பயணத்தை பகிர்ந்து கொள்ள உதவும் 'மெர்ரிட்ரிப்ஸ்' செயலி

வட இந்திய இளைஞர்கள் சென்னையை தொழில்முனை தளமாக மாற்றிக் கொண்ட கதை

0

எந்த ஒரு உருவாக்கமும் நாம் அன்றாடம் சந்திக்கும் சவால்களை பூர்த்தி செய்யும் தீர்வாக அமைந்தால், அதற்கு ஆதரவு நிச்சயம் கிட்டும். இதற்கு சான்றாக உள்ளது "மெர்ரிட்ரிப்ஸ்" (Merry Trips).

மேற்படிப்பு அதுவும் பொறியியல் படிக்க அநேக வெளி மாநில மாணவர்கள் தேர்ந்தெடுப்பது சென்னையை தான். அப்படித்தான் வட மாநிலத்தை சேர்ந்த அர்விந்த் சௌத்ரி மற்றும் அபிஷேக் மெஹ்ரோத்ரா நான்கு வருடங்கள் முன் சென்னை வந்தனர். இந்த வருடத்தில் படிப்பை முடிக்கும் இவர்களுக்கு கல்லூரி மூலமாக வேலை வாய்ப்பு பெறும் சிந்தனையே இல்லை, ஏனன்றால் தங்களின் இரண்டாவது வருட படிப்பின் போதே இவர்கள் தொழில்முனைவர்கள் ஆகிவிட்டனர்.

புறநகர் மாணவர்களின் தலையாய பிரச்சனை

பெரும்பாலும் பொறியியல் கல்லூரிகள் சென்னையின் புறநகரத்தில் தான் உள்ளது என்று நாம் அனைவரும் அறிந்ததே. இங்கு படிக்கும் வெளி மாநில மாணவர்கள் பெரும்பாலும் விடுதியிலோ அல்லது அருகாமையில் வாடகை வீட்டிலோ வசிப்பார்கள்.

விடுமுறை தினங்களில் பொழுதுபோக்க அவர்கள் சென்னைக்கு தான் வருவர். இவர்கள் பெரும்பாலும் பேருந்து அல்லது ரயில் பயணத்தை தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது. இதில் உள்ள இடர்பாடுகள் பெரும் சவாலாக இருந்தது என்றும் கூறும் அர்விந்த், இதில் தான் தனது தொழிலுக்கான யோசனை உதித்ததாகவும் கூறுகிறார்.

"கூட்ட நெரிசலில் பயணிப்பது சவாலாக இருந்தது, அதிர்ஷ்டவசமாக என்னுடைய நண்பன் சில மாதங்கள் கழித்து கார் ஒன்றை கொண்டு வந்தான், வெளியில் செல்ல நண்பர்கள் அனைவரும் எரிபொருளுக்கான செலவை பகிர்ந்து கொள்வோம்." எங்களை போல் பல மாணவர்கள் விடுமுறை நாட்களில் சென்னையின் மையப் பகுதிக்கு பயணம் செய்ய சிரமப்பட்டதை கண்டேன். எனது இரண்டாவது வருட படிப்பின் பொழுது இதற்கான தீர்வு புலப்பட்டது என்கிறார் அர்விந்த்.

மெர்ரிட்ரிப்ஸ் (Merrytrips) ஆரம்பம் மற்றும் வரவேற்பு

2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது யோசனையை செயல்வடிவமாக மாற்ற ஆரம்பித்தார் அரவிந்த். அதே கல்லூரியில் படிக்கும் அபிஷேக் மேஹ்ரோத்ராவை சந்திக்க நேரிட்டது. அபிஷேக் ஆட்டோமொபைல் துறையில் பயின்று கொண்டிருந்தார். அபிஷேக்கின் நேர்மறை சிந்தனை மற்றும் ஆர்வம் இருவரையும் இணைத்தது.

இரண்டு மாதங்கள் பாக்கெட் பணத்தை சேமித்து பத்தாயிரம் முதலீடு செய்து, கார்பூலிங் அதாவது பயணம் மேற்கொள்ள ஒரே காரில் பங்கு கொண்டு பலர் பயணிக்கும் வசதியை ஏற்படுத்தும் இணையதளத்தை உருவாக்கினர்.

தங்களது முயற்சியை நண்பர்கள் மூலமாக அவர்கள் கல்லூரியில் பரப்பினர். ஆரம்பித்த 3 நாட்களுக்குள் இருநூறுக்கும் அதிகமான பயணப் பதிவுகள் வந்தன. இந்த வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை இவர்களுக்கு தந்தது.

