உத்வேக 'வெள்ளி'த்திரை|மனம் நோகாது இதம் தரும் 'மகேஷிண்டே பிரதிகாரம்'  

1

ங்கள் அலுவலகத்தில் சக ஊழியருடனோ, மேலதிகாரியுடனோ அல்லது உங்களுக்குக் கீழே பணிபுரிபவருடனோ கடுமையான வாக்குவாதத்துடன் கூடிய வாய்ச்சண்டை ஏற்பட்டிருக்கலாம். நடு ரோட்டில் முன்பின் தெரியாதவருடன் பிரச்சினையைச் சந்தித்திருக்கலாம். இரு தரப்புக்கிடையே திட்டமிடப்படாத சண்டைகளுக்கு அடித்தளம் அமைத்தது, அந்த இரண்டில் ஏதோ ஒரு தரப்புதான் என்று ஆராய்ந்தால், பெரும்பாலான சூழலில் நாம் தோற்றுவிடுவோம். ஆம், அந்த இரு தரப்புக்குமே துளியும் சம்பந்தம் இல்லாத எவரோ சிலர்தான் அந்தச் சண்டைக்கு அடிக்கல் நாட்டியிருப்பார்கள். நம் கண்ணை மறக்கின்ற கோபத்தை நமக்கே தெரியாமல் நமக்குக் கடத்தியவர்கள்தான் அவர்கள்.

எப்படி?

'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் கதைக்கு மையமாக அமையும் ஒரு சண்டைக்காட்சியைப் பாருங்கள். அந்தச் சண்டை தொடங்குவதற்கு முன் வெவ்வேறு இடங்களில் இருந்து பல்வேறு நபர்களால் கோப உணர்வு கடந்து வருவதை மிகத் தெளிவாகவும், சுவாரசியமாகவும் காட்டப்பட்டிருக்கும். ஒருவர் பின் ஒருவராக கோபம் கடந்து வரும் அந்தப் பின்னல் காட்சி படமாக்கப்பட்ட விதத்தைப் பார்த்து அசந்துபோனேன்!

வர் நடித்திருக்கிறார் என்பதற்காகவே எவ்வித முன்யோசனையும் இல்லாமல் சிலரது படங்களை விரும்பிப் பார்ப்பேன். அந்தப் பட்டியலில் முக்கியமானவர் மலையாள நடிகர் ஃபகத் ஃபாஸில். படம் படு மொக்கையாக இருந்தாலும் அவரது பங்களிப்பு ஏதோ ஒரு விதத்தில் எனக்கு நிறைவைத் தருவதுண்டு. ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகும் அவரும் படமும் ஒட்டுமொத்தமாக நிறைவைத் தந்தது என்றால், அது 'மகேஷிண்டே பிரதிகாரம்' (Maheshinte Prathikaaram). நடப்பு ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் ரிலீஸான இந்தப் படத்தை 50 நாட்களுக்குப் பிறகு, கேரள திரையரங்கு ஒன்றில் பார்த்தேன். ரசித்தேன். வியந்தேன்.

'சால்ட் அண்ட் பெப்பர்', '22 ஃபீமேல் கோட்டயம்', 'இயோபிண்டே புஸ்தகம்' முதலான கவனிக்கத்தக்க படங்களில் பங்காற்றிய ஷ்யாம் புஷ்கரனின் திரைக்கதைதான் 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்துக்கு அதிகம் வலு சேர்த்த முக்கிய அம்சம் என்பேன். தமிழ் சினிமா போல் அல்லாமல் திரைக்கதைப் படைப்பாளிகளுக்கு உரிய முக்கியத்துவம் தருவதில் மலையாள சினிமா மீதான மதிப்பு கூடுகிறது என்பதையும் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன். ஷியாம் புஷ்கர் பங்குவகித்த இயக்குநர் ஆஷிக் அபு படங்களில் உதவி இயக்குநர் - இணை இயக்குநராக பணிபுரிந்த திலீஷ் போத்தன் இந்தப் படத்தின் இயக்குநர். முதல் படைப்பிலேயே முத்திரைப் பதித்திருக்கிறார். இந்தப் படத்தின் இரண்டு நிமிட மேக்கிங் வீடியோவை யூடியூபில் பார்க்க நேர்ந்தது. அதுவே இந்தப் படக்குழுவின் நேர்த்தியைத் தெளிவாகக் காட்டியது.

