இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்: 104 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி– சி 37! 

0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) துருவப் பகுதிக்கான செயற்கைக் கோள் செலுத்தும் ராக்கெட் தனது 39-வது பயணத்தில் (பி.எஸ்.எல்.வி –சி 37) 714 கிலோ எடையுள்ள கார்ட்டோசாட்-2 வரிசையின் செயற்கைக் கோளையும், அதனுடன் மேலும் 103 செயற்கைக்கோள்களையும் இன்று காலை (பிப்ரவரி 15, 2017) ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையின் அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இது பி.எஸ்.எல்.வி .வரிசையில் தொடர்ந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட 38 வது ராக்கெட் ஆகும். பி.எஸ்.எல்.வி –சி 37 ராக்கெட்டில் இருந்த 104 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 1378 கிலோகிராம்கள் ஆகும். ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுவது இதுவே முதல்முறை. இஸ்ரோ விஞ்ஞானிகள் நிகழ்த்தியது உலக சாதனையாகும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சாதனையில் இதுமிகப்பெரிய மைல்கல் ஆகும்.

பட உதவி: ISRO
பட உதவி: ISRO

ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி இந்திய நேரப்படி காலை 9.28 நிமிடத்திற்கு முதலாவது செலுத்து மேடையிலிருந்து பி.எஸ்.எல்.வி –சி 37 ராக்கெட் விண்ணில் எழும்பியது. 16 நிமிடம் 48 நொடிகள் விண்ணில் பறந்தபிறகு பூமத்திய ரேகையிலிருந்து 97.46 டிகிரி சாய்வு கோணத்தில் 506 கிலோமீட்டர் உயரத்தில் இருந்த துருவ-சூரியன் ஒன்றிணைவு வளையத்தினை அது எட்டிப் பிடித்தது. அதைத் தொடர்ந்த 12 நிமிடங்களில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் நான்காவது கட்டத்தில், அதிலிருந்த 104 விண்கலங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சில விநாடிகள் இடைவெளியில் பிரிந்து விண்ணில் சென்றன. கார்ட்டோசாட் -2 வரிசையைச் சேர்ந்த செயற்கைக் கோள், அதைத் தொடர்ந்து இன்சாட்-1 மற்றும் இன்சாட்-2 ஆகியவை வரிசையாக விண்ணில் சுற்றிவரத் துவங்கின. பி.எஸ்.எல்.வி. யின் மூலமாக இதுவரை மொத்தம் 46 விண்கலங்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

பி.எஸ்.எல்.வி. விண்கலத்திலிருந்து பிரிந்த பிறகு ஏற்கனவே திட்டமிட்டபடி கார்ட்டோசாட்- 2 வரிசையைச் சேர்ந்த விண்கலத்தின் சூரியனை நோக்கிய இரண்டு கரங்களும் தானாகவே இயங்கத் தொடங்கின. அதன் பிறகு பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் டெலிமெட்ரி (தொலைதூரத் தொடர்பு), டிராக்கிங் (பின் தொடர்வது) மற்றும் கமாண்ட் நெட்வொர்க் (ஆணையிடும் ஏற்பாடு) இந்த விண்கலத்தினை தனது ஆளுகைக்குள் எடுத்துக் கொண்டது. வரும்நாட்களில் இந்த ராக்கெட் அதன் இறுதி செயல்பாட்டு ஒழுங்கமைவிற்குக் கொண்டு வரப்படும். அதன் பிறகு அதிலுள்ள கருப்பு-வெள்ளை மற்றும் வண்ண கேமராக்கள் தொலைதூரத்திலிருந்து படமெடுக்கும் தனது சேவைகளைத் துவங்கும்.

பி.எஸ்.எல்.வி. –சி 37 தன்னோடு எடுத்துச் சென்ற 103 விண்கலங்களில் 8.4 கிலோ எடை கொண்ட இஸ்ரோ நானோ ராக்கெட் -1 (இன்சாட் -1), 9.7 கிலோ எடை கொண்ட இன்சாட்-2 ஆகியவை இந்தியாவிலிருந்து ஏவப்படும் விண்கலங்களின் தொழில்நுட்பத்திறனை வெளிப்படுத்துவதாக அமைந்தவை.

மீதமுள்ள 101 விண்கலங்களும் இஸ்ரோவின் சர்வதேச வாடிக்கையாளர்களின் விண்கலங்கள் ஆகும். இதில் முறையே அமெரிக்கா 96, நெதர்லாந்து 1, சுவிட்சர்லாந்து 1, இஸ்ரேல் 1, கஜகிஸ்தான் 1, ஐக்கிய அரபுக் எமிரேட்டுகள் 1 ஆகிய நாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களும் அடங்கும். கார்ட்டோசாட் தவிர மற்ற செயற்கைக் கோள்கள் தலா 1.1 கிலோ முதல் 4.3 கிலோ வரையில் அமைந்திருந்தன.

இஸ்ரோவின் இன்றைய வெற்றி இந்தியாவின் மிகச் சிறப்பாகச் செயல்படும் செலுத்து கலமான பி.எஸ்.எல்.வி. மூலம் இதுவரை விண்ணில் செலுத்தப்பட்ட வாடிக்கையாளர்களின் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை மொத்தம் 180 ஆக உயர்ந்துள்ளது.

பிரதமர் வாழ்த்து

பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கும் கார்ட்டோசாட் செயற்கைகோளுடன் 103 நானோ செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதற்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை (இஸ்ரோ) பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டினார்.

பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட் மூலம் கார்ட்டோசாட் செயற்கைகோளுடன் 103 நானோ செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோ விற்கு எனது வாழ்த்துகள். இஸ்ரோவின் இந்த முக்கிய நிகழ்வு நமது விண்வெளி துறைக்கும் நாட்டிற்கும் மற்றுமொரு பெருமை வாய்ந்த தருணத்தை அளித்துள்ளது, என்றார்.