வீடற்று வீதியில் அலைந்த ஆக்ஸ்போர்டு பட்டதாரி முதியவர்: முகவரி தந்த ஃபேஸ்புக் பதிவு!

7

வீடற்று வீதியில் படுத்துறங்கி வந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பட்டதாரியான 76 வயது முதியவருக்கு, ஃபேஸ்புக் பதிவின் மூலம் தற்போது முகவரி கிடைத்துள்ளது.

சமூகவலைதளம் என்பது கத்தி போன்றது, அதை நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் நன்மையும் தீமையும் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது டெல்லியில் நடந்த சம்பவம் ஒன்று.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் ராஜா சிங் (76). மகன்களால் கைவிடப்பட்ட இந்த முதியவர், தனது தள்ளாத வயதிலும் உழைத்துச் சாப்பிட வேண்டும் என வைராக்கியமாக வாழ்ந்து வருபவர்.

தன் ஒவ்வொரு வேளை உணவையும், தன் உழைப்பில் கிடைத்த ஊதியத்தின் மூலமே பெற வேண்டும் என்பது இவரது கொள்கை. இதற்காக தினமும் அனுமந்த் மந்திர் எனும் இடம் அருகே உள்ள தூதரக அலுவலகத்துக்குச் சென்று, விசா கோரி அங்கு வருபவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய இவர் உதவுகிறார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார் ராஜா சிங்.

 சமயங்களில் உணவு வாங்கும் அளவிற்கு இவருக்கு வருமானம் கிடைக்காது. அந்த சமயங்களில்கூட, உணவுக்காக யாரிடமும் கையேந்திட மாட்டார். பட்டினியாகவே இருப்பார். அடுத்தவேளை உணவை உழைத்தே, தனது வருமானத்தில் வாங்குவது இவரது வழக்கம்.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற ராஜா சிங், 60 வயது வரை வெளிநாட்டில் தான் வசித்து வந்துள்ளார். பின் தன் சகோதரர் பி.எஸ்.புல்லின் வற்புறுத்ததால் இந்தியா திரும்பியுள்ளார்.

சகோதரருடன் சேர்ந்து பல்வேறு தொழில்களை அவர் செய்து வந்தார். ஆனால் ராஜா சிங்கின் சகோதரர் புல், மது அருந்துவதை மட்டுமே முழு நேர தொழிலாக செய்து வந்தார். இதனால் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் கடுமையாக உழைத்து, தமது இரு மகன்களையும் வெளிநாட்டில் படிக்க வைத்து, அங்கேயே அவர்களுக்கு வேலையும் வாங்கித் தந்தார் ராஜா சிங்.

ஆனால், படித்து முடித்து நல்ல வேலை கிடைத்ததும் வெளிநாட்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே அவரின் இரண்டு மகன்களும் தங்கி விட்டனர். ஒரு மகன் அமெரிக்காவிலும், மற்றொரு மகன் இங்கிலாந்திலும் நிரந்தரமாக குடியேறிவிட்டனர்.

வெளிநாட்டில் வசதியாக வாழ்ந்து வரும் அவர்கள், ஏற்றி விட்ட ஏணியை மறந்தனர். இதனால் தள்ளாத வயதிலும் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ராஜாசிங்கிற்கு ஏற்பட்டது. 

சில ஆண்டுகளுக்கு முன், ராஜாசிங்கின் மனைவி காலமானார். இதனால் தனிமையில் தள்ளப்பட்ட ராஜாசிங், தெருக்களில் படுத்துறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

கடும் வறுமையிலும், பிறரிடம் யாசகம் கேட்டு வாழ்வதை வெட்கக்கேடாக நினைத்த அந்த முதியவர் நேர்மையுடன் உழைத்து தன் மீதி நாட்களை கழிக்க விரும்பினார். எனவே, டெல்லியின் கனாட் ப்ளேஸ் பகுதியில் உள்ள ஒரு பொதுக்கழிப்பிடத்தில் தினமும் காலை குளித்து, அனுமந்த் மந்திர் எனும் இடம் அருகே உள்ள தூதரக அலுவலகத்துக்கு சென்று, விசா கோரி அங்கு வருபவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யத் தொடங்கினார். 

இரவுகளை ரயில் நிலையத்திலோ அல்லது தெருக்களின் நடைபாதைகளிலோ படுத்துரங்கி கழித்து வந்தார் அவர். 

மகன்கள் அவரைக் கைவிட்ட போதும், மனிதநேயம் கொண்ட சிலரின் உதவி அவருக்குக் கிடைத்தது. ஆட்டோக்காரர் ஒருவர் தமது ஆட்டோவில் தினமும் காலை ராஜா சிங்கை அழைத்துக்கொண்டு போய் தூதரக அலுவலம் முன் இறக்கிவிடுகிறார்.

ராஜா சிங்கின் வாழ்க்கைக் குறித்து கேள்விப்பட்ட நபர் ஒருவர், அவரது புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ராஜா சிங் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், அதில் இருந்து அவர் மீண்டு வந்த விதம், தள்ளாத வயதிலும் யாசகம் கேட்காமல் உழைத்து வாழும் உறுதி போன்றவற்றைப் பற்றி அவர் விரிவாக எழுதி இருந்தார்.

இந்தப் பதிவு சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகப் பரவியது. அதனைத் தொடர்ந்து, முதியவர் ராஜா சிங்குக்கு உதவு பலத்தரப்பட்ட மக்கள் முன்வந்துள்ளனர்.

ஃபேஸ்புக் பதிவின் பயனாக, அவருக்கு தற்போது குருநாகக் சுக்சாலா எனும் இடத்தில் தங்க இடம் கிடைத்துள்ளது. அவரை பலரும் தற்போது அங்கு வந்து பார்த்து செல்கின்றனர்.

குடியிருக்க இடம் கிடைத்துவிட்ட போதிலும், தமது வழக்கமான பணிகளை செய்ய தவறுவதில்லை ராஜா சிங். வழக்கம்போலவே தினமும் விசா விண்ணப்பிக்க வருபவர்களுக்கு உதவி பின் மதியம் குருநாகக் சுக்சாலாவில் உள்ள தமது குடியிருப்புக்கு திரும்பிவிடுகிறார் அவர்.

இந்த வயதிலும் உழைத்து உண்ண வேண்டும் என்பதில் மிக உறுதியுடன் இருக்கும் ராஜா சிங்கிற்கு ஆக்ஸ்போர்டு தராத முகவரியை ஃபேஸ்புக் பதிவு தந்திருக்கிறது.

பழி வாங்கும் நடவடிக்கைகளாக ஆபாச படங்களை வெளியிடுவது போன்ற பல விரும்பத்தகாத செயல்களுக்கு சமூகவலைதளப் பக்கங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் சம்பவங்களின் போது மக்களுக்கு உதவுவது போன்ற நல்ல விஷயங்களுக்கும் அவை பயன்பட்டே வருகின்றன.

அந்தவகையில் ராஜா சிங்கிற்கு வீடு கிடைக்க உதவி, மீண்டும் தன் நல்ல முகத்தை நிரூபித்துள்ளனர் ஃபேஸ்புக்கும், நெட்டிசன்களும். 

Related Stories

Stories by jayachitra