படத்தின் முதல் ஷாட்டில் க்ளோசப்பில் காட்டப்படும் ஒரு ஜோடி ரப்பர் செருப்பில் தொடங்கிய வியப்பு இறுதிக் காட்சி வரை நீடித்தது. இடுக்கியின் சிறு நகரில் அப்பாவின் போட்டோ ஸ்டூடியோவில் போட்டோகிராஃபர் வேலையை கவனிக்கும் மகேஷ். இரண்டாம் குழந்தைப் பருவத்தை எட்டிய தன் அப்பாவை வீட்டில் கவனித்துக்கொள்ளும் தாயுமானவனும் அவன்தான். பள்ளியில் தொடங்கி கல்யாணத்தில் கழட்டி விடப்பட்ட காதல் அத்தியாயத்துக்குப் பின்னர் ஒரு புள்ளியில் விறுவிறுவென நகரத் தொடங்குகிறது மகேஷின் அன்றாட வாழ்க்கை. ஓர் எதிர்பாராத சண்டையில் தன்மானத்தை இழந்துவிட்டதாக கருதும் மகேஷ், தன்னை அடித்தவனை ஜெயித்த பின்புதான் செருப்பு அணிவேன் என்று வெறுங்காலுடன் திரியத் தொடங்குகிறார். அதன் பின்னர், உதயமாகிறது உண்மையான காதல். மகேஷின் பிரதிகாரம்... அதான் பழிவாங்கல் என்ன ஆனது என்பதே எல்லாம்.

நாடு, மொழி, வாழ்க்கை முறை எதுவுமே தெரிந்துகொள்ளாமல் ஒரு வெளிநாட்டுத் திரைப்படத்தைப் பார்க்கும்போது, அதன் மூலம் கதை நிகழும் இடத்தையும் அந்த மக்களின் வாழ்க்கை முறையையும் உள்வாங்க முடிகிறது என்றால் அதுதான் 'ப்யூர் சினிமா'. அந்த வகையில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு மகேஷிண்டே பிரதிகாரம் ஒரு ப்யூர் சினிமாதான். கதை - திரைக்கதையில் இருந்து கொஞ்சமும் விலகாமல் மண்ணின் மக்களையும் வாழ்க்கையையும் திரை அழகியலுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, உதட்டசைவுகள் இல்லாமல் பாடல்களைப் பயன்படுத்திய விதமும் தரம்.

ரு திரைப்படத்துக்கு முக்கியக் கதாபாத்திரங்களைப் போலவே உறுதுணைக் கதாபாத்திரங்களை உருவாக்கும்போதும் குறையாத கவனம் தேவை. அப்போதுதான், ரசிகர்களுக்குக் கிடைக்கின்ற சினிமா அனுபவம் என்பது முழுமையானதாக இருக்கும். ஒரு திரைப்பட ரசிகனுக்கு நல்ல நாவலை வாசித்து முடித்த அனுபவத்தை ஏற்படுத்துவது என்பதுதான் உறுதுணைக் கதாபாத்திரங்களை செதுக்கும் பணியில்தான் அடங்கியிருக்கிறது. அது, மகேஷிண்டே பிரதிகாரத்தில் மிகச் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

மகேஷின் அப்பா வின்சென்ட், ஃப்ளக்ஸ் பிரின்ட்டிங் ஓனரும் குடும்ப நண்பருமான பேபி அங்கிள், அவரது மகள், அவர் கடையில் போட்டோஷாப் பணியில் சேரும் இளைஞன் கிறிஸ்பின், மகேஷ் மோதிய ஜிம்சன், பள்ளித் தோழியாக இருந்து கைவிட்ட காதலி சவுமியா, அதன்பின் காதல் வசப்படுத்திய ஜிம்ஸி... ஏன் அந்த நாய்க்குட்டி கூட. இயல்பு மீறாத கதாபாத்திரப் படைப்புகளும், அதற்கு பொருத்தமான நடிகர்களின் தெரிவும், அவர்களின் இயல்பான நடிப்பும் மகேஷின் வாழ்க்கையை அவன் அருகில் இருந்து பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது. குறிப்பாக, கதை நிகழும் இடத்தையும் ஒரு முக்கியக் கதாபாத்திரமாக பார்க்கிறேன்.

'மண்டையைப் போட்டு கசக்கி, நகைச்சுவையும் சுவாரசியமும் அடங்கிய காட்சிகளையும் வசனங்களையும் உருவாக்கினால்தான் 'மாஸ்' ஆடியன்ஸை ஈர்க்க முடியும்; கல்லா கட்ட முடியும்' என்ற மித்-தையும் பொத்துகிறது இப்படம். நம் அன்றாட வாழ்க்கையின் சுவைமிகு அனுபவங்களையும் மொழியையும் கதைக்கு ஏற்ப காட்சிப்படுத்தினாலே போதும் என்பதை, இப்படத்துக்கு கேரள ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்புதான் சான்று.

