காந்திய சிந்தனை தேர்வில் 92.5% பெற்ற பிரபல தாதா!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று நாக்பூர் சிறையில் இருக்கும் டான் அருண் காவலி, காந்திய சிந்தனை தேர்வில் அபார தேர்ச்சி!

0

நாக்பூர் சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவிக்கும் பிரபல தாதா அருண் காவலி காந்திய சிந்தனை தேர்வில் 92.5 சதவீதம் பெற்று அபார தேர்ச்சி அடைந்துள்ளார்.

2012ல் சிவசேனா நகராட்சி கவுன்சிலர் கம்லகர் ஜாம்சந்தேகாரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றார் அருண். தற்போது நாக்பூர் சிறையில் இருக்கும் இவர் கடந்த வருடம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சாயோக் அறகட்டளை, சர்வோதய ஆசிரமம் மற்றும் மும்பை சர்வோதய அமைப்பு நடத்திய காந்திய சிந்தனை தேர்வில் 80 க்கு 74 மதிப்பெண்கள் பெற்று முன்னிலை வகித்துள்ளார்.

தேர்வில் கலந்து கொள்வது கட்டாயமாக இல்லாதபோதிலும் 160 குற்றவாளிகள் சுய விருப்பத்தோடு கலந்துக்கொண்டுள்ளனர்.

“முதலில் அருண் காவலி இந்த தேர்வில் பங்கேற்கவில்லை தேர்வுக்கான புத்தகங்களை பார்த்தப் பிறகு தான் பங்கேற்க முன் வந்தார். தானே முன் வந்து காந்திய கொள்கைகளை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தது பெருமிதமாக இருந்தது,”

என்றனர் தேர்வு அமைப்பாளர்கள் IANSக்கு அளித்த பேட்டியில். எல்லா வருடமும் ஜனவரி 30குள் தேர்வு முடிவுகளை வெளியிட்டு விடுவோம் சில தடுக்க முடியாத சூழ்நிலைகளால் இந்தாண்டு தாமதம் ஆகியது என தெரிவித்தனர். 

தேர்வுக்கு ஒரு மாதம் முன்பே அதற்கான புத்தகம் குற்றவாளிகளிடம் கொடுக்கப்படும். இதன் மூலம் காந்தியின் கொள்கைகள், நன்னெறிகள் பற்றி குற்றவாளிகள் தெரிந்துகொண்டு அதனை வாழ்க்கையில் பின்பற்றுவர் என நம்புகிறோம் என்கின்றனர்.

முன்னிலை வகுத்த தேர்ச்சியாளர்களுக்கு காதி ஆடை, காந்தி இலக்கியம், காந்திய கொள்கை புத்தகங்கள், பேனா மற்றும் நாட்குறிப்புகள் பரிசாக வழங்கப்பட்டது.

பிரபலமாக ’டாடி’ என அழைக்கப்படும் 64 வயதான அருண் காவலி 1970களில் இருந்தே மும்பையின் மிகப் பெரிய ரௌடியாக இருந்தார். 1997ல் அகில் பாரதிய சேன என தனக்கான ஒரு கட்சியை துவங்கி மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் 2007ல் ஷிவசேனா தலைவரை கொன்ற வழக்கில் 2012ல் ஆயுள் தண்டனை பெற்றார்.

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் |தகவல் உதவி: நியூஸ் 18

Related Stories

Stories by YS TEAM TAMIL