ஆரோக்கிய வாழ்க்கையை பெற பிரபல வழக்கறிஞர் ஜெயராம், இயற்கை விவசாயி ஆன கதை! 

34 வருடங்கள் சட்டத் துறையில் வழக்கறிஞராக இருந்த ஜெயராம். தன் ஆர்வத்தினால் ஆர்கானிக் விவசாயத்துறைக்கு மாறினார். 

0

நீலமங்கலாவில் ஆர்கானிக் நிலம், பெங்களூருவில் ஒரு ரீடெய்ல் ஸ்டோர் மற்றும் ரெஸ்டாரண்ட், கூர்க் பகுதியில் ஒரு தங்குமிடம் என நான்கு வெவ்வேறு வென்சர்கள் கொண்டுள்ளார் ஜெயராம்.

’தி க்ரீன் பாத் இகோ ரெஸ்டாரண்ட்’ (The Green Path), பெங்களூருவின் முக்கியப் பகுதியில் அமைந்திருந்தாலும் பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து விலகி ஒரு அமைதியான சூழலைத் தருகிறது. மறுசுழற்சிக்கு உகந்த பர்னிச்சர்கள், அறையை அலங்கரிக்கும் செடிகள், விற்பனைக்கு அடுக்கிவைக்கப்பட்ட சிறுதானியங்கள் என ஒரு பசுமையான சோலையாகவே காணப்படுகிறது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கட்டிடம் கடுமையான கோடைக்காலங்களிலும் ஏசியின்றி குளுமையாக இருப்பது மர்மமாகவே உள்ளது. ஒரு கப் டீயை சுவைத்தவாறே சுற்றிலும் பார்வையை செலுத்தினேன். அறுபதுக்கும் அதிகமான வயது மதிக்கத்தக்க அந்த நபர் என்னை புன்னகையுடன் வரவேற்றார்.

ஜெயராம் கர்நாடக மாநிலத்தில் அதிக அளவிலான மோட்டார் வழக்குகளை பதிவு செய்த ஒரு பிரபலமான வழக்கறிஞர். இன்று ஆர்கானிக் விவசாயத்தை கையிலெடுத்துள்ளார். 34 வருடம் வழக்கறிஞராக பயிற்சி பெற்ற இவர் இன்று நீலமங்கலாவில் ஆர்கானிக் நிலம், ஒரு ரீடெய்ல் ஸ்டோர், ஆர்கானிக் உணவுப்பொருட்கள் விற்பனை மற்றும் ஆர்கானிக் உணவுகளை பரிமாறும் ரெஸ்டாரண்ட், கூர்க் பகுதியில் தங்குமிடம் ஆகியவற்றிற்கு சொந்தக்காரர்.

சிறிய நகரத்தைச் சேர்ந்த சிறுவன்

தமிழகம் மற்றும் கர்நாடகாவின் எல்லைப்பகுதியில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஜெயராம் மிகவும் கடுமையான குழந்தைப்பருவத்தைக் கடந்து வந்துள்ளார். அவரது பெற்றோர் இருவரும் இரு வேறு சாதியினர் என்பதால் அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல் குடும்பத்தினர்கள் அவர்களை ஒதுக்கி வைத்தனர். உறவினர்களின் தொடர்பின்றியே ஜெயராமும் அவரது இரண்டு இளைய சகோதரர்களும் வளர்ந்தனர். விவசாய வேலைகளில் பெற்றோர்களுக்கு உதவினார்கள். பிற்காலத்தில் ஜெயராம் விவசாயத்தை தேர்ந்தெடுத்ததற்கு அவரது சிறு வயது நினைவுகள் உந்துதல் அளித்தது. ஜெயராம் நினைவுகூறுகையில்,

"கஷ்டமான குடும்ப சூழலிலும் நாங்கள் நன்றாக படிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த என்னுடைய அம்மா எங்களை அருகிலிருந்த அரசு பள்ளியில் சேர்த்தார்."

அவரது சொந்த கிராமத்திலேயே ஆரம்ப பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். அவரிடமிருந்த திறமை அறியப்பட்டதால் அவரது கிராமத்திற்கு புறநகர் பகுதியில் இருந்த ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்டார். சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது எதிர்காலம் தெளிவற்றதாகவே இருந்தது. அவரது குடும்பம் சமூகத்துடன் ஒருங்கிணையவேண்டும் என்பதற்காகவே கல்லூரி படிப்பைத் தொடர பெங்களூருவிற்கு செல்ல திட்டமிட்டார் ஜெயராம்.

