ஊரகப் பெண்களின் சுகாதாரத்தை முன்னிலைப் படுத்தி உருவான சென்னை நிறுவனம்!

1

பெண்கள் சுகாதாரம் இன்று அதிகம் பேசப்படும் ஒரு முக்கிய கரு. இதைப் பற்றிய விழிப்புணர்வை அவ்வப்போது ஏற்படுத்திக் கொண்டு இருந்தாலும், இன்றும் சில கிராமங்களில் பெண்கள் சுகாதாரத்திற்கான போதிய விழிப்புணர்வு அவர்களை எட்டவில்லை. ஏன், மாதிவிடாய் நேரத்தில் முறையான சுகாதாரத்தை மேற்கொள்கிறார்களா என்பதுக் கூட கேள்வி குறி தான்.

சுத்தத்தின் முக்கியத்துவத்தை அறிந்து, பெண்கள் சுகாதாரத்திற்கான தனித்துவமான தயாரிப்புகளை தயாரிக்கிறது சென்னை Ayzh நிறுவனம். இந்த நிறுவனம் பெண்கள் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை முன்னிலைப் படுத்தி அவர்களுக்குத் தேவையான தரமான பொருட்களை மலிவான விலையில் விற்கின்றனர்.

பிறந்த குழந்தை, கர்பிணி பெண்கள், தாய், மாதவிடாய், வயது பெண்கள் என தனித்தனி பிரிவுகளில் சோப், பிளேடு, பஞ்சு, சானிட்டரி நாப்கின், துண்டு, பொம்மைகள், கை சுத்திகரிப்பான், மெத்தை விரிப்பு என பல பொருட்களை விற்கின்றனர்.

“இந்தியாவில் பிறந்து வளர்ந்த நான் பெண்கள் சுத்தமின்மை மற்றும் ஆரோக்கியத்தால் பாதிக்கப்படுவதை கண்டுள்ளேன். ஒரு பெண் தொழில்முனைவராய் இது போன்ற வெளிப்படாத பிரச்சனைகளை சீர் செய்யும் கடமை எனக்கு உண்டு,”

என பேசுகிறார் இந்நிறுவனத்தின் நிறுவனர் ஜுபைதா பாய்.

நிறுவனர் ஜுபைதா பாய்.
நிறுவனர் ஜுபைதா பாய்.

Ayzh நிறுவனத்தின் தொடக்கம்:

பொறியியல் மற்றும் எம்.பி.ஏ படிப்பை முடித்துள்ளார் ஜுபைதா பாய். தொழில்நுட்ப துறையில் நான்கு வருடம் இந்தியாவில் பணி புரிந்த பின் பல சிறந்த கண்டுபிடிப்புகள், முதல் நிலையை கடப்பத்தில்லை என்பதை அறிந்தார். இதைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள அமெரிக்காவில் எம்.பி.ஏ படிப்பை மேற்கொண்டார்.

இவருக்கும் இவரது கணவருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை இருந்தது, அதனால் பின் தங்கிய பெண்களுக்கு உதவும் வகையில் ஏதேனும் தயாரிக்கும் நோக்கத்தோடு தன் சக நண்பருடன் இணைந்து Ayzh 2010-ல் நிறுவினார்.

“ஒரு ஆண்டிற்கு 5 மில்லியன் மேலான தாய்மார்களும், கை குழந்தைகளும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகின்றனர். எங்கள் ஆய்வின் படி பெண்களுக்கு சுத்தத்தை பற்றியும் இனப்பெருக்க சுகாதார வாழ்க்கை சுழற்சி பற்றியும் விழிப்புணர்வு இல்லை என்பதை புரிந்துக்கொண்டோம்.”

இதன் பின், ’கன்யா’ என்ற பெயரில் சானிடரி பேட் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் தயாரிப்புகளை வெளியிட்டனர். அதாவது இரசாயனம் இல்லாத மெல்லிய சானிட்டரி நாப்கின்கள். அத்துடன், சுற்றுப்புறத்தை பாழாக்காத வகையில் பயன்படுத்திய சானிட்டரி நாப்கினை எப்படி அப்புறப் படுத்த வேண்டும் எனும் விபரத்தையும் அளித்தனர்.

