ட்ரம்ப்-ன் துணை செய்தி செயலாளர் ஆன இந்தியர் ராஜ் ஷா!

0

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ராஜ் ஷா என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை துணை செய்தி செயலாளராக நியமித்துள்ளார். ராஜ், வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்புகள் மற்றும் செய்தி சேவைகளை கவனித்துக் கொள்வார். இந்த அறிவிப்பை கடந்த செவ்வாய் அன்று ட்ரம்ப் வெளியிட்டார். 

ராஜ் ஷா, பத்திரிகைச் செய்தி மற்றும் ஊடக சேவைகள் சம்மந்தமான அனைத்து பணிகளையும் கையாள உள்ளார். ட்விட்டரில் பிரபலமாக இருக்கும் ட்ரம்பின் தகவல் தொடர்புப் பணிகளை கவனிப்பது ராஜ் ஷாவிற்கு முக்கிய பணியாக இருக்கும். கடந்த 8 மாதங்களில் பலரை தகவல் தொடர்புத்துறையில் இருந்து மாற்றியுள்ளார் ட்ரம்ப். இருப்பினும் அதன் தற்போதைய இயக்குனராக இருக்கும் ஹோப் ஹிக்ஸ் அந்த பணியை தொடர்கிறார். 

அரசியல் ஆராய்ச்சி மற்றும் தகவல் தொடர்பு யுக்திகளில் வல்லுனரான ஷா, ட்ரம்ப் தேர்தல் நேரத்தில் அவருடைய போட்டியாளர் ஹில்லாரி க்ளிண்டனின் பிரச்சாரத்தை முறியடிக்க உதவியுள்ளார். வெள்ளை மாளிகையில் சேர்வதற்கு முன், ரிபப்ளிக்கன் தேசிய குழுவின் ஆராய்ச்சி இயக்குனராக பணியில் இருந்தார் ராஜ் ஷா. 

ரிபப்ளிக்கன் தேசிய குழுவின் தலைவர் ரெயின்ஸ் ப்ரீபஸ்; ஷாவை வெள்ளை மாளிகைக்கு அழைத்துவந்து ட்ரம்பிற்கு அறிமுகப்படுத்தினார். வெள்ளை மாளிகையில் முக்கியப் பொறுப்பில் இருந்த ப்ரீபஸ் தற்போது பதவியில் இல்லையென்றாலும், அவர் அறிமுகப்படுத்திய ஷாவிற்கு உயரிய பதவியை ட்ரம்ப் அளித்துள்ளது அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. 

ட்விட்டரில் ட்ரம்ப் பல சர்ச்சைக்குரிய, பிரச்சனை தரக்கூடிய பதிவுகளை வெளியிடுவதால், அவரின் தகவல் தொடர்புத் துறையில் இருக்கும் அதிகாரிகள் பொது இடங்களிலும், குடும்பத்திலும் மரியாதையை இழப்பதால் பலரும் அந்த பணிகளை விட்டு வெளியேறி விடுவது வழக்கமாக உள்ளது. செய்தி செயலாளராக இருந்த சீன் ஸ்பைசர், ட்ரம்பின் செய்தி தொடர்பாளராக ஆறு மாதங்கள் மட்டுமே நீடித்தார். 

வெள்ளை மாளிகையில் முக்கிய யுக்தியாளரான ஸ்டீவ் பனான் கடந்த மாதம் பணியை விட்டுச் சென்றார். அதேப்போல் பலரும் சில மாதங்களே ட்ரம்பிடம் பணிபுரியும் சூழல் உள்ள நிலையில் முக்கிய பொறுப்பேற்றுள்ள ஷா தன் பணியை எப்படி கையாளப் போகிறார் என்று பார்க்கவேண்டும்.