5 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் இரவுநேர தங்கும் இடவசதியை திருநங்கைகளுக்கு அளித்த சென்னை மாநகராட்சி!  

0

இருப்பிடம் ஒருவரது அடிப்படை உரிமை. இருப்பினும் பலருக்கு நம் நாட்டில் அந்த வசதி கூட கிடைக்காமல் தெருவில் தவிப்பது நாம் அனைவரும் அறிந்தது. தனக்கான இடத்தை அடைய முடியாதவர்களுக்காக மாநில அரசுகள் இருப்பிட வசதியை செய்து தருகிறது. தங்க இடம் கிடைப்பதில் அவதிப்படுவதில் மூன்றாம் பாலின சமூகத்தினர் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள்.  

நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், திருநங்கையாக மாறுவோர் வீட்டை விட்டு விரட்டி அடிக்கப்படுவதால் அவர்களும் தங்க இடமின்றி தவிக்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் வந்தாலும் அவர்களுக்கு யாரும் வீடு வாடகைக்கு தர முன்வருவதில்லை.

அரசு அமைத்துள்ள இருப்பிடங்களிலும் திருநங்கைகள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் அவர்கள் ஊர் முழுதும் சுற்றித்திரிந்து அல்லல்படுவது வழக்கமாகி உள்ளது. மும்பை போன்ற நகரத்தில் இந்த பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. இது குறித்து பேசிய திருநங்கை ஒருவர்,

“மூன்றாம் பாலினத்தவர்களில் பலர் மாற்றுத்திறனாளிகாக இருக்கின்றனர். அவர்கள் வீடின்றி, இருக்க இடமின்றி பல இன்னல்களை சந்திக்கின்றனர். குறிப்பாக சிலர் ஆசிட் வீச்சுக்கு ஆளாகியுள்ளனர். சிலமுறை ரயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் போது சிலரால் வெளியே தூக்கி எரியப்பட்டு படுகாயமடைந்துள்ளனர். மூதியோர்களுக்கு இல்லம் இருப்பது போல் திருநங்கைகளுக்கு தங்க இடம் இல்லை.”

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பாராட்டத்தக்க செயலை அண்மையில் செய்துள்ளது. மூன்றாம் பாலின மக்கள் தங்க இரவு நேர இருப்பிடம் ஒன்றை திறந்துள்ளது. ஐந்து வருட போராட்டத்துக்குப் பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தங்க இடமில்லாத திருநங்கைகள் இந்த இரவுநேர இருப்பிடத்தில் தங்கள் வீடு போல நினைத்து தங்கிக்கொள்ளலாம். அங்கே தங்குவதால் அவர்கள் பாதுகாப்பாகவும் இருப்பார்கள். மேலும் அந்த இடத்தில் திருநங்கைகளுக்கான திறன் பயிற்சிகளையும் வழங்க உள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பும் சுய சம்பாதியமும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. 

25 பேர்களை உள்ளடக்கக்கூடிய இந்த இருப்பிடம் தற்போது நிரம்பியுள்ளது. சுமித்திரா என்ற திருநங்கை தி ஹிந்து பேட்டியில் கூறுகையில்,

“இந்த வீடு எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. வசதியாகவும், உடன் தங்குவோர் நன்கு பழகுகிறார்கள். இந்த இடமும் நன்றாக உள்ளது. இதே போல் மாநிலம் முழுதும் இருந்தால் நன்றாக இருக்கும்,” என்றார். 

நான்கு முதல் ஆறு மாதம் வரை இவர்கள் அந்த இருப்பிடத்தில் தங்கி, பயிற்சி எடுத்துக் கொண்டு தங்கள் சுயகாலில் நிற்கும் அளவிற்கு ஆளான பின்னர் வேறு இடத்துக்கு செல்லலாம். அந்த வகையில் மேலும் சிலர் இங்கே வந்து தங்கிக்கொள்ளமுடியும். நிறுவனங்களும் இவர்களை பணியிலமர்த்த முன்வரவேண்டும் என்று கூறுகின்றனர்.

50 பேர் தங்கக் கூடிய இடத்தை மாநகராட்சி தேடிவந்தது. இருப்பினும் இந்த இடம் மட்டுமே கிடைத்ததால் தற்போது 25 பேருடன் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த இடத்தில் காம்பெளண்ட் வசதி மற்றும் குடிநீர் இணைப்பு கொடுக்கவேண்டி உள்ளது. இவையெல்லாம் விரைவில் சென்னை மாநகராட்சி செய்யும் என்று நம்புவோம். 

கட்டுரை: Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL