பீகாரில் உள்ள தார்னை, இந்தியாவின் முதல் முழுமையான சூரிய ஒளி மின்சாரக் கிராமம் !

0

தார்னை. 2 ஆயிரத்து 400 பேர் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு சிறிய கிராமம். பீகாரின் ஜெகன்னாபாத் மாவட்டத்தில் உள்ள புத்தகயா அருகில் உள்ளது. அதற்கு மின்சாரம் இல்லாமல் இருந்தது. ஒரு சில வருடங்களுக்கு முன்பு, இந்தத் தலைவிதியை மாற்ற வேண்டும் என்று கிராமத்து மக்கள் முடிவு செய்தனர். க்ரீன்பீஸ் உதவியோடு சோலார் பவர் மைக்ரோ கிரிட்டை கிராமத்தில் நிறுவினர். இப்போது இங்குள்ள 450 வீடுகளுக்கும் 50 வியாபர ஸ்தலங்களுக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. இதற்கு ஆன செலவு ரூ.3 கோடி. இதன் மூலம் இந்தியாவின் முதல் முழுமையான சூரிய ஒளி மின்சாரப் பயன்பாட்டைக் கொண்ட கிராமம் என்ற பெயரைப் பெற்றது தார்னை.

“இந்தியா வளர்ந்து கொண்டிருக்கும் போது நாங்கள் கடந்த 30 வருடங்களாக மின்சாரம் இல்லாமல் முடங்கிக் கிடந்தோம். மின்சாரத்தை எப்படிக் கொண்டு வருவது என புத்தகங்களில் தேடிக் கொண்டிருந்தோம்” என நினைவு கூர்கிறார் இந்த ஊரைச் சேர்ந்த கமல் கிஷோர். “மண்ணெண்ணெய் விளக்குகளோடும் அதிக செலவு பிடிக்கும் டீசல் ஜெனரேட்டர்களோடும் போராடிக் கொண்டிருந்தோம். இப்போது தார்னை கிராமம் புதுமையில் தலைவன் என்று எங்களால் பெருமையோடு சொல்லிக் கொள்ள முடியும். மின் தேவையில் தன்னிறைவு பெற்ற கிராமம் என்று எங்கள் அடையாளத்தை நிறுவியிருக்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்கான பந்தயத்தில் எங்களாலும் இப்போது போட்டி போட முடியும்” என்கிறார் அவர்.

தார்னை லைவ் என்ற இணைய தளம் ஒன்றையும் தார்னை கிராமம் நடத்துகிறது. இதன் மூலம் பிற கிராமங்களுக்கும் சூரிய ஒளி மின்சாரத்தை பெறுவதற்கான விழிப்புணர்வை வழங்குகிறது. “மிகப்பெரிய மின் திட்டங்களை மக்கள் தடுக்கின்றனர் என அரசாங்கம் ஒரு புறம் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கும் போது, இங்கே ஒரு கிராமம் தனக்குரிய மின் தேவையை மாற்று திட்டத்தின் மூலம் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது” என்கிறார் கிரீன்பீஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சமித் அயிக். “நிலக்கரி அல்லது அணு மின் நிலையங்கள் நாட்டின் தார்னை கிராமங்களை சென்றடைய முடியாது. புவி வெப்ப மயமாகும் பிரச்சனைக்கு தீர்வுகாணவோ, இது போன்ற விஷயங்களில் இந்தியாவின் பொறுப்பைப் பூர்த்தி செய்வதோ அந்த மின்திட்டங்களால் முடியாது” என்கிறார் அவர்.

தார்னை, மின்சக்தியில் தன்னிறைவு பெற்ற கிராமமானதற்குப் பிறகு இங்குள்ள மாணவ மாணவிகளால் இரவிலும் படிக்க முடிகிறது. இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர பெண்கள் அச்சப்படுவதில்லை. சிறு தொழில்கள் செழித்து வளர்கின்றன. ஒரு சிறந்த ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நடைபோடுகிறது தார்னை.

ஆக்கம் : திங்க் சேஞ்ச் இண்டியா | தமிழில் : சிவா தமிழ்ச் செல்வா