உணவோடு அன்பையும் பரிமாறும் சென்னை அமைப்பு!

தன்னார்வலர்கள் குடும்பமாய் இணைந்து உணவு சமைத்து, தேவையானோருக்கு அளித்து மகிழும் கபே வித் கேர்!

6

மனிதன் உயிர் வாழ அத்தியாவசியமான ஒன்று உணவு. அந்த உணவை ஏதோ ஒரு வழியில் நாம் அனைவரும் தேடிக் கொள்கிறோம். இங்கு ருசிக்காக சாப்பிடுவர் சிலர் இருக்க; பலர் பசிக்காக உணவு உண்கிறார்கள். பசியால் உண்ணும் இவர்கள் விருந்தையும் விருந்தோம்பலையும் ருசித்திருக்க மாட்டார்கள். அவ்வாறு பொருளாதார, உடல் மற்றும் மன ரீதியாக பின் தங்கிய குழைந்தைகள், முதியோர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோரை கண்டறிந்து விருந்து போடுகின்றனர் “கபே வித் கேர்” (CWC- Cafe with care ) குழு.

CWC குழு
CWC குழு

இந்த மாதத்துடன் ஓர் ஆண்டு முடிந்து இரண்டாவது ஆண்டில் உற்சாகமாய் அடி எடுத்து வைகின்றனர். பெங்களூர் சேவா கபே-இன் (விலையில்லா உணவை தரும் உணவகம்) மூலம் ஈர்க்கப்பட்டு பிறந்ததே இந்த ’கபே வித் கேர்’. ஜூலை 2016 தொடங்கி மாதம் ஒரு காப்பகத்தையோ அல்லது பின் தங்கிய கிராமத்தை தேர்ந்தெடுத்து இந்த குழு தங்கள் தன் ஆர்வலர்களுடன் சென்று அவர்கள் இடத்திலே சமைத்து அவர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்கின்றனர். உணவையும் தாண்டி பல பொழுதுப்போக்கு மற்றும் விழிப்புணர்வு நாடகங்களையும் நடத்துகின்றனர்.

“நாம் பசியில் இருக்கும்போது ருசியை அறிவதில்லை கிடைப்பதை உண்கிறோம். வெளியில் பசியார ஏதோ ஒன்றை நாம் உண்ணாலும், அம்மா சமைத்த ருசியான சாப்பாட்டிற்கு நாம் ஏங்குவோம். அதே போல் காப்பகத்திலோ அல்லது ஏதோ ஒரு இடத்திலோ கிடைப்பதை உண்கிற இவர்கள் வீட்டு உணவையும் ஆரோக்கியமான உணவையும் உண்டிருக்கமாட்டார்கள். அவர்களுக்கு விருந்தளிக்கவே இந்த அமைப்பு தோன்றியது,’” என்கிறார் கபே வித் கேர் உறுப்பினர் சிவா.

இந்த ஒரு வருடத்தில் பல மாற்றங்களையும் பல முன்னேற்றங்களையும் இந்த குழு ஏற்படுத்தியுள்ளது. உணவு தயாரித்து பரிமாறுதலில் மட்டும் தொடங்கிய கபே வித் கேர் தற்பொழுது ஆர்கானிக் பொருளை மட்டுமே பயன்படுத்தி சமைகின்றனர், பின் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்கின்றனர். உணவை உணவாக மட்டும் சமைக்காமல் சமூக அக்கறையுடன் இனைந்தும் செயல்படுகின்றனர். இனி வரும் காலாத்தில் தாங்களே தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆர்கானிக் பார்மிங் மூலம் வளர்க்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவே கபே வித் கேரின் சிறந்த அம்சமாகும். 

இது வரை இவர்கள் விஸ்ராந்தி முதியோர் இல்லம், பாலவாக்கம்; செயின்ட் லூயிஸ் காது மற்றும் வாய் பேச முடியதவர்களுக்கான பள்ளி, அடையார்; கண் பார்வை இல்லாதவர்களுக்கான பள்ளி, பூவிருந்தமல்லி; இருளர் சமுகம், பழவேலி; போன்ற இன்னும் பல இடங்களில் தங்கள் அன்புக் கரங்களை நீட்டியுள்ளனர்.

இதை தவிர்த்து கபே வித் கேரின் மிக முக்கியமான நிகழ்ச்சி லயோலா கல்லூரியில் நடந்த “We are your voice – 2017” வேலை முகாம். மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட இந்த முகாமில் பல உணவகங்கள் கூடாரம் இட்டு இருந்தனர். அதில் கபே வித் கேரும் ஒன்று, ஆனால் அதில் ஒரே ஒரு வித்தியாசம்தான், இவர்கள் விலையை குறிப்பிட மறந்தார்கள். வேலை தேடி வந்த 5000-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திராட்சை ஜூஸ் (Fresh Grape Juice) வழங்கப்பட்டது. CWC-க்கு அதிகமான வரவேற்பு கிடைக்க அதிக ஸ்பொன்சர்சையும் ஈர்த்தது.

நேற்றைய, முன்தினம் தங்கள் ஓராண்டு நிறைவை “அன்னை சத்யா மகளிர் காப்பகத்தில்” பல பெண் குழந்தைகளுடன் செலவிட்டனர். தன்னார்வலர்கள் உணவு சமைத்து பரிமாறியது மட்டும் அல்லாமல் குழந்தைகளுடன் தனிப்பட்ட முறையில் பேசி அவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

“CWC-இன் முதலாம் ஆண்டு நிகழ்ச்சியே எங்களுக்கு மிகப் பெரிய மைல்கல்லாகும், மற்ற நிகழ்வை காட்டிலும் இதில் அதிக மன திருப்தி அடைகிறோம். காரணம் இது மற்ற உணவு சார்ந்த அமைப்பில் இருந்து தனித்துவமாக வளர்ச்சி பெற்றுள்ளது,” என்கிறார் cwc-இன் முக்கியக் குழுவினர் சந்திரா. 

இன்னும் வரும் காலங்களில் அன்புச்சுவர் போல் ’டோரா டப்பா’ என்ற புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளனர். வீட்டில் வெளியிலோ அல்லது அலுவுலகத்தில் ஒரு பெட்டியை வைத்து அதில் தங்களுக்குத் தேவை இல்லாத பொருட்களை போடலாம். அந்த பொருட்களை சேகரித்து இல்லாதவருக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர்.

“இந்த அமைப்பில் தலைவர் என்று யாரும் கிடையாது, அனைவரின் ஒப்புதலையும் பெற்று கூட்டு முயற்சியில் செயல் படுகின்றனர். 10 வயதில் இருந்து 60 வயது வரை இங்கு வயது வேறுபாடின்றி தன்னார்வலர்கள் உள்ளனர்,” என்றார் மற்றொரு குழுவினர் யாஸ்மின் 

ஏதோ ஒரு வகையில் உணவு என்று அளிக்காமல், வீட்டில் சமைப்பது போன்று ஆரோக்கியமாகவும் மிக கவனத்துடன் சமைக்கின்றனர். விருந்தோம்பலையும், வந்தவரை வாழ வைக்கும் இந்த சமூகத்திலும் பசியால் பலர் வாடுகின்றனர். அவர்களின் பசியாற்ற இது போன்று இன்னும் பலபேர் முன்வர வேண்டும்.