'பாம்பூ இந்தியா' – மாற்றத்தை இலக்காகக் கொண்டு செயல்படும் நிறுவனம்!

மூங்கில் ‘ஏழை மனிதனின் மரம்’ என்கிற கண்ணோட்டத்தை மாற்றி ‘புத்திசாலி மனிதனின் மரம்’ என மாற்ற விரும்புகிறது பாம்பூ இந்தியா

0

பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் பல்வேறு வகைகளில் தங்களது பற்களை சுத்தம் செய்து வருகின்றனர். குச்சிகள், பறவைகளின் இறகுகள் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர். இறுதியாக டூத்ப்ரஷ்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

ஆனால் இன்று நாம் பயன்படுத்தும் மக்காத ப்ளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட டூத்ப்ரஷ் 1938-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்து தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு ப்ரஷ்ஷும் நிலத்தில் அழுகி அப்படியே தங்கியுள்ளது. நாம் நம்முடைய பல் மருத்துவரின் பரிந்துரைப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு புதிய டூத்பிரஷ்ஷை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ப்ளாஸ்டிக் பைகளுக்கு பிறகு ப்ளாஸ்டிக்கினால் ஏற்படும் மாசுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது டூத்பிரஷ். இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 150 மில்லியன் டூத்ப்ரஷ்கள் வீணாக்கப்படுகிறது.

தொழில்முனைவு முயற்சி

தொழில்முனைவோரான யோகேஷ் ஷிண்டே ஸ்டார்ட் அப்பை துவங்குகையில் சுற்றுச்சூழல் மீதான அக்கறைக்கு முன்னுரிமை வழங்கவில்லை. பார்க்ளேஸ் பூனேவின் முன்னாள் துணைத் தலைவரான இவர் ஜெர்மனியில் பணி நியமிக்கப்பட்டார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இந்தியனின் கனவான உலக சுற்றுப்பயணம் மற்றும் செழிப்பு போன்றவை இவருக்கும் இருந்தது. வருடாந்திர விடுமுறையின்போது இந்தியா திரும்பினார். அப்போது விவசாயத்தில் ஈடுபட்டிருந்த அவர்களது குடும்பத்தின் நெருங்கிய நண்பரான ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை அறிந்தார். அவர் கூறுகையில், “என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்களை கேள்விப்படுவது முதல் முறை அல்ல. இருந்தும் நெருங்கிய நண்பர் என்பதால் முதல் முறையாக தனிப்பட்ட அளவில் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியது.”


ஐரோப்பா முழுவதும் பயணம் மேற்கொண்டபோது மேற்கத்திய விவசாயிகளுக்கும் அவர்களது இந்திய சகாக்களுக்கும் இடையே நிலவும் பொருளாதார ஏற்றதாழ்வுகளைக் கண்டு வியந்தார் யோகேஷ். இதனை சரிசெய்ய தீர்மானித்தார். அவர் கூறுகையில், “ஒவ்வொருவரும் தங்களது சமூகத்துக்காகவும் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் ஏதாவது செய்ய விரும்புவார்கள். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. நாம் எப்போதும் தொடர்ந்து அரசாங்கத்தையும் சமூகத்தையும் குற்றம் சாட்ட முடியாது. ஆனால் அவற்றிற்கு நாம் என்ன செய்கிறோம்? என்னுடைய கல்வியை சிறப்பாக பயனபடுத்தி நான் செயல்படுத்த விரும்பினேன்.”

ஐரோப்பிய விவசாயிகள் செழிப்பாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று விவசாயம் மற்றும் கலாச்சாரத்தின் எல்லையற்ற ஒருங்கிணைப்பு. ”உதாரணத்திற்கு ஜெர்மனியின் முக்கிய பயிர் பார்லி. அதனால்தான் அவர்கள் பீர் கலாச்சாரத்தை ஊக்குவிக்கின்றனர். தற்போது ஜெர்மனி பீர் விழாவிற்கு உலகின் பிரபலமாக இடமாக விளங்குகிறது. ஃப்ரான்சில் மது கலாச்சாரமும் இதே போல் பிரபலாக விளங்குகிறது.” என்று விவரித்தார்.