ரு திரைக்கதையில் இடம்பெறும் வேலை - தொழில் ரீதியிலான விஷயங்களில் காட்சி மொழிகள் மூலம் டீட்டெயில் தரும் உத்தி மீது எனக்கு தனி ஈர்ப்பு உண்டு. அந்த வகையில், 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் புகைப்படக் கலைத்தொழிலை கையாண்ட விதமும், அதன் சூத்திரங்களில் ஒன்றைச் சொல்லித் தந்த விதமும் சிறப்பு.

சில இரவுகளில் காணாமல் போகும் மகேஷின் அப்பா தன் தோட்டத்துக்கும் வரும் இரவுப் பறவையை புகைப்படம் எடுக்கும் மேற்கொள்ளும் சிரத்தையும், அதன் ரிசல்டைப் பார்த்து அடையும் பூரிப்பும் அற்புதம். 'ஒரு துறையில் தன் வல்லமையால் உலகப் புகழ் கிட்டினால்தான் வாழ்வின் மகத்தான வெற்றி' என்ற எண்ணமே சுத்த பேத்தல். நம் பணியில் நாம் அடையும் மனநிறைவும் மகிழ்ச்சியும் தான் வேலை - தொழில் ரீதியிலான உச்சபட்ச வெற்றி. அந்த வயதான புகைப்படக் கலைஞர் தன் செய்கையால் அதைச் சொல்லித் தருகிறார்.

புகைப்படக்காரராக வலம் வரும் தன் மகனை ஒரு புகைப்படக் கலைஞராக அந்த அப்பா மாற்றும் காட்சியும், தன் மகன் புகைப்படக் கலைஞனாக உருவெடுத்துவிட்டான் என்று உணர்ந்த பின்பு அடையும் பெருமிதத் தருணமும் நம்மை ஏதோ செய்கிறது. புகைப்படக் கலை என்பது கருவியில் அல்ல... கலைஞர்களின் பார்வையில் இருக்கிறது என்று அவர் அசால்டாக போதிக்கும் பாடத்தை எந்தக் கலைக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் தன்மானத்துக்கு அதிமுக்கியம் தருவது இயல்பு. நம்மில் ஒருவன்தான் மகேஷ். எதிர்பாராத விதமாக இழந்திட நேரும் தன்மானத்தை மீட்கும் முயற்சியில் தீவிரம் காட்டி, அவன் ஈடுபடும் (இனிய) பழிவாங்கல்தான் மகேஷிண்டே பிரதிகாரம். இது, உண்மையில் நிகழ்ந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட சினிமாதான். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்புகள் என்றால், நமக்கு பேரதிர்ச்சி ஊட்டும் நிஜங்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமே இல்லை. நம்மை 'அட' போடவைக்கும் மகேஷிண்டே பிரதிகாரம் போன்ற எளிமையான கதைகளாகவும் இருக்கலாம்.

கேஷிண்டே பிரதிகாரம் பார்த்துவிட்டு, அதுபற்றி அசைபோட்டபோது, எது தன்மானம் இழக்கும் தருணம் என்று தெரியாமல் வெற்று கவுரவத்துக்காக ஒருவர் பழிவாங்க முயன்ற நிகழ்வு நினைவுக்கு வந்தது.

அது ஒரு ஸ்டார் ஓட்டல் பார். எனக்கு நெருங்கிய தோழன் பிரேம் அங்கு வெயிட்டர். அவனுக்காக அந்த பாருக்கு வரும் ரெகுலர் கெஸ்ட்-டுகள் சிலர் இருந்தனர். என்னைப் பொருத்தவரை, நர்ஸ்களுக்கு இணையானவர்கள் வெயிட்டர்கள். சகிப்புத்தன்மை உச்சத்தை அவர்களிடம் பார்க்கலாம். அதுவும், ஆல்கஹாலிக்ஸ்களை அணுகும் வெயிட்டர்களின் நிலையை விவரிக்கத் தேவையில்லை.

ஒரு நாள் புதிதாக ஒரு கெஸ்ட் அந்த பாருக்கு வருகிறார். அவரது ஆடையும் அணுகுமுறையுமே அவர் பணக்காரர் என்பதைக் காட்டின. ஒரு லார்ஜ் ஆர்டர் செய்தார். பிரேம் பக்குவமாக பரிமாறினான். சிறிது நேரத்தில் அவனது ரெகுலர் கெஸ்ட் ஒருவர் வந்தார். "டேய் பிரேம்... எப்படிடா இருக்க?" என்று கட்டியணைத்தார். உரிமையோடு தோளில் கை போட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்தார். அவரை வழக்கம்போல் கவனித்துவிட்டு, அவரிடம் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தான் பிரேம்.

