'வழிந்தோடும் மனிதம்', மழைக்கான விழிப்புணர்வு கீதம் !

0
“எந்த ஒரு மனிதனும் தனித் தீவு அல்ல” - ஜான் டான்னே

ஆனால், மனிதர்களை தனித் தீவுகளாக்கியது, சென்னையின் மழை. மழையை சபிப்பதிலும் நியாயம் இல்லை. மழையின் அழகியலைக் குலைக்காமல், மழையினால் உண்டான அவலங்களை, துல்லியமாக வெளிப்படுத்துகிறது ‘வழிந்தோடும் மனிதம்’, எனத் தலைப்பிடப்பட்ட, ஒரு நான்கு நிமிட காணொலி. யூ-ட்யூபில் பதிவேற்றப்பட்ட இரண்டாவது நாளிலேயே, ஆயிரத்திற்கும் மேலானோர் பார்த்திருக்கின்றனர்.

கோவையை சேர்ந்த இளைஞர்கள் பரத்குமார், சரவணன் மற்றும் விக்கி டோப்ஸ் ஆகிய மூன்று நண்பர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்தப் படைப்பு, அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

விக்கி பாடலை கம்போஸ் செய்ய, பரத் பாடல் வரிகளை எழுதி சரவணனுடன் இணைந்து இந்த ஆல்பத்தில் பாடி, நடித்துள்ளார். மற்றொரு நண்பர் ஷிபு ஆனந்த் மேற்பார்வை ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

யூட்யூப் லின்க்: Vazhindhodum Manitham

“ஒரு மணி நேரம் மழை பெய்யும் போது, அதில் நனைந்து வந்தால் ரசிக்கலாம். எப்பவுமே ஈரம், எங்கே பார்த்தாலும் தண்ணீர்னு, வீட்டுக்குள்ளேயும் தண்ணீர் வந்து, சாப்பாடு இல்லாமல், துணி இல்லாமல் இருக்கும் போது, மழையை எப்படி ரசிக்க முடியும் ?” எனக் கேட்கிறார், பரத் குமார்.

இப்பாடலிற்கான வரிகளை எழுதியிருக்கும் பரத்திடம் பேசிய போது...

இப்படி ஒரு காணொலி உருவாக்க காரணம் என்ன?

“ஒரு விஷயத்தை, கலை வடிவமான இசையால் சொல்லும் போது, அது மக்களை மிகச் சுலபமாக சென்றடையும் என்பது என்கள் நம்பிக்கை. இதைப் போன்ற இயற்கை சீற்றங்களின் பொழுதில், பெரிய பெரிய நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளும் மட்டும் தான் உதவி செய்ய வேண்டும் என்றில்லாமல், எல்லாருமே மற்றவர்களுக்கு உதவ வேண்டும். பதினைந்து பேர் தங்கக் கூடிய வீட்டில், இரண்டு மூன்று பேர் தான் இருக்கிறார்கள் எனும் போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரமும் அடிப்படை வசதிகளும் இல்லாமலிருக்கும் போது, அந்த வலியை வாழ்ந்து பார்த்தால் தான் புரியும். அதை பிரதிபலிக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டது தான் ‘வழிந்தோடும் மனிதம்'.

பரத்தின் தந்தை, சேலத்தில் நாற்பது வருடங்களாக, வெற்றிகரமாக கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார். இளம் வயதிலிருந்தே, பல சமூக நடவடிக்கைகளில் ஆர்வமாய் பங்கேற்றுக் கொண்டிருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். இளநிலையில் விஸ்காம் படித்த பரத், முதுநிலையில் எம்.பி.ஏ முடித்த பிறகு கோவையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார். இருந்தாலுமே, திரைத்துறையை நோக்கி முன்னேறும் முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

“எந்த கலை படைப்புக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்த படைப்பு புகழை எதிர்பார்த்து செய்ததில்லை. ஆயிரத்திற்கும் மேலானவர்கள் பார்க்க வேண்டும் என எந்த திட்டமும் இல்லை. அது தானகவே நடக்கிறது. ஆனால், இது நிச்சயமாக பலரை போய் சேர வேண்டும் என நினைக்கிறேன்.”

‘வழிந்தோடும் மனிதம்’ - காணொலிக்கான லிங்க்.