மக்கும் பை, பிளாஸ்டிக் சாலை, விதை பென்சில்: 2017-ல் சமூக மாற்றத்திற்கு வித்திட்ட கண்டுபிடிப்பாளர்கள்!

நாம் வாழும் பூமிக்கும், நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கும் தங்களால் இயன்ற நன்மையைச் செய்ய வேண்டும் என விரும்பி, எதிர்கால சந்ததிக்கும் பயன்படும் வகையில் பல உபயோகமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய வெற்றியாளர்களைப் பற்றிய தொகுப்பு இது...

1

பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என இல்லாமல், மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் தங்களது சுவடுகளை பதித்துச் செல்ல வேண்டும். அந்தவகையில் எதிர்கால சந்ததிக்குப் பயன்படும் வகையில் சமூகத்திற்கு பல நல்லக் கண்டுபிடிப்புகளைத் தந்த வெற்றியாளர்கள் பலரைப் பற்றி இந்தாண்டு நாம் பல செய்திகள் வெளியிட்டிருந்தோம்.

மண்ணிற்கும் மக்களுக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை மறு உருவாக்கம் செய்வது, எளிதில் மக்கும் பாலீதின் பைகளைக் கண்டுபிடித்தது என சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி, சோலார் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது, மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக வலைதளம் அமைத்தது, உயிர்காக்கும் கருவிகள் கண்டுபிடித்தது என மனிதம் சார்ந்த கண்டுபிடிப்புகளும் இந்தாண்டு ஏராளம்.

அந்த வகையில் ஆண்டின் இறுதியில் இருக்கும் இந்தத் தருணத்தில் சமூக மாற்றத்திற்காக உழைத்து வரும் சில வெற்றியாளர்களைப் பற்றிய சின்ன தொகுப்பு உங்களுக்காக...

‘பிளாஸ்டிக் மேன் ஆஃப் இந்தியா’ வாசுதேவன்:

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவர் டாக்டர் ராஜகோபாலன் வாசுதேவன் (72). இவர் ப்ளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலை உருவாக்கும் புதிய முறையை கண்டறிந்துள்ளார். மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தத் தொழில்நுட்பத்தை வாங்க ஆர்வம் காட்டிய போதும், தன் தேசபக்தியின் காரணமாக இந்திய அரசாங்கத்துடன் தனது ப்ராஜெக்டை இலவசமாக பகிர்ந்துகொள்ள முடிவெடுத்தார் அவர்.

முதலில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் செயல்படுத்தப்பட்ட இவரது திட்டம், பின்னர் தமிழகத்தில் மட்டும் மாவட்ட ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் கீழுள்ள 29 மாவட்டங்களில் 1,200 கிலோ மீட்டர் ப்ளாஸ்டிக் சாலைகளாக விரிவாக்கம் அடைந்துள்ளது. இவரது திட்டத்தை பன்னிரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். ’ப்ளாஸ்டிக் மேன் ஆஃப் இந்தியா’ என புகழப்படும் வாசுதேவனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...

‘விதை பென்சில்’ இளைஞர்கள்:

கோவையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ரஞ்சித்குமார். இவரும் இவரின் நண்பர் ராஜகமலேசும் இணைந்து, பென்சில்களின் தலைப்பகுதியில், மரம், பூ செடிகளின் விதைகளை வைத்து முளைக்கும் பென்சில்களை உருவாக்கியுள்ளனர். மரம் வளர்ப்பை அடுத்த தலைமுறைக்கு சொல்லித்தரும் முயற்சியாக இதனை அவர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.

தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், மிளகாய், சூரியகாந்தி என கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட காய்கறி, பூ வகை விதைகளோடு கூடிய பென்சிலை இவர்கள் தயாரிக்கின்றனர். குழந்தைகளின் மனதில் மரம் வளர்ப்பதன் ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஆழமாக பதியும் இவர்களது முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இது தொடர்பாக தெரிந்து கொள்ள...

மாற்றுத்திறனாளிகள் வெப்சைட்:

சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டவர் சதாசிவம் கண்ணுபையன். இவர் தன்னைப் போன்ற மற்றவர்களுக்கு உதவும் பொருட்டு www.enabled.in என்னும் வலைதலத்தை 2009-ஆம் ஆண்டு உருவாக்கினார். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கென வேலைவாய்ப்பு தகவல்கள், கல்வித்திட்டம், அவர்களுக்கான நிகழ்வுகள், வெற்றிக் கதைகள், வொர்க்க்ஷாப்ஸ் பற்றிய தகவல், உதவிப் பொருட்கள் என ஏராளமான தகவல்கள் குவிந்து கிடக்கின்றன.

