ஸ்கூல் அட்மிஷன் தேதியை பெற்றோர்கள் மறந்துவிடாமல் இருக்க உதவும் தளம் உருவாக்கிய தாய்! 

0

பல பெண்களைப் போலவே அஞ்சலி ஸ்ரீவாஸ்தவாவும் தனது கணவருடன் அமெரிக்காவிற்குச் செல்வதற்காக கல்லூரிப் பேராசிரியை பணியை விட்டு விலகினார்.  அதன் பிறகு வாழ்க்கையே மாறிப்போனது.

அஞ்சலிக்குத் தொழில்நுட்பத்தில் அதிக ஈடுபாடு இருப்பினும் தனது குழந்தையுடன் அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் இல்லத்தரசியாகவே இருக்கத் தீர்மானித்தார். அவரது குடும்பம் இந்தியா திரும்பியது. டெல்லி என்சிஆர் பகுதியைப் பொருத்தவரை முழு நேர அம்மாவாக இருப்பதால் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி விரைவாகவே முடிவிற்கு வந்துவிடும். அதாவது உங்களது குழந்தையை நிஜ உலகிற்கு ஆயத்தப்படுத்தும் நேரம் வந்ததும் அந்த மகிழ்ச்சி மறைந்துவிடும். 

’வால் ஸ்ட்ரீட் ஜர்னலில்’ இடம்பெற்ற ஒரு கட்டுரையில் டெல்லி நர்சரி பள்ளி அட்மிஷன் செயல்முறை என்பது ஹார்வேர்ட் பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெறுவதைக் காட்டிலும் கடினமானது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்குக் காரணம் காத்திருப்புப் பட்டியல்கள், பள்ளிகள் ஒன்றோடொன்று போட்டியிடுவது, பள்ளியில் அனுமதி பெற பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வெவ்வேறு நேரங்களில் விண்ணப்பங்களை வழங்குவது போன்ற பல்வேறு முறையற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அஞ்சலி தனது மகனை பள்ளியில் சேர்ப்பதற்கான நேரம் வந்தபோது பள்ளியில் விண்ணப்பம் வழங்குவதற்கான தேதி முடிந்துவிட்டதை அறிந்தார். அப்போது நகரில் வேறு பள்ளியில் சேர்ப்பதற்கான தகவல்களைப் பெற இங்கும் அங்கும் ஓடினார்.

ஒரு அம்மாவாக அவர் சந்தித்த பிரச்சனையும் அவரது தொழில்நுட்ப ஆர்வமும் இணைந்துகொண்டதால் அவரைப் போல் எந்த அம்மாவும் பள்ளியின் மாணவர் சேர்க்கைக்கான தேதியை மறந்துபோகும் சிக்கலை சந்திக்கக்கூடாது எனத் தீர்மானித்தார். அது மட்டுமல்லாது அதைச் செயல்படுத்தி அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெற்றோர்களுக்கு கட்டணமின்றி இதை ஒரு சேவையாகவே வழங்குகிறார். 

அவரது அம்மாவும் அந்த நாட்களில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றியிருந்தார். ஒழுக்கக்கோட்பாடுகள், ஒருமைப்பாடு, நேர்மை ஆகியவற்றை மதிக்கும் குணாதிசயங்களுடன் அஞ்சலி வளர்க்கப்பட்டார். இவற்றை சாஃப்ட்பால் பயிற்சியில் பயன்படுத்தினார். இதனால் இறுதியாக பஞ்சாப் அணி மூன்று தேசிய சாம்பியன்ஷிப்களை வெல்ல வழிவகுத்தது. அவர் கணிணி அறிவியல் மற்றும் பயன்பாடு பிரிவில் முதுகலை பட்டம் (MCA) பெற்றுள்ளார்.

ஜலந்தரில் உள்ள கல்லூரியில் கணிணி அறிவியல் பேராசிரியையாக பணி வாழ்க்கையைத் துவங்கினார். 2003-ம் ஆண்டு திருமணம் முடிந்தபிறகு கணவருடன் அமெரிக்கா செல்வதற்காகத் தனது பணியை விட்டு விலகினார். அவர்கள் இந்தியா திரும்பினர். அஞ்சலிக்கு ஒரு மகன் பிறந்தார். எனவே முழு நேரமாக அம்மாவாக செயல்படத் தீர்மானித்தார்.

