பாரம்பரிய இசை நகரமாக சென்னையை கௌரவித்த யுனெஸ்கோ: குவியும் பாராட்டுகள்!

3

தென்இந்தியாவின் கலாச்சார தலைநகரமாகக் கருதப்படும் சென்னை, யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் நெட்வொர்க் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இசைத்துறையில் சென்னையின் சிறந்த பங்களிப்பிற்காக கடந்த செவ்வாய்கிழமை அன்று யுனெஸ்கோ மற்ற உலக நகரங்களுடன் சென்னையையும் இணைத்துள்ளது.

கைவினைப் பொருள்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை, நகர வடிவமைப்பு, திரைப்படம், கேஸ்ட்ரானமி, இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என 7 பிரிவுகளில் சிறந்து விளங்கும் உலக நகரங்களை தேர்ந்தெடுத்து ஐயக்கிய நாட்டின் அமைப்பான யுனெஸ்கோ அங்கிகாரம் அளித்து வருகிறது. அந்த வகையில் பாரம்பரிய இசையில் சென்னையின் பங்கை போற்றும் நோக்கில் படைப்பாக்க நகரங்கள் நெட்வொர்க் பட்டியலில் இணைத்துள்ளது.

“பாரம்பரிய இசை நகரம் என்கிற அங்கீகாரம் சென்னைக்கு மிகவும் பொருத்தமானது. மேலும் 300 வருடம் பழமையான இந்நகரத்தில், உலகத்தில் உள்ள பல இனங்களை சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இங்கு வாழ்ந்த அனைத்து இனங்களின் இசையும் சென்னையில் ஊடுறுவி உள்ளது...”

 என்கிறார் ’சென்னையின் கதை’ புத்தகத்தின் ஆசிரியர் பார்த்திபன். கர்நாடக சங்கீதம் முதல் கானா பாடல் வரை பல கலாச்சார இசை சென்னையில் கலந்துள்ளது. இது போன்று கலாச்சாரத்தில் மேல் ஓங்கி நிற்கும் சென்னைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்ததை ஒட்டி பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன் டிவிட்டர் பக்கத்தில்,

“பாரம்பரிய இசைப் பங்களிப்புக்காக யுனெஸ்கோ அமைப்பின் பட்டியலில் இடம்பெற்றதற்காகச் சென்னை மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொள்கிறேன். பாரம்பரிய இசைக்கு சென்னை அளித்துள்ள பங்களிப்பு விலைமதிப்பற்றது,” என தெரிவித்துள்ளார்.

இசை பிரிவில் ஜெய்பூர் மற்றும் வாரணாசியை தொடர்ந்து அடுத்து இணையும் இந்திய நகரம் சென்னை. இதை குறிப்பிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இசைக்கான கிரியேடிவ் நகரங்கள் நெட்வொர்க் பட்டியலில் இது வரை 64 நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளது, இதில் சென்னை அடங்கும். இணைக்கப்பட்டுள்ள மற்ற முக்கிய நகரங்கள் கெய்ரோ (எகிப்து), கேப் டவுன் (தென்னாப்பிரிக்கா), மான்செஸ்டர் (யுகே) மற்றும் மிலன் (இத்தாலி).

“சென்னையின் இசை ரசிகர்களுக்கும் மற்றும் கலைஞர்களுக்கும் யுனெஸ்கோவின் அங்கீகாரம் மற்றும் பாராட்டுகள் தாமதாமாக கிடைத்துள்ளது,” என நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னைக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“சென்னையின் தனித்துவத்தை பற்றி பேசிய பிரதமருக்கு நன்றி என்றும், சென்னை மக்கள், கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்,” என முதல் அமைச்சர் தெறிவித்திருந்தார்.

பல சிறப்புகளைக்  கொண்ட சென்னைக்கு உலகளவில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் மிகவும் பெருமைக்குரியது. வருடா வருடம் மார்கழி மாதத்தில் சென்னை முழுவதும் பல இடங்களில் பாரம்பரிய இசை நிகழ்சிகள் நடைபெறும். இந்த நேரத்தில் சென்னையின் இசைக்கு கிடைத்த இந்த கெளரவம், மக்களுக்கும் கலைஞர்களுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Related Stories

Stories by Mahmoodha Nowshin