இதையெல்லாம் அந்த புதிய கெஸ்ட் கவனிக்கிறார். அவருக்கு பொறாமைப் பெருக்கெடுத்தது. 'நாம எவ்ளோ பெரிய ஆளு. நம்மள பெருசாவே கண்டுக்காமல் இன்னொரு கெஸ்ட் கிட்ட அவ்ளோ க்ளோஸா இருக்கான்' என்று கடுப்பாகியிருக்கக் கூடும். அடுத்த பெக் ஆர்டர் செய்யும்போது பிரேமுக்கு ஒரு கட்டளை இட்டார்... "எல்லா பெக்குக்கும் ஸ்டிரர் ஸ்டிக் வை".

அவரது உத்தரவில் ஒளிந்திருந்த உணர்வை பிரேம் கண்டுகொண்டான். உஷார் ஆனான். ஒவ்வொரு பெக்-குக்கும் ஒரு ஸ்டிரர் ஸ்டிக் வைத்தான். கடைசியில் தான் எத்தனை பெக் அருந்தியிருக்கிறோம் என்பதை கணக்கிடுவதற்கு, ஒரு பெக்குக்கு ஒரு ஸ்டிரர் ஸ்டிக் வாங்குவது சிலரது பழக்கம். அதைத்தான் அவரும் அன்று செய்தார். ஆனால், அவரது அணுகுமுறை இயல்பாக இல்லை.

எல்லாம் முடிந்தது. அவர் பில் கேட்டார். பிரேம் எடுத்துச் சென்று கொடுத்தான். வெடித்தது பூகம்பம்.

"டேய்... என்னடா ஏமாத்துறீங்க? குடிகாரன்னா எப்படி வேணுன்னாலும் ஏமாத்துவீங்களா?" என்று ஆங்கிலத்தில் சில அர்ச்சனை சொற்களைத் தெளித்து அலப்பறை செய்தார். அது பாரின் பீக் ஹவர். பேரமைதிக்கு இடையே ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களும் அந்தச் சம்பவத்தை கவனித்தனர்.

"நான் எடுத்துகிட்டது எட்டு பெக். நீ ஒன்பது பெக்குக்கு பில் போட்டிருக்க. இதோ ஸ்டிரர் ஸ்டிக்ஸை எண்ணிப் பாருடா" என்றார்.

வெயிட்டர் வெட்கித் தலைதாழ்ந்து தன்னிடம் மன்னிப்புக் கோருவான் என்று நினைத்தவர் முன்பு அமைதியாக நின்றுகொண்டிருந்தான் பிரேம்.

கொஞ்சம் அடங்கியவுடன் அவரது காதருகே "சார், டேபிள் மேல இருக்குறது எட்டு ஸ்டிரர் ஸ்டிக்தான். உங்க டேபிளுக்கு அடியில உடைச்சு சுக்குநூறா கிடக்கிறதையும் சேர்த்தா ஒன்பது வருது சார்" என்றான்.

ஃபுல் ஏசியில் அந்தப் பணக்காரருக்கு வியர்க்க ஆரம்பித்தது. எதுவும் பேசவில்லை. பில் பணத்துடன் ரூ.500-ஐ டிப்ஸ் ஆக வைத்துவிட்டு, பிரேம் முகத்தைப் பார்க்காமல் எழுந்து நடையைக் கட்டினார்.

தப்பே செய்யாமல் தன்னைத் திட்டித் தீர்த்த பழிவாங்க அந்த கெஸ்டை மற்றவர் முன்பு மானத்தை வாங்கியிருக்க முடியும். ஆனால், பிரேம் அப்படிச் செய்யவில்லை. அப்படிச் செய்திருந்தால் அன்று அவனால் ரூ.500-ஐ ஈட்டியிருக்க முடியாது என்று அவனுக்குத் தெரியும்!

உத்வேக வெள்ளித்திரை இன்னும் விரியும்...

முந்தைய பதிவு: உத்வேக 'வெள்ளி'த்திரை | 'சிட்டி லைட்ஸ்' நிழலில் மறைக்கப்படும் துயரம்!

பணத்தின் மேன்மை சொல்லும் 'வானம்'!

ஃபான்றி - இது தலித் சினிமா மட்டும் அல்ல!

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்