நகரத்தில் தனக்கான ஒரு அடியாளத்தை கண்டறிதல்

1972-ல் இளம் வயதான ஜெயராம் நகரத்திற்கு மாற்றலான போது ஒரு கம்யூனிட்டி ஹாஸ்டலில் தங்கினார். அங்கே தங்குமிடம் மற்றும் உணவு அனைத்துமே ஏற்பாடு செய்யப்படும். அவர் கூறுகையில்,

வருடாந்திர கட்டணமாக 55 ரூபாய் செலுத்தவேண்டும். அந்த காலகட்டத்தில் அதுவே மிகப்பெரிய தொகையாகும். என்னுடைய வாழ்க்கைப் பயணத்தையும் மதிப்பெண்ணையும் அறிந்த என்னுடைய கல்லூரி முதல்வர் ஏதேனும் மெயின்ஸ்ட்ரீம் பிரிவில் படிப்பைத் தொடர வலியுறுத்தினார். ஆகவே ரேணுகாச்சாரியா கல்லூரியில் சட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். இதனால் எனக்கு ஏற்பட்டது போன்ற சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக என்னால் குரலெழுப்ப முடியும் என்பதும் நான் சட்டப் பிரிவை தேர்ந்தெடுத்ததன் முக்கிய காரணமாகும்.

பல வழக்குகளில் வெற்றிபெற்ற பிரபலமான வழக்கறிஞர்களிடம் உதவியாளராக சேர்ந்தார் ஜெயராம். அவர்களின் வழிகாட்டுதலுக்குப் பிறகு தனியாக நிறுவனத்தைத் துவங்கி மோட்டார் வழக்குகளில் முன்னணி வழக்கறிஞராக மாறினார். புன்னகைத்தவாறே ஜெயராம் கூறுகையில்,

ஒரு கட்டத்தில் எனக்குக் கீழே 30 வழக்கறிஞர்கள் இருந்தனர். சட்டத் துறையில் வெற்றிகரமாக செயல்பட்டேன்.

மாற்றம்

அப்போதைய வெற்றி என்பது நிதிநிலையை மேம்படுத்துவதாக இருந்தது. அதை அடைந்த பிறகு அவர் தனது இலட்சியம் நிறைவேறியதாக நினைக்கவில்லை.

1998-ல் அவர் சட்டத்துறையிலிருந்து விலக ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். நீலமங்களாவில் எட்டு ஏக்கரில் ஒரு நிலத்தை வாங்கினார். அப்போது அது யூக்கலிப்டஸ் தோப்பாக இருந்தது. அந்த ஒட்டுமொத்த இடத்தையும் சுத்தபடுத்தி அந்த தரிசு நிலத்தை விவசாயத்திற்கு உகந்த நிலமாக மாற்றினார். ஜெயராம் விவரிக்கையில்,

சோளம் மற்றும் கம்பு பயிரிடத் துவங்கினோம். ஆரம்பத்தில் இந்த பயிர்களுக்கு ரசாயனங்களைப் பயன்படுத்தியபோதும் ஆர்கானிக் விவசாயமாக மாற்ற மற்றுமொரு அடியை மட்டும் எடுத்துவைத்தாலே போதும் என்பதை விரைவிலேயே உணர்ந்தோம். என்னுடைய பெற்றோர் விவசாயத்தில் ஈடுபட்டபோது எந்தவித ரசாயனங்களும் பயன்பாட்டில் இல்லை. இதனால் ரசாயனங்களற்ற விவசாயத்தையே என்னுடைய பெற்றோர் பின்பற்றியதால் ஆர்கானிக் விவசாயத்திற்கு மாறியது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

இன்று அந்த தரிசு நிலம் 15 உள்ளூர் விவசாயிகள் பணிபுரியும் ஒரு செயற்கை ஏரி மற்றும் பால் பண்ணைகளைக் கொண்ட 40 ஏக்கர் விவசாய நிலமாக மாறியுள்ளது. இந்த நிலத்தில் கால்நடைகளின் கழிவுகளை உரமாக மாற்றக்கூடிய ஒரு பயோகேஸ் ஆலையும் உள்ளது.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

பெங்களூருவை இந்தியாவின் ஆர்கானிக் தலைநகராக மாற்ற விரும்புகிறோம். என்னுடைய ப்ராஜெக்ட் மூலம் எண்ணற்ற தலைவர்களை உருவாக்க விரும்புகிறேன். பின்பற்றுபவர்களை அல்ல. அப்போதுதான் சமூகத்தில் மாற்றம் ஏற்படும்.

