விஷனில் தெளிவு: இந்தியாவின் முதல் ஐஃஎப்எஸ் அதிகாரி ஆன 100% பார்வையற்ற பெனோ-வின் ஊக்கமிகு கதை! 

1

தளராத முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் இந்தியாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறளானி ஐஃஎப்எஸ் அதிகாரி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பெனோ ஷெபைன்.

1990-ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி சென்னையில் பிறந்தவர் பெனோ. இவரின் தந்தை லூக் ஆண்டனி சார்லஸ், ரயில்வே ஊழியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். தாயார் மேரி பத்மஜா இல்லத்தரசி.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில்தான் தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார் பெனோ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 464 மதிப்பெண் பெற்று, பார்வையற்ற மாணவர் பிரிவில் மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்த பெனோ, பிளஸ்-2 தேர்வில் 1,075 மதிப்பெண் வாங்கி மாநில அளவில் சிறப்பிடம் பெற்றார்.

பள்ளியில் படிக்கும்போதே ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற விதை பெனோவின் மனதிற்குள் விழுந்து விட்டது. அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வசதியாக கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்துள்ளார். தேர்வுக்கான தயாரிப்புகள் ஒருபுறம் இருக்க, இளநிலையைத் தொடர்ந்து முதுநிலையாக எம்.ஏ. படித்து முடித்தார்.

ஒருவேளை ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறாமல் போனால், மாற்று ஏற்பாடாக ஆசிரியர் பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்பது அவரது திட்டம். ஆனால், இடையில் அவருக்கு வங்கிப் பணி கிடைத்தது. இதனால் வேலை பார்த்துக் கொண்டே தனது தேர்வுகளுக்கு அவர் படித்தார்.

“ஐஏஎஸ் தேர்வு என்றால் தினமும் 15 மணி நேரம், 20 மணி நேரம் படிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. நான் தினமும் 2 அல்லது 3 மணி நேரம் படிப்பேன். எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல, படிக்க வேண்டிய பாடங்களை எப்படி புரிந்து படிக்கிறோம் என்பதுதான் முக்கியம்,”

என மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார் பெனோ. நல்ல சம்பளத்துடன் வங்கிப் பணியில் இருந்தபோதும், ஐஏஎஸ் தேர்வுக்கு தயார் செய்வதில் தொடர்ந்து மும்முரம் காட்டி வந்துள்ளார் பெனோ. தேர்வுக்கான பாட புத்தகங்கள் பிரெய்லி இல்லை என்பதால், பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்கள் சொல்வதை பிரெய்லி முறையில் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு படித்துள்ளார்.

பெனோவின் வெற்றிக்கு அவரது பெற்றோர், உறவினர், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் உறுதுணையாக இருந்துள்ளனர். வீட்டில் பாடப்புத்தகங்களை, செய்தித்தாள்களைப் படித்துக் காட்டி பெனோவிற்கு அவரது அம்மா உதவியுள்ளார்.

பெனோ, பார்வையற்றோருக்காக பிரத்யேமாக உருவாக்கப்பட்ட Job Access With Speech (JAWS) என்ற சாப்ட்வேரையும் பயன்படுத்தி கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் உள்ளவற்றை படிக்கும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார். மேலும் தமிழ், ஆங்கில நூல்களை ஸ்கேன் செய்யவும் இந்த சாப்ட்வேர் மூலம் கற்றுக் கொண்டு தனது திறமையை வளர்த்து வந்துள்ளார். மேலும் ஸ்மார்ட் போனையும் பயன்படுத்த இந்த சாப்ட்வேர் மூலம் அவர் கற்றுக் கொண்டார்.

“நாம் படித்ததை நன்கு யோசித்து அசை போடவேண்டும். ஒவ்வொரு தகவலையும் மற்றவற்றுடன் தொடர்புப்படுத்தி படிக்க வேண்டும். தேர்வு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு படிப்பில் மும்முரமாக இறங்கிவிடுவேன். அப்போது இரவு, பகல் என்று பார்க்கமாட்டேன்.” 

முதல் முயற்சியாக கடந்த 2012-ல் ஐஏஎஸ் தேர்வு எழுதினார். ஆனால், அப்போது முதன்மைத் தேர்வில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், அந்தத் தோல்வியால் மனம் தளரவில்லை அவர். மீண்டும் அவர் தேர்வெழுதினார். அகில இந்திய அளவில் 343-வது ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்தார். ஆனால் அவரது துறைக்கான முடிவு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனாலும், நம்பிக்கையுடன் பெனோ காத்திருந்தார்.

அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. ஐஃஎப்எஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார் பெனோ. அதிலும் 100 சதவீதம் பார்வையற்ற முதல் பெண் ஐஃஎப்எஸ் அதிகாரி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 69 ஆண்டு கால மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வரலாற்றில் முழுமையாக பார்வையற்ற ஒருவர் அதிகாரியாக முதன் முறையாக பணியில் அமர்ந்ததும் பெனோ தான்.

‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’.. ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும்’ என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல; சத்தியங்கள். 

அதைச் செயல்படுத்த உழைக்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்ற கனவு காண வேண்டும். அந்தக் கனவு நனவாக வேண்டுமானால், தன்னம்பிக்கையுடன் விடா முயற்சி அவசியம். அதுதான் தடைகளைத் தகர்த்தெறியும் ஆயுதம்,” இது தான் சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் பெனோ கூறும் அறிவுரை.

சமீபத்தில் டெல்லியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 112 பெண் சாதனையாளர்களில் பெனோவும் ஒருவர். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்-ஆல் இந்த சாதனைப் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

Stories by jayachitra