'தமிழன்டா'- இது தமிழ் ஃபேஸ்புக் அல்ல, தமிழர்களுக்கான சமூக செயலி!     

3

தமிழர்கள் தங்கள் சிந்தனைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு கலந்துரையாடி, தமிழ் சமூகத்தில் முன்னேற்றத்தை நிலைநாட்ட, பெங்களூரில் வசிக்கும் மதுரைக்காரர் சாம் இளங்கோ'வின் 'கஸ்ப் டெக்னாலஜி சொலுஷன்ஸ்' (Cusp technology solutions) நிறுவனம் உருவாக்கியுள்ளது தான் 'தமிழன்டா' எனும் ஆப்.

தமிழன்டா செயலி நிறுவனர் சாம் இளங்கோ
தமிழன்டா செயலி நிறுவனர் சாம் இளங்கோ

அனுபவம் வளர்த்த ஆதங்கம்!

"என்னுடைய 25 வருட ஐ.டி. துறைப் பணியில், நான் பார்த்த பல ஊழியர்கள் தென்னிந்திய மக்கள் ஆவர். சிறிய இடத்திலிருந்து இருந்து தலைமை பணியிடம் வரையில் நம் மக்கள் பலர் இருக்கின்றனர்", என்று பேசத் தொடங்கினார் சாம்.

"இந்நிறுவனங்களில் பணிபுரியும் நம் தமிழர்களை எல்லாம் பார்க்கும்போது எனக்குள் தோன்றிய ஆதங்கம்; வெவ்வேறு நாட்டின் பல்வேறு ஸ்தாபனங்களுக்கு உழைக்கும் நாம், ஏன் நம் மொழி, சமூகத்திற்கு என்று ஒன்றுமே செய்ததில்லை..?"

என்று தன்னுடைய அனுபவத்தைக் கொண்டு கூறினார், 'தமிழன்டா' நிறுவனர் சாம் இளங்கோ.

கூகிள் ப்ளே ஸ்டோரில் 'தமிழ் சார்ந்த ஆப்கள்' என்று தேடி பார்த்தோமெனில், தமிழ் மொழி கற்க உதவும் ஆப், தமிழ் மொழி பெயர்ப்பு அல்லது சமையல் குறிப்புகள் ஆப்கள் என சின்ன பயன்பாட்டு செயலிகளும்; செய்தி ஊடக ஆப்களும் மட்டும் தான் இருக்கின்றன.

"நம் தமிழ்நாட்டின் அதே அளவிலான 75 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி முதலிய நாடுகளில் மென்பொருட்கள் எல்லாம் அவர்தம் மொழியிலே இருப்பதால், சமூகம் வலிமை வாய்ந்ததாய் அழியாமல் வளர்ச்சி கண்டு வருகிறது," என்கிறார்.

ஆனால் நம்மிடத்தில்?

பெரும்பாலான நம் மக்கள் அனைவரிடமும் ஸ்மார்ட் போன்கள் இருப்பதால், நமக்கு இணைந்து இருப்பதிலோ, இணையத்தை பயன்படுத்துவதற்கோ எந்த தடையும் இல்லை. நம் தென்னிந்திய பகுதியில் இருக்கும் 90 சதவீத மக்களுக்கு கல்வியறிவு இருக்கிறது. ஆனால், 10 சதவீத மக்களுக்குதான் சரளமாக ஆங்கில மொழி புலமை உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில், நம்முள் மொழி இணைப்பு துண்டித்து இருப்பதால், சமூகமும் முன்னேற்றம் காணாமல் இருக்கிறதோ எனும் ஆதங்கம் மட்டும் பல வருடங்களாக நமக்குள் இருக்கிறது. பழி கூறுவதை விட, அதற்கு நாமே ஒரு வழி உருவாக்க முடிவு எடுத்தோம்.

