சலூனில் முன்பதிவு செய்ய உதவும் 'Vyomo' மொபைல் செயலி

0

நேரமின்மை, வசதி, எளிதில் பெறக்கூடிய தன்மை, விநியோக சங்கிலி போன்றவற்றின் காரணமாக பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கும் இணையம் ஒரு சந்தையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. உதாரணமாக ஓட்டுனர்கள், தையல்காரர், தொழில்நுட்ப வல்லுனர்கள், பிளம்பர்கள் போன்ற பலரும் இணையம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

இது போலவே அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சேவைகளும் ஒருபக்கம் தீவிரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பல புதிய நிறுவனங்கள் 4.8 பில்லியன் டாலர் வாய்ப்பை பங்குபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். வானிடிக்யூப் மற்றும் புல்புல் போன்றவர்களுக்கு பிறகு பெங்களூரை சேர்ந்த "வ்யோமோ" (Vyomo) சலூன்கள் மற்றும் அழகு சேவைகளை இணையப்படுத்தியிருக்கிறது.

லண்டன் பிசினஸ் ஸ்கூலில் படித்த அபினவ் காரே மற்றும் பூனம் மார்வா இருவரும் துவங்கிய நிறுவனம் தான் வ்யோமோ. அழகு தொழில் சார்ந்த வல்லுனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான எல்லா தீர்வுகளையும் இந்நிறுவனம் வழங்குகிறது. இந்நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி அபினவ் காரே பேசும்போது,

நாங்கள் சலூனில் முன்பதிவு செய்ய முடியும் வாய்ப்பை வழங்குகிறோம். அதுமட்டுமல்லாமல் சலூனை உங்கள் வீட்டுக்கே கொண்டு வருகிறோம். அழகு சார் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யக்கூடிய மொபைல் செயலியையும் நாங்கள் வழங்குகிறோம்.

மே 2015ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இந்நிறுவனத்தை துவங்கி வைத்தார். வெளியிட்ட முதல் 45 நாட்களிலேயே 53,000 வாடிக்கையாளர்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. வ்யோமோ மூலமாக ஒருவர் தனக்கு அருகில் இருக்கக்கூடிய சலூன், ஸ்பா போன்றவற்றை தேட முடியும். விலை விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். வாடிக்கையாளர்களின் விமர்சனங்களை பார்வையிட முடியும். உடனடியாக தங்களுக்குத் தேவையான சேவைகளை முன்பதிவு செய்யவும் முடியும்.

45 நாட்களில் பூஜ்ஜியத்திலிருந்து 17,000

டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரை சேர்ந்த 3000 சலூன்கள் மற்றும் 1,500 அழகுக்கலைஞர்கள் இத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். வ்யோமோவின் சேவையை பயன்படுத்தக்கூடியவர்களில் 30 சதவீதத்தினர் அதாவது 17,000 பேர் இதுவரை மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். இரண்டே மாதத்தில் எப்படி இதை சாதித்தது என்று கேட்ட போது அபினவ் கூறியதாவது,

நாங்கள் தனித்து இயங்கும் சிகையலங்காரக் கலைஞர்களோடு வருவாய் பகிர்வு அடிப்படையில் இயங்குகிறோம். சாதாரணமாக மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவர்கள் இதன்மூலம் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். இந்த முறை பல சிகையலங்காரக் கலைஞர்களை ஈர்த்திருக்கிறது.

வாய்வழிச் செய்தியாகவே மிகப்பெரிய இலக்கை எட்டியிருக்கிறோம். "பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் நம் குடும்பத்தினரோடோ நண்பர்கள் கூட்டத்தோடோ செல்வோம் இல்லையா” என்று கேட்கிறார் அபினவ்.

வாடிக்கையாளர்களே ராஜா

"நாங்கள் ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்களிடம் எங்கள் கால் செண்டர் பிரதிநிதி மூலம் விசாரித்து அவர்களின் விமர்சனங்களை பெறுகிறோம். இதன்மூலம் எங்களின் வாடிக்கையாளர் இலக்கை உள்நோக்க முடிகிறது. தகவல்சார்ந்த ஒன்றாக எங்களின் வ்யோமோ 3.0 வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மாற்றும் விதமாக வீட்டிலேயே சேவை பெற உதவினோம்” என்கிறார்.

யுவர்ஸ்டோரி ஆய்வு

மக்கள் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை உணவு மற்றும் ஆரோக்கியத்திற்கு அடுத்ததாக அழகு சார்ந்த சேவைகளுக்கே செலவிடுகிறார்கள். பெண்கள் மாதத்திற்கு சராசரியாக 2000லிருந்து 3000 வரை அடிப்படை அழகு பராமரிப்பிற்காக செலவிடுகிறார்கள்.

சில சந்தை ஆய்வு முடிவுப்படி அழகு சார்ந்த சேவை 4.8 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது. இது இன்னும் வளர்ந்துகொண்டிருக்கிறது.

வேனிடிக்யூப், புல்புல் மற்றும் பிக்ஸ்டைலிஸ்ட் போன்றோர் இந்நிறுவனத்தின் சந்தை போட்டியாளர்களாக இருக்கிறார்கள். ஆனால் அழகு சார்ந்த எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் மொபைல் செயலி வ்யோமோ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த செயலி ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இது எல்லோரையும் விரைவில் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயலியை பதிவிறக்க : Vyomo

ஆங்கிலத்தில் : JAI VARDHAN | தமிழில் : Swara Vaithee