பூனேவைச் சேர்ந்தவரான யோகேஷ் மஹாராஷ்டிராவில் மூங்கில் சாகுபடி அதிகமாக இருப்பதை அறிந்தார். இது அவரது விருப்பத்தை நிறைவேற்ற மிகச்சரியான தீர்வாக இருக்கும் என நினைத்தார். இது குறித்து மேலும் ஆராய்ந்தார். இதை முன்னெடுத்துச் செல்வதால் விவசாய சமூகத்திற்கு உதவுவதுடன் நம் வாழ்வை அழித்துக்கொண்டிருக்கும் ப்ளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும் உதவும் என்பதைக் கண்டறிந்தார்.

ஏழை மக்களின் மரத்தை மறுப்ராண்டின் செய்தல்

யோகேஷ் மற்றும் அவரது மனைவி அஷ்வினி ஷிண்டே இணைந்து 2016-ம் ஆண்டு பூனேவில் வெல்ஹே கிராமத்தில் பாம்பூ இந்தியாவை நிறுவினர். மூங்கில் ‘ஏழை மனிதனின் மரம்’ என்கிற கண்ணோட்டத்தை மாற்றி ‘புத்திசாலி மனிதனின் மரம்’ என இவர்கள் மாற்ற விரும்பினர். கைவினைப் பொருட்கள் மற்றும் மர ஃபர்னிச்சர் துறையில் மட்டுமே மூங்கில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதை மாற்றி வீட்டில் உபயோகிக்கும் ப்ளாஸ்டிக் தயாரிப்புகளுக்கு மாற்றாக மூங்கிலை பயன்படுத்த திட்டமிட்டனர்.

ஸ்பீக்கர்கள், நோட்புக்குகள், துணிகளை உலர்த்த பயன்படும் க்ளிப்கள், பென், டெஸ்க் ஆர்கனைசர், டூத்பிரஷ் போன்ற பல்வேறு தயாரிப்புகளை வழங்குகிறது பேம்பூ இந்தியா. இவை ஒரு இ-காமர்ஸ் தளம் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. ஆஃப்லைனிலும் பல்வேறு இணைப்புகள் ஏற்படுத்தியுள்ளனர்.

பரவியிருக்கும் ப்ளாஸ்டிக்


அழிவை ஏற்படுத்தும் புதைபடிவ எரிபொருள் துறையின் ஒரு துணை பொருளான ப்ளாஸ்டிக் மக்குவதற்கு ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளாகும். இது தீங்குவிளைவிக்கும் ரசாயனங்கள் நிறைந்த நச்சுப்பொருளாகும். இது நமது சுற்றுச்சூழலையும் நம் உடலையும் பாதிக்கிறது. 2050-ம் ஆண்டில் கடலில் மீன்களைக் காட்டிலும் அதிகமான ப்ளாஸ்டிக் காணப்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.

அன்றாட ப்ளாஸ்டிக் பயன்பாட்டினால் எண்டோக்ரினை பாதிக்கும் ரசாயனங்கள் நமது ரத்த ஓட்டத்தில் கலந்து பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு ப்ளாஸ்டிக் பயன்பாடு ஆண்களின் விந்தணுவைக் குறைக்கும். BPA மாசு காரணமாக பெண்களுக்கு PCOS போன்ற கருவுறுதல் குறைபாடுகள் ஏற்படக்கூடும். மக்கள் 1950 முதல் 8.3 பில்லியன் டன் ப்ளாஸ்டிக்களை உற்பத்தி செய்திருப்பதாகவும் இதில் பெரும்பாலானவை நிலத்தை நிரப்பி குப்பைகளாக எரிக்கப்பட்டோ அல்லது கடல்கள் மற்றும் ஆறுகளை மாசுபடுத்தி நமது சுற்றுச்சூழலை நிரந்தரமாக அசுத்தப்படுத்தும் அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அற்புதமான புல்


மூங்கில் ஒரு வகையான புல்லாக இருப்பினும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. இதைக் கொண்டு வீடு, ஃபர்னிச்சர், ஊட்டசத்து நிறைந்த உணவு கூட தயாரிக்கலாம். ஆயுதங்கள் இசைக்கருவிகள் போன்றவற்றை தயாரிக்க ஏதுவாக மூங்கில் வளைந்துகொடுக்கும் தன்மையுடன் இருக்கும் அதே நேரத்தில் ஸ்டீலைக் காட்டிலும் வலுவானதாகும். நிலநடுக்கத்தையும் தாங்கும் தன்மை கொண்டது. ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சிற்குப் பிறகும் அழியாமல் இருந்த ஒரே தாவரம் மூங்கில் மட்டுமே.