2000 வருடங்களுக்கு முன் தமிழானது எல்லா துறையிலும் முதன்மை நிலையில் இருந்தது. நாம் எழுதினால் அது காவியம், கட்டிடம் கட்டினால் அது ஆலயம் என எண்ணற்ற புகழ்பெற்று சிறந்து விளங்கினோம். ஆனால், இக்காலத்தில் நாம் பின்தங்கி போய்விட்டோமோ? என்ற வருத்தம் உள்ளது. தொழில் நுட்பம் எனும் கருவியைக் கொண்டு, மறுபடியும் நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் புகழையும் மீட்டெடுக்க முடியுமா எனும் கேள்விக்கான விடை முயற்சி தான், இந்த 'தமிழன்டா' ஆப் உதிர்த்ததற்கான காரணம்.

ஆரம்ப கட்டம்

இதைத்தான் நாங்கள் தொழில் முனையவும் எங்கள் மூலக் காரணமாக எடுத்துக்கொண்டோம். மொழி தடையை உடைத்து, இணையம் மூலம் தமிழ் சமூக மக்களை ஒன்று சேர்க்கும் முயற்சியே தமிழன்டா.

கடந்த வருடம் ஜூலை மாதம் எங்கள் தொழில் முனையும் பணிகள் துவங்கப்பட்டன. அக்டோபர் மாதம் தொடங்கி, இவ்வருடம் ஜனவரி மாதத்தில் தமிழன்டா செயலி தயாரானது. மார்ச் மாதத்தில் அதனை மேலும் மேம்படுத்தி, 100 பயனர்கள் கொண்டு, அதன் பயன்பாட்டை சோதித்தோம். நல்ல வரவேற்பு கிடைத்தது.

நான், என் தோழர்கள் ராம் குமார், அம்ப்ரீஷ் கிருஷ்ணமூர்த்தி, ஆனந்த் நடராஜன் ஆகியோர் தமிழன்டா ஆப் உருவாக்கிய நிறுவனத்தின் நிறுவனர்கள். இதன் நிறுவனர்கள் இயக்குனர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியை தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாளான ஏப்ரல் 14இல் வெளியிட்டோம். வெளியிட்ட இரண்டரை மாதத்திற்குள் 5000 பயனர்களை, நாங்கள் பெற்றுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஃபேஸ்புக்?

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் போல, தங்கள் கருத்துகள், எண்ணங்கள், அறிவை பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ப இந்த செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் அரசியல், விளையாட்டு, விவசாயம், ருசியோ ருசி, பெண்களுக்காக 'தோழி', சினிமா குறித்து 'டெண்டுகொட்டாய்', இளைஞர்களுக்காக 'படிப்பும் வேலையும்', தொழில்முனைவோர்களைப் பாராட்ட 'நல்ல நேரம்' என 25 பிரிவுகள்  கொண்டுள்ளது. 

தமிழன்டா பற்றி நான் கூறியதும் பலர் என்னிடம் "ஓ தமிழ் ஃபேஸ்புக்-ஆ? என்று வினவினர் ஆனால்,

"உங்கள் நண்பர்களை ஃபேஸ்புக்-இல் நீங்கள் தேடலாம்; ஆனால் உங்கள் எண்ணங்களை தமிழன்டா-வில் நீங்கள் தேடலாம்," என்று அவர்களிடம் கூறுவதாக தெரிவித்தார்.

உங்கள் கருத்துகள், சிந்தனைகள், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள நீங்கள் மற்றவர்களுக்கு நண்பர்களாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவரின் கருத்துக்களைத் தொடர்ந்து தெரிந்து கொள்ள, அவர்களை தொடர்ந்தால் (Follow) போதுமானது. அக்கருத்தை பற்றின பதில் கருத்தை அதன் கீழே உள்ள கமென்ட் பாக்ஸில் பதிவிடலாம். டீ-கடை பென்ச்-இல் பேசிக்கொள்வது போன்ற சூழலை தான், நாங்கள் உருவாக்க விரும்புகிறோம்.

பயன்பாட்டாளர்கள் பக்கம்

ஒரே துறை சார்ந்த ஆர்வம் கொண்ட பலரின் கருத்துகள் பரிமாறி கொள்ளப்படும் போதும், கலந்துரையாடல்கள் மூலமும், நல்ல ஒரு சமூகம் உருவாகும் என்பது எங்கள் நம்பிக்கை.