சந்தையில் செயல்படும் விதம்

வாழ்க்கைமுறை சார்ந்த நோய்கள் அதிகரித்திருப்பதால் ஆரோக்கியமற்ற உணவிற்கான ஒரு மாற்றை இன்று இந்தியா தேடி வருகிறது. ஆரோக்கியமான உணவிற்கான தேவை உள்ளது. ஆனால் நுகர்வோருக்கும் சந்தைக்கும் இடையே இருக்கும் இடைவெளி நிரப்பப்படவில்லை. இந்தப் பகுதியில்தான் ’தி க்ரீன் பாத்’ போன்ற நிறுவனங்கள் செயல்படுகிறது. இந்த நிறுவனங்கள் விவசாயியும் நுகர்வோரும் இணைய உதவுகிறது.

தி க்ரீன் பாத் ரீடெயில் ஸ்டோர் பல்வேறு சிறு விவசாயிகளுடன் பணிபுரிந்து அவர்களது விநியோக யூனிட்டாக செயல்படுகிறது. டிஜிட்டல் சந்தையில் நுழைவது குறித்து ஜெயராம் விவரிக்கையில்,

ஆன்லைன் சந்தையில் இன்னும் செயல்படவில்லை. எனினும் ஃப்ரெஷ்ஷான விளைச்சல்களை எளிதாக அணுகும் விதத்தில் இருக்கக்கூடிய எண்ணற்ற நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

தி க்ரீன் பாத்

இந்நிறுவனம் ஆர்கானிக் பயணங்களை ஊக்குவிக்கிறது. இவர்களது மாதிரியை மக்கள் பின்பற்ற இது உதவும். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஸ்வீடன், ஜெர்மனி, யூகே ஆகிய பகுதிகளிலிருந்து வருகின்றனர் என்றார் ஜெயராம்.

ஆர்கானிக் விவசாயத்தில் விருப்பமுள்ளவர்களுக்கு அதன் பயன்களை பட்டியலிடுகிறார் ஜெயராம்.

• ஆர்கானிக் விவசாயத்தில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்

• ஆரோக்கியமான விவசாய முறை ஊக்குவிக்கப்படுகிறது

• மண் பாதுகாக்கபட்டு தற்போதைய விவசாய முறையைக் காட்டிலும் நிலத்தின் பாதிப்பு குறைக்கப்படுகிறது

• ஆர்கானிக் விவசாய முறையில் குறைந்த நீரைக் கொண்டு அதிக விளைச்சலைப் பெறலாம்

• இன்று ஆர்கானிக் உணவிற்கான தேவையிருப்பதால் விவசாயத்திற்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்

’தி க்ரீன் பாத்’-தின் வெற்றி

இன்று தி க்ரீன் பாத் நிலம், ரீடெய்ல் ஸ்டோர், ரெஸ்டாரண்ட், ரிசார்ட் என நான்கு பிரிவிலும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் செயல்பட்டு 6 கோடி ஆண்டு வருவாயை ஈட்டி வருகிறது. இந்த நான்கு வெவ்வேறு ப்ராஜெக்ட்களில் ஒரு வருடத்திற்கு முன்பாக துவங்கப்பட்ட ரெஸ்டாரண்ட் விருதுகளை பெற்றுள்ளது.

ஆர்கானிக் துறையை ஊக்குவிப்பதில் அரசாங்கத்தின் பங்கு குறித்து ஜெயராம் விவரிக்கையில்,

இப்போது வரை ஆர்கானிக் துறைக்கு உதவும் வகையில் எந்தவித கொள்கைகளும் இல்லை. ஆனால் அப்படிப்பட்ட கொள்கையில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்புகிறோம். விவசாயமே நமது நாட்டின் எதிர்காலமாக இருக்கப்போகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாட்டில் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கப்படுவதில்லை. இந்தியாவிலுள்ள விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கும் மாற்று வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுப்பதற்கும் அவர்களுக்கு முறையான ஆதரவு கிடைக்காதது ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது.

ஆர்கானிக் பொருட்களை உட்கொள்ளவேண்டும் என்கிற தகவலை மக்களிடையே கொண்டு சேர்க்கவேண்டும். அனைத்து பொருளாதார பின்னணியைக் கொண்டவர்களும் ஆரோக்கியமான உணவையே உண்ணவேண்டும். இவற்றை நிறைவேற்ற முடிந்தால் மட்டுமே வெற்றியடைந்ததாக உணர்வேன் என்று விடைபெறுகையில் தெரிவித்தார் ஜெயராம்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி மோகன்