மூங்கில் விளைச்சலில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியா. 125 வகையான மூங்கில் தாவரம் நம் நாட்டில் உள்ளது. ஆனால் மூங்கில் தயாரிப்பு சந்தையில் உலகளவில் நான்கு சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது. மூங்கில் உலகின் வேகமாக வளரும் புல் வகையாகும். இதற்கு மிகக்குறைவான பராமரிப்பும் கவனமும் மட்டுமே தேவைப்படும். இவை வளர்வதற்கு பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதில்லை. க்ரீன்ஹவுஸ் எரிவாயுவை உறிஞ்சிக்கொண்டு மற்ற கடின மரங்களைக் காட்டிலும் 35 சதவீத ஆக்சிஜனை வளிமண்டலத்தில் வெளியேற்றக்கூடியது.

கடினமான துவக்கம்

யோகேஷ் ஸ்டார்ட் அப்பில் சந்தித்த மிகப்பெரிய சவால் நிதி உயர்த்துவது. அவருக்கு கடன் வழங்க பல்வேறு வங்கிகள் மறுத்ததால் சீட் நிதிக்காக தனது வீட்டை அடமானம் வைத்தார். இது குறித்து அவர் கூறுகையில், “முதல் ஏழு மாதங்களில் வெளியிலிருந்து எந்தவித நிதி ஆதரவுமின்றி 50 லட்ச ரூபாயை கடந்துவிட்டோம்.” என்றார். கடந்த ஒன்பது மாதங்களில் ஏழு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். இந்தியாவில் 5,000 க்கும் அதிகமான வாடிக்கையர்களை சென்றடைந்துள்ளனர். நிலத்தில் 20,000 கிலோ ப்ளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்துவிடாமல் பாதுகாத்துள்ளனர். 12 விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளனர். “2017-ம் ஆண்டு இறுதிக்குள் 1,00,000 கிலோ ப்ளாஸ்டிக் கழிவுகளை தடுப்பதை தற்சமயம் இலக்காகக் கொண்டுள்ளோம்.” என்றார்.

யோகேஷ் ஸ்டார்ட் அப்பில் சந்தித்த மிகப்பெரிய சவால் நிதி உயர்த்துவது. அவருக்கு கடன் வழங்க பல்வேறு வங்கிகள் மறுத்ததால் சீட் நிதிக்காக தனது வீட்டை அடமானம் வைத்தார். இது குறித்து அவர் கூறுகையில், “முதல் ஏழு மாதங்களில் வெளியிலிருந்து எந்தவித நிதி ஆதரவுமின்றி 50 லட்ச ரூபாயை கடந்துவிட்டோம்.” என்றார். கடந்த ஒன்பது மாதங்களில் ஏழு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். இந்தியாவில் 5,000 க்கும் அதிகமான வாடிக்கையர்களை சென்றடைந்துள்ளனர். நிலத்தில் 20,000 கிலோ ப்ளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்துவிடாமல் பாதுகாத்துள்ளனர். 12 விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளனர். “2017-ம் ஆண்டு இறுதிக்குள் 1,00,000 கிலோ ப்ளாஸ்டிக் கழிவுகளை தடுப்பதை தற்சமயம் இலக்காகக் கொண்டுள்ளோம்.” என்றார்.

