ்ட்’ (ICPC) இறுதி பட்டியலில் இடம்பெற்றவர்களில் இவரும் ஒருவர். ஐந்தாண்டு கால ஒருங்கிணைந்த எம்.டெக் இரட்டை பட்டப்படிப்பு திட்டத்திற்காக 2013-ம் ஆண்டு ஐஐஐடி-பி-யில் சேர்ந்தார். ’தி நியூஸ் மினிட்’ உடனான உரையாடலில் அவர் செயற்கை நுண்ணறிவில் ஏன் ஆர்வம் ஏற்பட்டது என்பது குறித்து பகிர்ந்துகொண்டார்.

செயற்கை நுண்ணறிவு அறிமுகமான பிறகு இந்தப் பிரிவு அபார வளர்ச்சியடைந்து வருவதை உணர்ந்தேன். ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி சிறிது முயற்சி எடுத்தால் எதிர்காலத்தில் அதிகம் சாதிக்கமுடியும் என்கிற நம்பிக்கை பிறந்தது. 

பணி கிடைப்பது குறித்து நான் அதிகம் கவலை கொள்ளவில்லை. வேலைவாய்ப்பிற்கான தேர்வுகளில் மீண்டும் கவனம் செலுத்த படிப்பின் இறுதியில் ஓராண்டு கிடைக்கும் என்பதை நான் அறிவேன். எனவே அதிகம் கற்கவேண்டும். சுவாரஸ்யமான நபர்களை சந்திக்கவேண்டும். புதிய சிந்தனைகளை ஆராயவேண்டும். இவற்றிலேயே முக்கிய கவனம் செலுத்தினேன். புதிய விஷயங்களில் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டு சிலவற்றில் சிறப்பான திறனைப் பெறவேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டுள்ளேன்.

மேலும் இதே பிரிவில் பணியாற்றும் அதிகபட்ச மக்களை சந்திப்பதற்காக இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாக ஆதித்யா குறிப்பிட்டார்.

கட்டுரை : THINK CHANGE INDIA