வரவேற்பு ஒருபுறமிருக்க மெர்ரிட்ரிப்ஸ் தளத்தை மேலும் செம்மைபடுத்த ஆரம்பித்தனர்.  செயல்வடிவம் மற்றும் இணையத்தளம் ஆகியவற்றை மேற்கொள்ள எங்களுக்கு நான்கு மாதம் ஆனது. முழுவதும் மாணவர்களை கொண்டே இந்த முயற்சியில் ஈடுபட்டோம் என்று கூறும் அபிஷேக் எங்கள் சக மாணவர்கள் தான் எங்களின் முயற்சியை பிற மாணவர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர் என்கிறார்.

"வெளிமாநில மாணவர்களுக்கு கார் வசதி இல்லாததும் பொது போக்குவரத்தில் இருந்த சிரமமும் எங்களின் முயற்சிக்கு அமோக வரவேற்பை பெற்றுத் தந்தது. எங்கள் கல்லூரியில் இருக்கும் மாணவர்களின் உந்துதலில் பிற கல்லூரிகளுக்கும் எங்கள் சேவையை பற்றி பரப்ப ஆரம்பித்தோம்." என்கிறார் அர்விந்த்.

இவர்கள் படிக்கும் SRM கல்லூரியை தவிர விஐடி,(VIT) சென்னை அண்ணா பல்கலைகழகம் மற்றும் ஐஐடி (IIT) இல் படிக்கும் மாணவர்கள் இவர்களின் சேவையை உபயோகப்படுத்துகின்றனர்.

எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அதற்கான விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்தால், அதே எண்ணத்தில் இருக்கும் மற்ற மாணவர்களுடன் இணைந்து ஒரே வண்டியை; கால் டாக்சி அல்லது சொந்த கார் உடையவர்களுடன் புக் செய்து சேர்ந்து பயணிக்க முடிகிறது. பயணத்திற்கு ஆகும் செலவை பகிர்ந்து கொள்ள முடிவதும், பணத்தை சேமிக்க உதவுவதுமே மெர்ரிட்ரிப்ஸ் முயற்சின் வெற்றி.

இந்த கார் பூலிங் வடிவம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்ததை பற்றி கேள்விப் பட்டோம். மேலும் ஓரிரு பெரிய நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியையே தந்தது. ஏனெனில் எங்களின் சேவையை பிறரிடம் எடுத்துரைக்க அதிக சிரமப்பட வேண்டியதில்லை, அந்த வகையில் எங்களின் சந்தைபடுத்தும் செலவு குறைவதகாவே இதை பார்க்கிறோம்" என்கிறார் அர்விந்த்.

சென்னை வழங்கும் வாய்ப்பு

சென்னை நகரத்திற்கு படிக்க வந்த இவர்கள் இங்கே தொழில் முனைய வேண்டும் என்ற முனைப்பை ஆழமாக பதிவு செய்கின்றனர். "சென்னையில் வாய்ப்புகளுக்கு பஞ்சமே இல்லை, இருந்த போதிலும் மற்ற நகரங்களை போல் தொழில்முனைவு ஏன் முன்னிறுத்தப்படுவதில்லை என்பது எங்களுக்கும் ஆச்சர்யமாக தான் உள்ளது." என்கின்றனர் இருவருமே. மற்ற மாநிலங்களுக்கு விரிவுப் படுத்தும் திட்டம் இருந்தாலும் சென்னை தான் எங்களின் தலைமையிடமாக இருத்தல் வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். இதற்கு அவர்கள் கூறும் காரணம் "தொழில்முனை வட்டத்தில் இன்று சென்னை முக்கிய இடமோ முன்னிலையோ பெறாவிட்டாலும், விரைவில் இந்த நிலை மாறும். அப்பொழுது இங்கு வெற்றி பெற்ற தொழில்முனை நிறுவனங்கள் வரிசையில் நாங்களும் இடம் பெறுவோம்" என்கிறார்கள். IIT அல்லது IIM போன்ற கல்லூரியிலிருந்து வரும் மாணவர்கள் மட்டுமே வெற்றிகரமான தொழில்முனைவர்களாக முன்னிறுத்தப்படுகிறார்கள், அந்த எண்ணத்தையும் எங்களை போன்றவர்கள் களைய வேண்டும்.

