'தாய்மொழியில் கையொப்பம்'- விழிப்புணர்வு முழக்கம் துவங்கியுள்ள நடிகர் ஆரி! 

1

இன்றைய பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நம் தாய் மொழியையும் நம் பாரம்பரியத்தையும் மறந்து மேற்கத்தைய வாழ்வை நோக்கிச் செல்கிறோம். இந்த போக்கை மாற்றும் வகையில் தொடர்ந்து பல சமூக சேவையில் ஈடுப்பட்டு இருக்கும் நடிகர் ஆரி “தாய்மொழியில் கையொப்பம் இடுவோம்” என்னும் ஓர் முழக்கத்தை துவங்கியுள்ளார்.

இந்த வருடம் ஜீன் மாதம் வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மாகாணத்தில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 30வது தமிழர் திருவிழாவில் தாய்மொழி தமிழில் கையெழுத்திடுவது என முழக்கத்தை துவங்கி, வட அமெரிக்க தமிழ் சங்கப் பேறவையுடன்  இணைந்து 1119 பேரை வைத்து தமிழில் கையெழுத்திட்டு புதிய கின்னஸ் உலக சாதனை முயற்சி நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வை வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை பேரவையுடன் இணைந்து மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலராக இருக்கும் நடிகர் ஆரி முன்னெடுத்து நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் திரும்பிய அவர், தனது எல்லா அலுவல் சார்ந்த கையொப்பத்தையும் தமிழில் மாற்றியுள்ளார். தனது அறக்கட்டளையுடன் இணைந்து சத்யபாமா பல்கலைக்கழகம் இந்த முழக்கத்தை அங்கீகரித்து வெளியிட்டுள்ளது.

“தாய்மொழியில் கையொப்பம் இடுவது அவமானம் அல்ல அடையாளம் என்பதை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன். தமிழ் மட்டும் அல்ல இந்தியாவில் பேசும் மற்ற தாய்மொழிகளும் ஆங்கிலத்தில் தொலைந்து போகக்கூடாது,” என்கிறார் ஆரி.

நமது அறிவை வளர்த்துக்கொள்ள எத்தனை மொழிகள் வேண்டும் என்றாலும் நாம் கற்றுக்கொள்ளலாம் ஆனால் நமது தாய் மொழியின் சிறப்பை அறியாமல் யாரும் இருக்கக் கூடாது என குறிப்பிடுகிறார் ஆரி. 

முக்கியமாக அடுத்தத் தலைமுறையினருக்கு தாய் மொழியை கற்றுக்கொடுக்காமல் இருப்பது தவறு, வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் இந்தியாவில், தாய் மொழியின் மறியாதை அறியாமல் இருப்பது தவறு என்கிறார்.

இதனால் இந்த முழக்கத்தை துவங்கி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். இதற்கு முதல் முயற்சியாக எத்திராஜ் கல்லூரியில் மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி 500க்கும் மேற்பட்ட மாணவிகளை தாய்மொழியில் கையெழுத்தை மாற்ற உறுதிமொழி ஏற்கவைத்துள்ளார். வரும் நாட்களில் 8ஆம் வகுப்பிற்கு மேல் இருக்கும் மாணவர்களை பள்ளியில் சந்தித்து தாய்மொழியின் பெருமையை எடுத்துரைத்து தமிழில் கையொப்பம் இடவும் முயற்சி செய்து வருகிறது இவரது குழு.

“தாய்மொழியில் கையெழுத்து போடுவதால் என்ன மாற்றம் வரப்போகிறது என பலர் கேட்கின்றனர். நமது பெற்றோரை யாரெனக் கேட்டால் பெருமையாக நமது தாய் தந்தையை காட்டுவது போல் இது என் தாய் மொழி என நாம் உலகிற்கு பெருமையாக காட்டமுடியும்.”

மேலும் சீனா, ஜெர்மனி, ஜப்பான் மற்ற ஐரோப்பிய நாடுகள் பல தாய்மொழியில் தான் படிக்கின்றனர், பேசுகின்றனர், எழுதுகின்றனர். நாம் மட்டும் தான் ஆங்கிலத்தின் பின்னால் சென்று தாய் மொழியை மறக்கிறோம் என்கிறார்.

நடிகர் ஆரி இந்த கையொப்ப விழிப்புணர்வை முன்னெடுத்து, தான் தன் கையொப்பத்தை தமிழில் மாற்றியது போல் மற்றவர்களும் மாற்றக்கோரி ஒரு சேலஞ்ச் போல் தொடங்கி இந்த முயற்சியை வெளிப்படுத்தினார். அதனை தொடர்ந்து இவரது முழக்கத்தை அங்கீகரிக்கும் வகையில் திரைத்துறையை சேர்ந்த இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் சமுத்திரகனி, நடிகர்கள் சௌந்தரராஜன், பிளாக் பாண்டி, சூரி விஷ்ணுப்பிரியன், எழுத்தாளர் ஜெயபாலன் ஆகியோர் தமிழில் கையொப்பத்தை மாற்றுவதாக அறிவித்து இதை ஒரு மிகப்பெரும் எழுச்சிப் பிரச்சாரமாக கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.

சமூகம் சார்ந்த பல சேவையில் ஈடுபட்டிருக்கும் ஆரி, இதற்கு முக்கியக் காரணம் தனது பெற்றோரின் வளர்ப்பு என்கிறார். நாம் சம்பாதிப்பதில் கால்வாசி சமூகத்திற்கு உதவ பயன்பட வேண்டும் என சிறு வயதில் இருந்தே தனக்கு சொல்லி வளர்த்ததால் அது மனதில் ஆழமாக பதிந்துவிட்டதாக தெரிவிக்கிறார் ஆரி. மேலும் ஜல்லிக்கட்டு போராட்டம் தனது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.

“அலங்காநல்லூரில் 7 நாள் ஜல்லிகட்டுக்கு போராடி சிறை சென்றதே சமூகம் சார்ந்த என் சிந்தனையை மாற்றியது. சுயநலம் இல்லாமல் சமூகத்திற்கு திரும்ப ஏதாவது செய்ய வேண்டும் என சிந்தனை தோன்றியது,” என்கிறார்.

நமக்காக நாம் உழைத்தால் நம் குடும்பம் உயரும், சமூகத்திற்காக உழைத்தால் சமூகத்துடன் இணைந்து நாமும் வளருவோம் என சமூக அக்கறையுடன் முடிக்கிறார் ஆரி. 

பெரும்பாலான நாடுகள் தங்கள் தாய்மொழியையே முதல் மொழியாக வைத்துக்கொண்டு ஆங்கிலத்தை இரண்டாம் மூன்றாம் மொழியாக வைத்துள்ளனர். நாம் மட்டுமே நம் தாய்மொழியை இரண்டாம் மொழியாக வைத்துள்ளோம், இதன் மூலம் நம் தாய்மொழிக்கான அங்கீகாரத்தை கொடுப்போம். 

ஆரியின் இந்த “தாய்மொழியில் கையொப்பம் இடுவோம்” என்ற முழக்கத்திற்கு ஆதரித்து நமது தாய்மொழிக்கு மாறுவோம்.

Related Stories

Stories by Mahmoodha Nowshin