மத்திய பட்ஜெட்: சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்ஸ் ஊக்குவிக்க புதிய வரி அறிவிப்புகள்!

1

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (MSME) வளர்ச்சிக்காக ஆண்டு வருவாய் 50 கோடி ரூபாய் வரை ஈட்டும் நிறுவனங்களுக்கான வருமான வரி 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச மாற்று வரி (MAT) 10 வருடங்களிலிருந்து 15 வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. 

வங்கித் துறைக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் வராக்கடனுக்கு அனுமதிக்கப்படும் ஒதுக்கீடு 7.5 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. திரவ இயற்கை எரிவாயுவிற்கான (LNG) அடிப்படை சுங்க வரி 5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2017- 18-ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் போது இதை அறிவித்தார்.

இதில் சிறு நிறுவனங்கள் வளர்ச்சியடையும் விதமாக 50 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கான வருமான வரி 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனிநபர் அல்லது பார்ட்னர்ஷிப் சார்ந்த வணிகங்கள் நிறுவன முறைக்கு மாற ஊக்குவிக்கப்படுகிறது. 2015-16 மதிப்பீடு ஆண்டின் தகவல்படி வருமான வரி செலுத்தும் 6.94 லட்சம் நிறுவனங்களில் 6.67 லட்சம் நிறுவனங்கள் இந்தப் பிரிவில் வருவதால் 96 சதவீத நிறுவனங்கள் இந்த வரி குறைப்பினால் பயனடையும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிரிவும் பெரிய நிறுவனங்களுக்கு இணையாக வளர வாய்ப்பளிக்கும். இந்த நடவடிக்கைக்கான வருவாய் இழப்பு ஒரு ஆண்டிற்கு 7,200 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது MAT வரியை குறைப்பதோ விலக்குவதோ நடைமுறையில் இயலாத ஒன்று என்று தெரிவித்தார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. எனினும் குறைந்தபட்ச மாற்று வரி வரவை எதிர்காலத்தில் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் குறைந்தபட்ச மாற்று வரி தற்போதைய 10 ஆண்டுகளிலிருந்து 15 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இந்த வரி முன்கூட்டியே செலுத்தப்படுகிறது. இந்த வரி விலக்கை அகற்றும் திட்டம் 1.4.17 முதல் செயல்படுத்த இருந்தாலும், அகற்றுவதன் மூலமாக கிடைக்கும் வருவாயின் முழு பயனும் அரசாங்கத்திற்கு 7 முதல் 10 ஆண்டுகளுக்குப் பிறகே கிடைக்கும். ஏனெனில் தற்போது இந்த விலக்கை பயன்படுத்துவோரின் காலக்கெடு முடிந்த பிறகே அந்த பயன் கிடைக்கப்பெறும்.

2017-18 பட்ஜெட் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே பல திட்டங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக கடன் அல்லது கடனீடு மற்றும் அரசாங்க கடணீட்டு பத்திரம் மூலமாக ஈட்டப்படும் வட்டித் தொகையிலிருந்து சலுகை தொகையாக 5 சதவீதம் அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும். இந்த சலுகை 30.6.2017 வரை அமுலில் இருக்கும். நிதியமைச்சர் இதை 30.6.2020 வரை நீடிக்க முன்மொழிந்தார். 

ஸ்டார்ட்-அப் மற்றும் வங்கிகளுக்கான வரி அறிவிப்புகள்

கடந்த வருடம் ஸ்டார்ட் அப்களுக்கு சில நிபந்தனைகளுடன் கூடிய வருமான வரி விலக்கை அரசாங்கம் அளித்தது. அவ்வாறு தொடங்கிய ஸ்டார்ட்-அப்களின் முன்னெடுத்துச் செல்லும் நட்டத்தை மையமாகக் கொண்டு ப்ரொமோட்டர் அல்லது ப்ரொமோட்டர்களே தொடரும் பட்சத்தில் 51% வாக்குகள் உரிமையை தக்கவைத்துக்கொள்ளும் நிலை தளர்த்தப்பட்டுள்ளது. ஸ்டார்ட்-அப்களுக்கு லாபத்தில் வழங்கப்படும் வரி விலக்கு முதல் ஐந்து வருடங்களில் மூன்று வருடங்கள் என்று இருந்ததில் இருந்து தற்போது ஏழு வருடங்களில் மூன்று வருடங்களாக மாற்றப்பட்டுள்ளது. 

வங்கித் துறைக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் அருண் ஜெட்லி வராக்கடனுக்கு அனுமதிக்கப்படும் ஒதுக்கீடு 7.5 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதனால் வங்கிகளின் வரி பொறுப்பு குறைக்கப்படும். அட்டவணையிலுள்ள வங்கிகளுக்கு இணையாக அட்டவணையிலல்லாத கூட்டுறவு வங்கிகளிலுள்ள வராக்கடன்களுக்கும் வரி செலுத்துவதற்கு பதிலாக ஈட்டிய வட்டிகளுக்கு மட்டும் வரி செலுத்த வகைசெய்யலாம் என்று பரிந்துரைத்தார். இதன் மூலமாக வராக்கடன் வட்டிகள் மேல் செலுத்தப்படும் வரிச்சுமை குறையும்.

இயற்கை எரிவாயு இறக்குமதி வரி 5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பரவலாக எரிவாயுவாக பயன்படுவதுடன் பெட்ரோகெமிக்கல் துறைக்கும் பயன்படுவதால் நிதியமைச்சர் LNG அடிப்படை சுங்க வரி 5% லிருந்து 2.5% ஆக குறைக்க பரிந்துரைக்கப்பட்டது. உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கவும் மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும் சுங்கம் மற்றும் கலால் வரியில் மாற்றம் செய்ய பரிந்துரைத்தார். இதே போல் மற்ற பிற வரி மாற்றங்கள் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது.

கிராம அளவில் மஹிலா சக்தி கேந்திராவை அமைத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல திட்டங்களுக்கான மதிப்பு 1,56,528 கோடியிலிருந்து 1,84,362 கோடியாக உயர்த்தப்பட்டது. 500 கோடி ரூபாய் செலவில் 14 லட்சம் ICDS அங்கன்வாடி நிலையங்களில் கிராம அளவில் மஹிலா சக்தி கேந்திரா அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2017-18 பொது பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதன் மூலம் கிராமப்புற பெண்களுக்கு திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, டிஜிட்டல் கற்றறிதல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றை தெரிந்துகொண்டு பயன்பெறுவதற்கான சேவை ஒரே இடத்தில் வழங்கப்படும். 

தேசிய அளவிலான திட்டங்கள் மூலம் கர்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு மற்றும் குழந்தையின் தடுப்பூசி ஆகியவற்றிற்காக நிதியுதவியாக 6000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்காக கடந்த ஆண்டு 2016-17 ஒதுக்கப்பட்ட தொகையான 1,56,528 கோடி ரூபாய் 2017-18 ஆண்டில் 1,84,632 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது.