சுனாமியில் மீண்டு உலகின் நெ.4 சைக்கிள் வீராங்கனை ஆன சிறுமி!

0

அந்தமானில் 2004-ல் சுனாமி தாக்கியபோது டெபோரா ஹெரால்டுக்கு வயது 9. தன்னைக் காப்பாற்ற மீட்புக் குழு வரும் வரை ஒரு மரத்தில் தன்னந்தனியாக ஒரு வார காலம் நம்பிக்கையுடன் போராடியவர். ஒரு கொடூர அனுபவத்தில் இருந்து மீண்ட அந்தப் பழங்குடிச் சிறுமி பின்னர் தனக்கான ஆறுதலாக சைக்கிள் பந்தயத்தைத் தேர்ந்தெடுத்தார். தன் ஈடுபாட்டின் விளைவாக விரைவிலேயே தேசிய சாதனைகளுக்குச் சொந்தக்காரரும் ஆனார்.

இருபது வயது இந்திய சைக்கிள் பந்தய வீராங்கனையான இவர், யூ.சி.ஐ. (யூனியன் சைக்கிளிஸ்ட் இன்டர்நேஷனல்) தனிநபர் உலகத் தரவரிசையில் நான்காம் இடம் வகித்து நாட்டுக்கு அரிய சிறப்பையும் பெருமையையும் சேர்த்துள்ளார். டெபோரா தனது ஜீ நியூஸ் பேட்டியில் கூறும்போது, "உலகத் தரவரிசையில் இந்த இடத்தை அடைந்ததில் மகிழ்ச்சி. இந்திய சைக்கிளிஸ்ட் ஒருவர் இந்த அளவில் சிறப்பிடம் பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்பது பெருமைப்பட வைக்கிறது.

இத்துடன் நிற்காமல், உலகின் நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பதற்கு தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். என்னை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் எங்கள் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெறுவதற்காக இப்போது தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்" என்கிறார் உத்வேகத்துடன்.

புதுடெல்லியில் நடந்த டிராக் ஆசியா கோப்பை போட்டிகளுக்கு முன்பு தரவரிசையில் இவர் 10-வது இடத்தில் இருந்தார். அந்தப் போட்டித் தொடரில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றியதன் துணையுடன் தரவரிசையில் வெகுவாக முன்னேற்றம் கண்டார். உலகத் தரவரிசையில் இந்திய அணி 13-வது இடத்துக்கு முன்னேறியதற்கும் இவரது பங்களிப்பு மகத்தானது.

"அதற்குத்தானே நாம் ஆடுகளத்தில் போராடுகிறோம். அணியில் இப்போது அங்கம் வகிக்கும் இடத்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உத்வேகம் குறையாமல் அணியை முன்னெடுத்துச் செல்வோம்" என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்கம் - திங்க் சேஞ்ச் இந்தியா | தமிழில்: கீட்சவன்