இவர்களது ஸ்டார்ட் அப் லாபத்தை எட்டியபோதும் யோகேஷ் மற்றும் அஷ்வினியின் வளர்ச்சி சார்ந்த இலக்கை எட்டுவதற்கு முதலீட்டின் தேவை உள்ளது. “எங்களது சொந்த உற்பத்தி அமைப்பு இல்லாதது மிகப்பெரிய தடையாக உள்ளது. தற்போது வெளியிலுள்ள வொர்க்ஷாப்களை சார்ந்துள்ளோம். எங்களது சொந்த இயந்திரங்களை வாங்கிவிட்டால் அனைத்தையும் எங்களது தரப்பில் செய்து முடித்துவிடுவோம். இது நடைபெறுகையில் வெல்ஹேவில் ஒரு காமன் ஃபெசிலிட்டி மையத்தை நாங்கள் அமைப்போம். இங்கு விவசாயிகள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் தங்களது சொந்த மூங்கில் தொழிலை மேற்கொள்ள பயிற்சியளிக்கப்படும்.” என்று பகிர்ந்துகொண்டார்.

பாம்பூ இந்தியாவின் நீண்ட கால வெற்றியானது பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் 20 ரூபாய்க்கு கிடைக்கும் விலை மலிவான டூத்பிரஷ்ஷை விடுத்து 120 ரூபாய் செலவழிக்கத் தயாராக இருக்கவேண்டும். யோகேஷ் மற்றும் அஷ்வினி விரும்பும் மூங்கில் கலாச்சாரத்தைத் தழுவ முன்வரவேண்டும். கிரகத்தின் வளங்கள் மிகப்பெரிய அளவில் சீரழிவதை எண்ணி வாடிக்கையாளர்கள் விழிப்படைந்துள்ளதாக நம்புகிறார் யோகேஷ். மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது வாழ்க்கைமுறையில் ஒரு நிலையான தேர்வை மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். பாம்பூ இந்தியாவிற்கு தோல்வி என்பது இல்லை ஏனெனில், “விவசாயிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் எங்களை அணுகுகிறார்கள்.” என்றார் அவர்.

ஏற்றம் மற்றும் இறக்கம்

“எனக்கு பயணம் பிடிக்கும். ஸ்டார்ட் அப்பிற்கு முன்பு குடும்பத்துடன் கிட்டத்தட்ட 20 நாடுகளுக்கு பயணித்துள்ளேன். பாம்பூ இந்தியாவின் பணிகளைத் துவங்கிய பிறகு குடும்ப நிகழ்ச்சிகளுக்காகவும் ஒரு நாள் விடுப்புகூட நாங்கள் எடுக்கவில்லை. ஜெர்மனியில் நிதியைப் பொருத்தவரை செழிப்பாக வாழ்ந்து வந்த எங்களுக்கு குறுகிய பட்ஜெட்டில் இந்தியாவில் செயல்படுவது கடினமாகவே இருந்தது. இந்த முயற்சி வருமானத்திற்காக அல்ல. விளைவுக்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.” என்றார் யோகேஷ்.


ஸ்டார்ட் அப்பில் மிகவும் சிறப்பான விஷயமாக யோகேஷ் கருதுவது வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களாகும். ”மிகவும் விழிப்புடன் இந்த தயாரிப்பை வாங்குவதன் மூலம் சமூகத்திற்காக ஏதோ ஒரு நேர்மறை செயலில் ஈடுபடுவதாக அவர்கள் உணர்கிறார்கள். இதில் அவர்களுடன் இணைவது எங்களுக்கு உற்சாகமாக உள்ளது.” என்றார். “மேலும் விவசாயிகளையும் சமூகத்தையும் இணைக்கும் பாலமாக இருப்பதை உணர்வது மிகப்பெரிய சந்தோஷத்தை அளிக்கிறது. நமது வாழ்க்கையின் நோக்கத்தை உயர்த்தும் உணர்வை ஏற்படுத்துகிறது.”

மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவோருக்கு அறிவுரையாக அவர் கூறுகையில், “உங்களது கனவின் மீது நம்பிக்கை வைக்கவும். உங்களது செயல்பாடுகளில் கவனம் செலுத்துங்கள். நடப்பவை நன்றாகவே நடக்கும்.”

ஆங்கில கட்டுரையாளர் : ராக்கி சக்ரவர்த்தி