இந்த வலைதளத்தின் முக்கிய அம்சமே வேலைவாய்ப்பு தேடும் மாற்றுத்திறனாளிகள் தங்களது portfolio-வை ஆடியோ-வீடியோ வடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ பதிவு செய்யலாம் என்பது தான். சதாசிவத்தைப் பற்றியும், அவரது வலைதளம் பற்றியும் மேலும் தெரிந்து கொள்ள..

மக்கும் கேரிபேக்:

உலகளவில் சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக விளங்கும் பாலிதீன் எனும் மக்காத பிளாஸ்டிக் பைகள் விவகாரத்திற்கு தீர்வைக் கண்டுபிடித்தவர் தான் கோவையைச் சேர்ந்த சிபி. அமெரிக்காவில் படிப்பை முடித்த சிபிக்கு அங்கேயே வேலையும் கிடைத்தது. ஆனால், சில ஆண்டுகளிலேயே தாய்நாடு திரும்பி தொழில் தொடங்க முடிவு செய்தார்.

தனது தொழில் வெறும் பணம் சம்பாதிப்பதாக மட்டும் இல்லாமல், மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என விரும்பிய சிபியின் கண்டுபிடிப்பு தான், மூன்றே மாதங்களில் மக்கி விடும் வகையிலான பாலீதின் பைகள். சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்று வரும் சிபியைப் பற்றி இந்தச் செய்தியில் மேலும் தெரிந்து கொள்ளலாம்.

‘போர்வெல்’ மணிகண்டன்:

போர்வெல் குழிக்குள் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை பாதுகாப்பாக உயிருடன் வெளியில் தூக்கிவரும் கருவியைக் கண்டுபிடித்து, அதனை விற்பனை செய்து வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிற் கல்வி ஆசிரியர் மணிகண்டன். இந்தக் கருவியை கண்டுபிடித்து சில ஆண்டுகள் ஆனபோதும், சமீபத்தில் வெளியான அறம் படம் மூலம் மீண்டும் இவர் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.

இந்தக் கருவி மட்டுமின்றி தனது குறைவான சம்பளத்தில் சோலார் சைக்கிள், சோலார் பைக், பேட்டரியில் இயங்கும் அடிகுழாய் என தொடர்ந்து மக்களுக்குப் பயன்பெறும் வகையிலான பல கண்டுபிடிப்புகளை அவர் நிகழ்த்தி வருகிறார். இதோ அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...

உயிர் காக்கும் கருவிகள் கண்டுபிடித்த செங்குட்டுவன்:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் வசித்து வருகிறார் சிதம்பரத்தைச் சேர்ந்த செங்குட்டுவன். ஐ.டி.ஐ. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ரேடியோ, டிவி தொழில்நுட்பத்தில் டிப்ளோமா முடித்துள்ள இவர், ரேடியோ அதிர்வெண் மூலம் ரயில் வருவதை 10கிமீ முன்னே ரயில் கடக்கும் பாதையில் ஒலி அல்லது ஒளி மூலம் எச்சரிக்கை செய்யும் கருவி, எரிவாயு கசிவை கண்டறிய சூரிய ஆற்றலில் செயல்படும் எச்சரிக்கை கருவி மற்றும் ஏ.டி.எம் திருட்டை கட்டுப்படுத்தும் கருவி என மூன்று உயிர் காக்கும் கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

சமூகத்தில் தன்னைப் பாதித்த துயர சம்பவங்களைத் தொடர்ந்து, சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் செலவில் இவற்றை அவர் தயாரித்துள்ளார். இவை மூன்றையும் அவர் ஒரே வருடத்தில் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரைப் பற்றி இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.

‘சோலார்’ சுரேஷ்:

மாற்றம் என்பது வீட்டில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்பார்கள். அதன்படி, அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் அரசாங்கத்தையே நம்பியிருக்காமல், தன் வீட்டிற்கு தேவையான தண்ணீர், மின்சாரம், எரிவாயு போன்றவற்றை தானே தயாரித்து பயன்படுத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த சுரேஷ்.

71 வயதாகும் சுரேஷை அப்பகுதி மக்கள் செல்லமாக ‘சோலார்’ என்ற அடைமொழியுடனேயே அழைக்கின்றனர். தன் வீட்டிற்குத் தேவையான காய்கறிகளையும் தன் கொல்லைப்புறத்தில் தானே பயிரிட்டுக் கொள்கிறார் இவர். இருபது வருடங்களுக்கு முன்பே மழைநீர் சேகரிப்பு தொட்டியை அமைத்து பலருக்கு முன்னோடியாகவும் திகழ்ந்துள்ளார். இவரைப் பார்த்து பலரும் சோலார், பயோகேஸ், மொட்டைமாடித் தோட்டம் என ‘தன் கையே தனக்குதவி’ என மாறி வருகின்றனர். இதோ அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள..

Related Stories

Stories by jayachitra