இது தமிழ் மொழிகான ஆப் அல்ல, தமிழனுக்கான ஆப் ஆகும். தமிழன் எனும் மரபு, வாழ்க்கைநெறி, கல்வியறிவு போன்றவை சம்பந்தப்பட்ட ஆப் ஆகும்.

உலகத்தின் 21 சதவீத மக்கள் தொகை ஃபேஸ்புக்-இல் இணைந்து இருக்கிறது. அதேபோல், தமிழன்டா ஆப்பும் ஒரு தடம் போல் அமைந்து, 50 சதவீத தமிழர்களையாவது இணைக்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளது.

இது மக்களிடம் சென்றடைய, எஸ்.எம்.எஸ், இ-மெயில், சமூக வலைத்தளங்கள் மூலம் டிஜிட்டல் மார்கெடிங் செய்து வருகின்றனர். முதலீட்டாளர்களையும் எதிர்நோக்கி உள்ளோம். ஃபேடரேஷன் ஆப் தமிழ் சங்கம் நார்த் அமெரிக்கா (Federation of Tamil sangam North America) நடத்திய தொழில் முனைவோர்களுக்கான மாநாட்டில், எங்களையும் ஒருவராய் பங்கு கொள்ள அழைப்பு விடுத்தனர். அதன்மூலம் எங்களுக்கு நல்ல பாராட்டு கிடைத்தது . எங்களது கட்டுரை தொகுப்புகளுக்காக தினமலர் நாளிதழுடன் ஒரு கூட்டணி ஏற்படுத்தி உதவி பெற்று வருகிறோம் என்றார் சாம் இளங்கோ.

நாளுக்கு நாள் பயனர்களிடம் தமிழன்டா ஆப் குறித்து கருத்துகள் குவிகின்றன. அதில் குறை காணும் பிரச்சனைகளை நிறையாக்க வழி காண்கிறோம். ஆனால், கிராமங்களில் உள்ள குறைந்த நெட்வொர்க் கவரேஜ்-ஆல் ஏற்படும் சிக்கல்களை, மக்களுக்குப் புரிய வைப்பது பெரிய சவாலாய் உள்ளது. 

தொழில்நுட்ப அறிமுகம் இல்லாத தமிழர்களை இந்த தளத்தில் இணைப்பதுதான், இவை அனைத்தைவிட மிகப்பெரிய சவாலாய் உள்ளது. இதற்கு ஒரு தீர்வை தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். தற்போது உள்ளடக்கம் மேம்பாட்டாளர்கள் என எட்டு பகுதி நேர ஊழியர்களைக் கொண்டு, இயங்கி வருகிறோம். இந்தச் செயலியை ஆன்ட்ராய்ட் கூகுள் ப்ளே ஸ்டோர்களிலும், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களிலும் இருந்து டவுன்லோட் செய்ய முடியும்.

நிறைவேற விரும்பும் எதிர்கால கனவுகள்!

"யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற வேண்டும்" என இதேப்போல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளின் சமூகத்தையும் வலிமை ஆக்கும் ஆப்களை இனிவரும் காலத்தில் உருவாக்க உள்ளோம்.

"உற்றாரும் சுற்றாரும் எனக்கு உறுதுணையாய் இருக்கின்றார். முதல் தலைமுறை தொழில்முனைவோரான எனக்கு என் மனைவியின் ஒத்துழைப்பு, பக்கபலம். என் அம்மா தமிழ் ஆசிரியராவார். அவர் இளங்கோவடிகள் மீது கொண்ட பற்றால், 'சாம் இளங்கோ' என்ற எனக்கு பெயர் சூட்டினார். அப்பெயரின் பலனை நான் இப்பொது செய்வதாக உணர்கிறேன்.

"இறந்த பின் சரித்திரம் எழுதப்படுவதை விட, வாழும் போதே சிறிய அளவிலேனும் சாதனை புரிந்து சரித்திரம் படைக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு செயலாற்றி வருகிறேன். இதே போல் பலரும் சரித்திரம் படைக்க என் வாழ்த்துக்கள்,",

என்று பூரித்து பேசினார் சாம் இளங்கோ.

தமிழன்டா ஆப் பதிவிறக்கம் செய்ய, இங்கே கிளிக் செய்யவும்