ஜவ்வாது மலைவாழ் மாணவியின் மருத்துவக் கனவை நிஜமாக்கிய கலெக்டர்! 

நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும், வறுமை காரணமாக பல் மருத்துவ வாய்ப்பை ஏற்க இயலாமல் தவித்த பழங்குடியின மாணவிக்கு, ரூ. 17 லட்சம் உதவித்தொகை ஏற்பாடு செய்து உதவி உள்ளார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் கே.எஸ்.கந்தசாமி.

5

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா பட்டன்கோவிலூர் கிராமத்தைச சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மாணிக்கம். இவரது மகள் சுமத்ரா. குனிகாந்தூர் ஜவ்வாது மலைவாழ் மக்கள் மேல் நிலைப்பள்ளியில் கடந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த இவர், பொதுத்தேர்வில் 973 மதிப்பெண்களும், நீட் நுழைவுத் தேர்வில் 135 மதிப்பெண்களும் பெற்றார்.

நல்ல மதிப்பெண்கள் பெற்றதால், சுமித்ராவுக்கு சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவ கல்லூரியில் கட்டண முறையில் பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்ச ரூபாய்க்கு மேல் கல்விச் செலவு ஆகும் எனத் தெரிய வந்தது. இதனால் ஏழை மாணவியான சுமித்ரா தனது மருத்துவக் கனவை மூட்டை கட்டி விட்டு, தந்தையுடன் மீண்டும் தனது மலைக்கிராமத்திற்கு திரும்பி வேறு படிப்பு படிக்க முடிவு செய்தார்.

ஆனால், உரிய மதிப்பெண்கள் பெற்றும் பண வசதி இல்லாததால் பழங்குடி மாணவி சுமித்ரா மருத்துவக் கல்வி பெற முடியாது போன நிலை குறித்த தகவல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியின் காதுகளுக்கு எட்டியது. உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்ட அவர், சுமித்ரா கல்லூரியில் சேர்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் சுமித்ராவின் தந்தை மாணிக்கத்தை தொடர்பு கொண்டு, இத்தகவலை அவர் தெரிவித்தார்.

பட உதவி: விகடன் 
பட உதவி: விகடன் 

அதன் தொடர்ச்சியாக, சுமித்ராவின் பல் மருத்துவப் படிப்பிற்குத் தேவையான பணம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். அவரது முயற்சியின் பலனாக அரசுக் கல்வி உதவித்தொகை ரூ.7 லட்சத்து 20 ஆயிரமும், ஸ்பிக் நிறுவனம் மூலம் ரூ.9 லட்சத்து 7 ஆயிரத்து 700, சென்னை கோடம்பாக்கம் ரோட்டரி கிளப் மூலம் ரூ.50 ஆயிரமும், திருவண்ணாமலை பிரைட் ரோட்டரி கிளப் மூலம் ரூ.50 ஆயிரமும் சுமித்ராவிற்கு கல்வி உதவித்தொகையாக சேர்ந்தது. 

அதாவது மொத்தமாக அவரின் மருத்துவக் கல்விக்கு ரூ. 17 லட்சத்து 27 ஆயிரத்து 700 ரூபாய் உதவித்தொகை கிடைத்தது.

இதற்கான ஆணையை மாணவி சுமித்ராவிடம் கந்தசாமி நேற்று வழங்கினார். அப்போது உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாணவியின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது மருத்துவம் பயிலப் போகும் மாணவி சுமித்ராவிற்கு வெள்ளை கோட்டும், ஸ்டெத்தஸ்கோப்பும் வழங்கப்பட்டது. அதனை அவருக்கு அணிவித்து கந்தசாமியும், மாணவியின் பெற்றோரும் அழகு பார்த்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கந்தசாமி, 

“ஜவ்வாதுமலைவாழ் பகுதியில் இருந்து ‘நீட்’ தேர்வில் தகுதி பெற்று முதல் முறையாக பழங்குடியின சமூக மாணவி சுமித்ரா சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவ கல்லூரியில் படிக்க அனுப்பி வைக்கப்படுகிறார். இந்த மாணவியின் பெற்றோர் ஏற்கனவே ஏழ்மையில் உள்ளதால், பொருளாதார வசதி, கடன் அதிகமாக இருந்ததால் கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்க முடியாத சூழ்நிலையில் திரும்பி வந்து உள்ளனர். இந்த மாணவியின் நிலை அறிந்து கல்லூரி நிர்வாகத்திடம் பேசி அந்த மாணவி சேருவதற்கு அனுமதி பெறப்பட்டது. 

மேலும் இந்த மாணவிக்கு 4 வருடம் பல் மருத்துவம் படிப்பதற்குத் தேவையான முழு தொகையும் மாணவி சுமி த்ரா மற்றும் கல்லூரி பதிவாளர் இணைந்து வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு, அதில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,” என்றார்.
Photo courtesy : Dailythanthi
Photo courtesy : Dailythanthi

உரிய நேரத்தில் விரைந்து செயல்பட்டு தனது மருத்துவக் கனவை நிஜமாக்கிய ஆட்சியர் கந்தசாமிக்கு சுமித்ராவும், அவரது பெற்றோரும் தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர். நன்கு படித்து எதிர்காலத்தில் பழங்குடி மற்றும் பின்தங்கிய கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் அவரின் லட்சியமாம்.

கந்தசாமியின் முயற்சியால் சுமித்ராவின் கனவு நிறைவேறியிருக்கிறது. ஜவ்வாது மலைப் பகுதியில் மருத்துவப் படிப்புக்குச் செல்லும் முதல் மாணவி என்ற பெருமையையும் சுமித்ரா பெற்றுள்ளார்.

சுமித்ரா, போளூர் அரசு பள்ளியில் அரசால் நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பில் பயின்று, 135 மதிப்பெண்கள் பெற்று இன்று பல் மருத்துவ மாணவியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

Stories by jayachitra