இணையத்திலிருந்து செயலிக்கு மாற்றம்

இரண்டு மாதம் முன்பாக எங்களின் மெர்ரிட்ரிப்ஸ் சேவையை முழுவதுமாக செயலி மூலமான பயன்பாட்டிற்கு மாற்றினோம். இந்த செயலியை சென்னைய் ஐஐடியில் நடைபெற்ற டெர்ரி பாக்ஸ் நிகழ்வில் வெளியிட்டோம். ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே கிட்டத்தட்ட ஆயிரம் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது எங்களுக்கு எண்ணூறு பதிவு வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதம் சுமார் ஆயிரம் பயண விருப்பங்களை மாணவர்கள் பதிவேற்றம் செய்கின்றனர்.

இந்த செயலியிலும் தற்போது வெவ்வேறு மாறுதல்களை புகுத்திக் கொண்டிருக்கிறோம். நவம்பர் மாதத்தில் முழுமையான செயலி பயன்பாட்டில் இருக்கும்.

கடந்து வந்த பாதை

இந்த தொழிலை ஆரம்பித்த புதிதில் சென்னையில் அப்பொழுது தான் காலடி வைத்த ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டோம். மிகப் பெரிய அளவில் வந்த பயண பதிவுகளை கணக்கிட முடியாத அளவுக்கு வர்த்தகத்தை அவர்களுக்கு அளித்தோம், சில காரணங்களால் அவர்களுடனான ஒப்பந்தத்தை முறிக்க வேண்டியதாயிற்று. பின்னர் சென்னையில் செயல் படும் நிறுவனத்திடம் சில காலம் பரிவர்த்தனை செய்தோம்.

தற்பொழுது எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனத்திடமும் ஒப்பந்தமில்லை. வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு இருக்கும் கூப்பன் சலுகைகள் மற்றும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப எந்த கால் டாக்சி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.

உந்துதல்

அர்விந்த் மற்றும் அபிஷேக்கின் இந்த தொழில்முனை முயற்சி இவர்களுக்கு பரிசுகளையும் நற்பெயரையும் பெற்றுத்தந்திருக்கிறது. குஜராத் மாநிலம் நடத்திய icreate நிகழ்வில் முதல் ஐந்து தொழில்முனை நிறுவனங்கள் வரிசையில் மெர்ரிட்ரிப்ஸ் இடம்பெற்று ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத் தொகையை பெற்றுள்ளனர். NEN இவர்களை மிகுந்த நம்பிக்கைக்குரிய தொழில்முனை நிறுவனமாக தெரிவு செய்துள்ளது.

பெற்றோர்களின் ஆதரவு பற்றி கேட்ட பொழுது, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த சொல்வார்களோ என்ற பயம் காரணமாக பெற்றோர்களிடம் இவர்களின் முயற்சி பற்றி கூறவே இல்லை என்கிறார்கள். அர்விந்த் விவசாய குடும்பத்தை சார்ந்தவர், அவரின் பெற்றோர் ராஜஸ்தான் மாநிலத்திலும் அண்ணன் அஹமதாபாதிலும் உள்ளார். எங்களின் முயற்சி பற்றி அறிந்து கொண்டு எங்களிடம் கேட்டது சுவாரஸ்யமான சம்பவம் என்கிறார் அர்விந்த். NEN அவர்களை தெரிவு செய்தது DNA பத்திரிகையில் இடம் பெற்றது, அந்த செய்தியை அவருடைய அண்ணன், பெற்றோரிடமும் அரவிந்துக்கும் தகவல் அனுப்பியுள்ளார். "ஒரு விடுமுறை நாளில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது என் அண்ணனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. என்ன செய்து கொண்டிருக்கிறாய் சென்னையில் என்று கேட்டார், என்ன விவரம் என்று தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறேன் என்றதும் முதலில் வாட்ஸாப்பை பார்க்க சொன்ன போது தான் எங்களுக்கே எங்களைப் பற்றி செய்தி வந்தது தெரிந்தது." படிப்பிலும் முழு கவனம் செலுத்துவதால் பெற்றோரின் ஆதரவு கிட்டியது என்கிறார் அர்விந்த்

சவால்கள்

இந்த நான்கு வருட தொழில் அனுபவம் எங்களை மிகவும் மெருகேற்றியுள்ளது. ஆரம்பித்த புதிதில் எங்களின் திட்டங்களை நாங்கள் ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்கள் மற்றும் சிலரிடம் பகிர்ந்து கொண்டதில், எங்களின் எண்ணங்களை அவர்களின் வர்த்தகத்தில் இலகுவாக புகுத்திக் கொண்டதை பார்த்தோம். எவற்றை பகிருவது எவற்றையெல்லாம் பகிரக் கூடாது என்பது நாங்கள் கற்றுக் கொண்ட பெரிய படிப்பினை.