2008-ம் ஆண்டு அவரது மகனுக்கு இரண்டரை வயது ஆனபோது ப்ளேஸ்கூலில் சேர்ப்பதற்காக பதிவு செய்திருந்தனர். 15 நாட்கள் விடுமுறைக்காக வெளியே சென்றனர். ஆனால் அவர்கள் திரும்பியபோது கிட்டத்தட்ட அனைத்து நல்ல பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்படும் தேதி முடிவடைந்திருந்தது. இது குறித்த தகவல்களை பெறுவதற்கான வாய்ப்புகளும் இல்லாமல் போனது. 

“பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த தகவல்களைப் பெற விரைவான எளிதான வழி எதுவும் இல்லை என வியந்தேன்,” என்றார்.

இது குறித்து மேலும் ஆராய்ந்தபோது ஒவ்வொரு பள்ளியின் வலைதளங்களையும் பார்வையிடுவதுடன் முன்னணி செய்தித்தாள்களைத் தொடர்ந்து பார்க்கவேண்டும். அல்லது பள்ளியைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிந்துகொள்ளவேண்டும். எனவே ஒருமுறை அஞ்சலி ஒரு பள்ளியின் விண்ணப்பம் பெற வரிசையில் காத்திருக்கும்போது இது குறித்து மேலும் ஆராய்ந்தார். வரிசையில் நின்றிருந்த மற்ற பெற்றோர்களுடம் உரையாடுகையில் தகவல்களைப் பெறுவதில் இருக்கும் இடைவெளி குறித்து கவலை தெரிவித்தனர். இதன் காரணமாக அவர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்ததால் சூழலை நன்குணர்ந்து வருந்தினார். அப்போதே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டும் என தீர்மானித்தார்.

எனினும் இதை எவ்வாறு செயல்படுத்தவேண்டும் என்பது அவருக்கு தெளிவாகவில்லை. 

“தொழில்நுட்பப் பின்னணி இருப்பதால் என்னுடைய கணவரும் நானும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவேண்டும் என்பதை அறிந்தோம். அவ்வாறுதான் ஸ்கூல்அட்மிஷன்இண்டியா.காம் (SchoolAdmissionIndia.com) உருவானது. ஒரு காலத்தில் சாஃப்ட்பாலில் இருந்த அதே ஆர்வம் இந்த ப்ராஜெக்டிலும் எனக்கு இருப்பதை நான் உணர்ந்தேன்,” என்று நினைவுகூர்ந்தார்.

குறைவான முதலீட்டுடன் விரைவாக ஒரு வலைதளத்தை உருவாக்கினோம். ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் வெவ்வேறு பள்ளிகள் குறித்த அடிப்படையான அதே சமயம் முக்கியமான தகவல்களைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். பள்ளி கட்டணம், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, தேவையான ஆவணங்கள் போன்ற முக்கியத் தகவல்களைத் தொகுத்தனர். இந்தத் தகவல்கள் அந்தந்த பள்ளியில் சரிபார்க்கப்படும். இதனால் பெற்றோர் அல்லது குழந்தையின் பொறுப்பாளர் தகவல் இல்லாத காரணத்தால் விண்ணப்பிப்பதற்கான தேதியைத் தவறவிடாமல் இருக்கலாம்.

2008-ம் ஆண்டு முயற்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டபோது அது குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்தது. நொய்டா பகுதியின் ஒவ்வொரு பள்ளியாக ஏறி இறங்கினர். நோட்டீஸ் போர்டில் காணப்பட்ட தகவல்களைப் புகைப்படம் எடுத்துப் பின்னர் தளத்தில் பதிவு செய்தனர். இது குறித்து தகவல்கள் மக்களிடையே பரவியது. 

”இரண்டு முறை பதிவிட்ட பிறகு பெற்றோர்கள் தொடர்புகொண்டு பள்ளி குறித்த தகவல்களை எப்போது பதிவிடுவோம் என கேட்கத் துவங்கினர். முடிவுகள் அறிவிக்கப்படும் நாளில் தளத்தின் ட்ராஃபிக் வெகுவாக அதிகரித்தது. இது ஆரம்ப நாட்களில் மிகவும் உற்சாகமளிப்பதாக இருந்தது,” என்றார் அஞ்சலி.

தன்னலமற்ற இந்த சேவை ஸ்கூல்அட்மிஷன்இண்டியா.காம் தளத்திற்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது. இது என்சிஆர் பகுதியின் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை குறித்த தகவல்களை வழங்கும் போர்டல்களில் அதிகம் தேடப்பட்ட போர்டலாக ஆனது. தகவல்களை வழங்கவேண்டும் என்கிற முக்கிய நோக்கத்தில் சற்றும் சமரசம் செய்துகொள்ளாமல் முன்னணியில் திகழ்ந்தனர். இவர்களது தளத்தில் விளம்பரங்களுக்கு இடமளிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் உருவாக்க விரும்பும் தூய்மையான நோக்கத்திற்கு அது தடையாக இருக்கும் என நினைத்தனர்.

