சக்தி வாய்ந்த 50 இந்தியர்கள் பட்டியலில் இடம் பிடித்த ரஜினி, கமல், ஷிவ் நாடார் உள்ளிட்ட பிரபலங்கள்! 

1

இந்தியா டுடே குழுமம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சக்திவாய்ந்த பிரமுகர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2017-க்கான டாப் 50 பட்டியலை சில தினங்களுக்கும் முன்பு வெளியிட்டது. இப்பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த டாட்டா சன்ஸ் போர்ட் தலைவர் என். சந்திரசேகரன், எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட ஆறு பேர் இடம் பிடித்துள்ளனர்.

டாட்டா சன்ஸ் போர்டு தலைவராக நியமிக்கப்பட்ட என். சந்திரசேகரன் பத்தாவது இடத்தில் பட்டியலில் உள்ளார். இந்தப் பட்டியலில் அவர் இடம்பிடிப்பது இதுவே முதன்முறை ஆகும். நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த விவசாயி நடராஜனின் மகனான சந்திரசேகரனின் தந்தை இப்போதும் விவசாயம் செய்து வருகிறார். எச்.சி.எல். தலைவர் ஷிவ் நாடார் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டும் அவர் அதே இடத்தில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் முதன்முறையாக இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ரஜினி 34-வது இடத்திலும், கமல் 45-வது இடத்திலும் சக்தி வாய்ந்த இந்தியர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர். சுப்ரமணியன் சுவாமிக்கு 20-வது இடமும், எழுத்தாளர் மற்றும் துக்லக் ஆசிரியர் குருமூர்த்திக்கு 30-வது இடமும் கிடைத்துள்ளது. 

சக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியலில் புதியதாக 17 பேர் இடம்பிடித்துள்ளனர். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை சிந்து முதன்முறையாக பட்டியலில் சேர்ந்துள்ளார். அவருக்கு 36-வது இடம். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 11-வது இடம். கடந்த முறை 29-வது இடத்தில் இருந்த கோலி இம்முறை 18 இடங்கள் முன்னேறியுள்ளார். 

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி சக்திவாய்ந்த இந்தியர்களில் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டும் இவர் அந்த இடத்தில் இருந்தார். கடந்த ஆண்டு ஆறாவது இடத்தில் இருந்த டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா இந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் கே.எம். பிர்லாவுக்கு மூன்றாவது இடம். 

கடந்த முறை இரண்டாவது இடத்தில் இருந்த அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். யோகா குருவாக அறியப்பட்ட பாபா ராம்தேவ், தன் தொழில் பயணத்தை பதஞ்சலி மூலம் தொடங்கி வெற்றி நடை போட்டுவருவதை அடுத்து அவர் கடந்த ஆண்டு இருந்த ஒன்பதாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். மஹேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹேந்திரா, ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்திலும் உதய் கோடக் ஏழாவது இடத்திலும் உள்ளனர்.  திலீப் சங்வி எட்டாவது இடத்தையும் அசிம் பிரேம்ஜி ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.  அப்போலோ மருத்துவமனை நிறுவனர் பிரதாப் சி ரெட்டி பட்டியலில் புதிதாக இணைந்து 48-வது இடத்தில் உள்ளார். 

நந்தன் நில்கேனி, சுனில் மிட்டல், ராஹுல் பாட்டியா போன்ற பிரபல தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஸ்டார்ட்-அப் ஆக தொடங்கி இன்று டிஜிட்டல் வர்த்தகத்தில் சிறந்த இடத்தை பிடித்துள்ள பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா 18-வது இடத்தை பிடித்துள்ளார். அதே போல் பிரபல ஃப்ளிப்கார்டை நிறுவிய பன்சல் சகோதரர்களும் 26-வது இடத்தில் உள்ளனர். அனில் அம்பானிக்கு 25-வது இடம். எஸ்.பி.ஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா 19-வது இடத்திலும், நீதா அம்பானி 28-வது இடத்தையும் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு அனில் அம்பானி ஐந்தாவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நட்சத்திரம் அமிதாப்பச்சனுக்கு 15-வது இடம். சல்மான்கான் 29-வது இடத்தையும் வகிக்கின்றனர். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 38-வது இடத்தையும், தீபிகா படுகோன் பட்டியலில் கடைசி ஆளாக 50-வது இடத்திலும் உள்ளனர். ஷாருக்கானுக்கு 40வது இடமும் அக்ஷய் குமார் புதுமுகமாக பட்டியலுக்குள் நுழைந்து 44-வது இடத்தை பெற்றுள்ளார். அமீர் கானுக்கு 47வது இடம் கிடைத்துள்ளது.