உந்துதலாக இருந்த நிகழ்வு:

“Ayzh தயாரிப்புகளின் பயன்பாட்டை அறிய சில கிராமங்களை பார்வையிட சென்ற பொது, அங்கு மருத்துவச்சி பிரசவத்தின் பொது தொப்புள் கொடியை அறுக்க, அறுவடை செய்யும் கத்தியை பயன்படுத்தினார்கள்...”

இந்த சம்பவத்திற்கு பிறகு ’ஜன்மா’ என்ற பெயரில் Underpad, அறுவை சிகிச்சை கத்தி, தண்டு கிளாம்ப், சோப், கையுறைகள், குழந்தையை துடைக்கும் துணி கொண்ட சுத்தமான மருத்துவ கிட்டை அறிமுகப்படுத்தினர் இக்குழுவினர்.

“சிறந்த மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொண்ட எனக்கே infection ஏற்பட்டது. இவர்களுக்கு என்னை விட அதிக பாதிப்பு ஏற்படக் கூடும். எனவே அவர்களால் வாங்கக் கூடிய விலையில் இதை அறிமுகப்டுத்தினோம்,” என்கிறார்.

எதிர்த்து வந்த சவால்கள்:

ஏழை மக்களையும், எளிமையான பகுதிகளை அறிந்து அவர்களை சென்று அடைவதே இந்த பயணத்தில் நாங்கள் சந்தித்த சவாலான பயணம் என தொடக்கத்தில் தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை விளக்குகிறார் ஜுபைதா பாய். மேலும் ஒரே மாதிரியான எண்ண ஓட்டத்தில் இருக்கும் சமூக அக்கறைக் கொண்ட முதலீட்டாளர்களை தொடர்புகொள்ளவும் சற்று சிரமமாக இருந்தது.

“தற்போது ஜிஎஸ்டி-யால் சானிட்டரி நாப்க்கினிற்கு 12% வரி விதிக்கப்பட்டதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இது பொருளாதார ரீதியாக பின் தங்கிய பெண்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது,”

என தன் கவலையை வெளிப்படுத்தினார் ஜுபைதா.

Ayzhன் வளர்ச்சி:

2010-ல், மூன்று நிறுவனர்களுடன் தொடங்கிய நிறுவனம் இன்று 21 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் பெண்களின் ஆரோக்கியத்தில் மட்டும் பங்கு கொள்ளாமல் அவர்கள் வாழ்வாதாரத்திலும் அக்கறைக் கொண்டுள்ளது.

“தயாரிப்புகளை பேக் செய்யவும், அடுக்கவும் அங்குள்ள கிராமப்புற பெண்களையே நியமிக்கிறோம். இதன் மூலம் பொருளாதார வாய்ப்பு அவர்களுக்கு அமைகிறது,” என்கிறார்.

தங்கள் சொந்த நிதியின் மூலமே Ayzh-வை தொடங்கினர். தொடக்கத்தில் ஒரு சில சறுக்கல்களை கண்டாலும் அதன் பின் பல முதலீட்டாளர்கள் Ayzh பக்கம் திரும்பியுள்ளனர். அதாவது எம்ஐடி டி-லேப், கிராண்ட் சாலேஞ் கனடா, ideo.org, ஃபைசர் ஃபவுண்டேஷன் போன்ற பல முதலீட்டாளர்கள் Ayzh உடன் இணைந்துள்ளனர்.

“2030-க்குள் 10 கோடி பெண்களுக்கு உதவுவதே எங்கள் இலக்காக உள்ளது. இதை நடைமுறைப்படுத்த அடுத்த இரண்டு ஆண்டில் அடித்தளம் போட இருக்கிறோம். மேலும் இந்தியா முழுவதும் மற்றும் ஆப்ரிக்காவிற்கு Ayzh எடுத்துச் செல்ல இருக்கிறோம்,” என முடிக்கிறார் ஜுபைதா பாய்

இது போன்ற தன்னிகரற்ற செயலால், பெண் சுகாதாரத்தில் அதீத அக்கரை கொண்டதாலும், நிலையான வணிகத்தை நடத்துவதாலும் ஜுபைதா பாய் TED, எகோங் கிரீன், USAID, இன்டிஅஃப்ரிகா, அசோகா மற்றும் உலக பொருளாதார மன்றம் போன்ற பல மேடைகளில் கவுரவிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

Stories by Mahmoodha Nowshin