பேடிஎம் நிறுவனர் பண மிரட்டல் வழக்கின் திருப்பங்களும், புதிய தகவல்கள்... 

0

பேடிஎம் நிறுவன தகவல் தொடர்பு துணைத்தலைவரும், நிறுவனத்தின் மூத்த ஊழியர்களில் ஒருவருமான சோனியா தவான், நிறுவனர் விஜய் சேகர் சர்மாவை பணம் கேட்டு மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்ட செய்தி வெளியான பிறகு, இது தொடர்பான சதி விளக்கங்களும் தொடர்கின்றன.

பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா
பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா
திங்கள் அன்று, நொய்டா காவல்துறை, கடத்தல் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டின் கீழ், சோனியா, ரூபக் ஜெயின் மற்றும் தேவேந்திர குமாரை கைது செய்தது. இந்த மூவரும் விஜய் சேகர் சர்மாவின் தனிப்பட்ட தரவுகளை வைத்துக்கொண்டு, அதை விடுவிக்க ரூ.20 கோடி மிரட்டியதாக மீடியா செய்திகள் தெரிவிக்கின்றன.

சோனியா தவானுக்கு புதிய பிளாட் வாங்க நிறுவனர் விஜய் சேகர் சர்மா ரூ.4 கோடி கொடுக்க மறுத்ததை அடுத்து தரவுகள் திருட்டு நடைபெற்றதாகவும் அண்மைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சோனியா மற்றும் கனவர் ரூபக் ஜெயின் நொய்டாவில், வாடகை பிளாட்டில் வசிப்பதாகவும், அவர்கள் பெரிய பிளாட் வாங்க விரும்பியதாகவும் ஆனால் ரூபக்கின் ரியல் எஸ்டேட் வர்த்தகம் சரிந்ததால் அதை வாங்க முடியவில்லை என்றும் காவல்துறை தரப்பு தகவல் தெரிவிக்கிறது.

சோனியா, இன்னொரு பேடிஎம் ஊழியரான தேவேந்திர குமார் உதவியுடன், மிரட்டி பணம் கேட்கும் உத்தியை கையாள தீர்மானித்ததாக கூறப்படுகிறது. இந்த ஊழியர், விஜய் சேகர் சர்மாவின் லேப்டாப்பில் இருந்து தரவுகளை நகலெடுத்து ரோகித் சோமல் என்பவரிடம் கொடுத்தாகவும், அவர் தான் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

காவல்துறையை மேற்கோள் காட்டும் செய்திகள், செப்டம்பர் 20ல், விஜய் சேகர் சர்மாவுக்கு, ரூ.30 கோடி கேட்டு முதல் மிரட்ட வந்ததாக தெரிவிக்கின்றன. அதன் பிறகு இந்த தொகையை ரூ.10 கோடியாக குறைத்திருக்கிறார். தேவேந்திரகுமார் தன் பங்கை ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், சோனியா மற்றும் ரூபக் தாங்கள் நிரபராதிகள் எனக் கூறி வருகின்றனர்.

இந்த தம்பதியின் வழக்கறிஞர் பிரசாந்த் திரிபாதி, திருட்டு போனதாக சொல்லப்படும் தரவுகள் தொடர்பான தகவல்கள் மாறுபடுவதாக கூறுகிறார்.

"நிச்சயமாக சதி அம்சம் இருக்கிறது. நிறுவனர்கள் பங்குகளை விற்கச்சொல்லி நிர்ப்ந்திக்கின்றனர். முதலில் கூறப்பட்டு குற்றச்சாட்டில் நிறைய முரண்கள் உள்ளன. கொல்கத்தாவில் இருந்து பேசிய நபர், மிரட்டல் தொகையின் கணிசமான பகுதியை பெறாமலே சோனியா பெயரை சொன்னதாகவும் ஒரு தகவல் மீடியாவில் வெளியாகியுள்ளனது. எனவே இந்த விவகாரத்தில் நிறைய விஷயங்கள் மறைந்திருக்கின்றன,” என்கிறார் திரிபாதி.

பேடிஎம் நிறுவனருக்கு மிரட்டல் போன் வந்த 2 நாடுகளுக்குப்பிறகு, சோனியா மற்றும் ரூபக்கிற்கு இதே போன்ற மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், மிரட்டிய ஆசாமி ரூ.5 கோடி கேட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சோனியா மீது தவறாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர். அவரது துணை சகோதரி, சோனியா பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடப்பதாக மணி கண்ட்ரோல் தளத்திடம் தெரிவித்துள்ளார்.

"ஒரு மாதம் முன் தான் அவர், பேடிஎம் நிறுவன துணைத்தலைவராக (வர்த்தக தகவல் தொடர்பு), பதவி உயர்வு பெற்றார். நிறுவனத்துடன் 10 ஆண்டுகளாக அவர் உறவு கொண்டுள்ளார். இது போன்ற ஒன்றை அவர் ஏன் செய்ய வேண்டும்...?” என அவர் கூறினார்.

நான்காவதாக குற்றம்சாட்டப்பட்ட ரோகித் சோமல் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். இவர் தான் விஜய் சகோதரர் அஜய் சேகர் சர்மாவிடம் பேசி மிரட்டல் விடுத்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட மூவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு, அவர்கள் நீதிமன்ற காவலில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்திய தண்டனைச்சட்டம் 381 (எஜமானரின் சொத்து, ஊழியர் அல்லது குமாஸ்தாவால் திருட்டு) 384 (மிரட்டல்), 386 (மிரட்டல் மூலம் பீது), 420 (மோசடி), 408 (ஊழியர் அல்லது குமாஸ்தாவின் நம்பிக்கை துரோகம் servant), 120பி (சதி) மற்றும் ஐடி சட்டம், 2008 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா.பி | தமிழில்: சைபர்சிம்மன்