”இந்தப் பகுதியில் செயல்படும் மற்ற நிறுவனங்கள் பள்ளிகளின் விளம்பரங்களை தளத்தில் வெளியிடுகின்றனர். அதேபோல் பெற்றோரின் தகவல்களை பள்ளிகளுக்கு பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் இந்த நடவடிக்கைகள் நடுநிலையான தகவல்களை வழங்கவேண்டும் என்கிற எங்களது நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். இந்த மாதிரியே எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது,” என விவரித்தார் அஞ்சலி.

மிகவும் சிறப்பாக தகவல்களை வழங்கவேண்டும் என்பதற்காக தொடர்ந்து தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

”தளத்தை நிர்வகிப்பதே முதல் சவாலாக இருந்தது. துல்லியமான தகவல்களைப் பெற பள்ளிகளைத் தொடர்புகொண்டேன். தளத்தில் தகவல்களைப் புதுப்பித்தேன். சமீபத்திய மாணவர் சேர்க்கை தேதிகளை செய்தி அறிக்கையாக வெளியிட்டேன். பெற்றோர்களையும் சமூகத்தையும் இதில் தொடர்புபடுத்த வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுவை உருவாக்கினேன். பின்னர் இதற்கென ஒரு மொபைல் செயலியை உருவாக்கினேன்,” என்றார்.

முதல் ஆண்டு 500 பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் குவிந்தனர். அதன் பிறகு அதே ஆண்டு எண்ணிக்கை ஆறுமடங்காக அதிகரித்தது. அத்துடன் அதே ஆண்டு அஞ்சலி தனது கணவர் பிரஞ்சல் அவர்களுடன் இணைந்து கோட்ஃபயர் டெக்னாலஜிஸ் (CodeFire technologies) துவங்கினார். மென்பொருள் சேவைகளை வழங்கும் இந்த ஸ்டார்ட் அப்பில் தற்போது மனிதவள செயல்பாடுகளுக்கு தலைமை வகிக்கிறார் அஞ்சலி. இந்த ஸ்டார்ட் அப் ஸ்கூல்அட்மிஷன்இண்டியா தளத்திற்கு நிதியுதவி அளிக்கிறது. இதன் வாயிலாகவே முழுநேர டெவலப்பர்கள் இருவர் இணைந்தனர். 

”அப்போதுதான் இந்தத் தளம் ஒரு வலைதளமாக செயல்பட்டதில் இருந்து சமூக நெட்வொர்க்காக மாறியது,” என அஞ்சலி நினைவுகூர்ந்தார்.

2012-ம் ஆண்டு இறுதியில் ஸ்கூல்அட்மிஷன்இண்டியா தளத்தில் 15,000 பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் இருந்தனர். பயனர்கள் அதிக தகவல்களை ஒருவரோடொருவர் பகிர்ந்து கொண்டனர். இன்றும் எந்தவித கட்டணங்களுடன்கூடிய விளம்பரங்கள் அல்லது மார்கெட்டிங் இல்லாமல் 70,000 பயனர்கள் உள்ளனர்.

கோட்ஃபயர் நிறுவனத்தைப் பொருத்தவரை 45 பேர் அடங்கிய வலுவான குழுவுடன் செயல்படுகிறது. வலைதளம், மொபைல் செயலி, செயற்கை நுண்ணறிவு, ப்ளாக்செயின் என நவீன தொழில்நுட்பத்தை வழங்குகிறது. அஞ்சலியின் தலைமையின்கீழ் செயல்படும் ’கோட்ஃபயர்’ நிறுவனம், பணிபுரிவதற்கு ஏற்ற முன்னணி 50 இடங்களில் ஒன்றாக 2014-ம் ஆண்டு சிலிக்கான் இண்டியாவால் மதிப்பிடப்பட்டது.

தங்களது நகரங்களின் பள்ளிகள் குறித்த தகவல்களையும் பட்டியலிடுமாறு இந்தியா முழுவதும் உள்ள பெற்றோர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துகொண்டிருப்பதால் இது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். 

“இந்த நோக்கத்துடன் பள்ளிகள் தாமாகவே பதிவுசெய்துகொள்ளவும் பெற்றோர்களுக்கு முக்கியத் தகவல்களை வழங்கவும் வசதி செய்துள்ளது கடந்து ஐந்து முதல் ஆறு மாதங்களில் நூறு பள்ளிகள் இணைந்துள்ளது,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜால் ஷா | தமிழில் : ஸ்ரீவித்யா