சவால்கள் என்று பெரிதாக சந்தித்தில்லை என்று கூறும் அவர்கள், முதல் வாடிக்கையாளரின் அனுபவம் மறக்க முடியாதது என்கின்றனர். சக கல்லூரி மாணவியான அவர் அதிகாலை நான்கு மணிக்கு விமான நிலையம் செல்ல பதிவேற்றம் செய்திருந்தார். குறிப்பிட்ட நேரத்திற்கு அவர் புக் செய்த டாக்சி வரவில்லை, மாணவி அபிஷேக்கிடம் முறையிட, உடனடியாக நண்பரின் காரில் மாணவியர்களை அவரே விமான நிலையத்தில் கொண்டு சேர்த்தார். இன்று வரை அம்மாணவி மெர்ரிட்ரிப்ஸ்ஸின் வாடிக்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர அவர்களின் சேவையை உபயோகித்த மற்றொரு மாணவன் அவர்களை வாழ்த்தி அனுப்பிய குறுந்தகவல், நெகிழ்ச்சியை அளித்ததாக கூறுகின்றனர்.

செயல்பாடு

மெர்ரிட்ரிப்ஸ் செயலி எவ்வாறு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது என்று கேட்டோம். "எங்களின் செயலியில் மூலம் உங்கள் பயணத்தை பகிர்ந்து கொள்ளவோ அல்லது மற்றவருடன் சேர்ந்து பயணிக்கவோ முடியும். நாங்களும் மாணவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆதலால் எங்கள் சக மாணவியரின் பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த கவனம் கொள்கிறோம்." எங்கள் செயலியில் முகநூல் அல்லது லின்க்டின் (Linkedin) மூலமாக மட்டுமே செயல்பட முடியும். அதிலேயே சில வடிகட்டிகளை எங்களின் செயலியில் புகுத்தியுள்ளோம், உதாரணமாக உங்களின் படம் இல்லாமல் ஏதாவது பொதுவான படத்தையோ அல்லது பிரபலங்களின் படத்தையோ சுயவிவர படமாக வைத்துக் கொண்டால் உங்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளவே பட மாட்டாது. மேலும் மெர்ரிட்ரிப்ஸ் மதிப்பீடு உள்ளது, விண்ணப்பிக்கும் பயணி பற்றி அவருடன் சென்ற பிற பயணிகளின் அனுபவம் மற்றும் மதிப்பீடு பற்றி அறிந்து கொள்ளலாம். இவற்றையெல்லாம் சரி பார்த்த பின்னரே பயணத்துக்கான விண்ணப்பதை ஏற்று கொள்வது நல்லது.

எதிர்கால திட்டம்

தற்பொழுது சென்னையில் மட்டுமே செயல்படுகிறோம். விரைவில் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புனே, டெல்லி, ஜெய்பூர் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் எங்களின் சேவையை அறிமுகம் செய்யவுள்ளோம். மேலும் செயலியை அறிமுகம் செய்த நோக்கமே மாணவர்களை தாண்டி மற்றவர்களுக்கும் எங்களின் சேவையை கொண்டு செல்ல வேண்டும் என்பதே, அந்த வகையில் தற்போது சில தொழில்நுட்ப நிறுவனங்களிலும் எங்களின் செயலியை உபயோகப்படுத்த ஆரம்பித்துள்ளனர். பல திட்டங்கள், முதல் கட்ட ஆலோசனை நிலையில் தற்பொழுது உள்ளது.

"இந்தியாவின் சொந்த பயணப் பகிர்வு தளமாக மெர்ரிட்ரிப்ஸை முன்னிறுத்தவே விரும்புகிறோம். குறைந்த செலவில் அதிக பயணம் என்பதே எங்களின் தாரக மந்திரம்".

இரண்டு நபர்களுடன் ஆரம்பித்த மெர்ரிட்ரிப்ஸ் தற்போது நான்கு நபர்கள் கொண்ட முக்கிய அணியுடன் மொத்தம் இருபத்தியைந்து நபர்கள் கொண்ட நிறுவனமாக செயல்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருட ஆரம்பத்தில் அறிவிக்கமுடியாத விதை நிதியை  மெர்ரிட்ரிப்ஸ் பெற்றுள்ளது. மேலும் தற்பொழுது வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமும் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் இருப்பதாக தெரிவித்தனர்.

தரவிரக்கம் செய்ய: MerryTrips