குடிநீர் மற்றும் கழிவறை வசதிக்கு நுண்கடன் வழங்கும் நிறுவனம் தொடங்கிய தமிழர்!

0

'ஆயிரக்கணக்கான பேர் அன்பில்லாமல் வாழ்ந்துள்ளனர், ஆனால் யாரும் நீரில்லாமல் வாழ்ந்ததில்லை” என்பது கவிஞர் டபிள்யூ.எச்.ஆடனின் கவிதை வரிகள். இதையே உயிர் வாழ நீர் தேவை என்றால் நீண்ட காலம் உயிர் வாழ சுத்தமான நீர் தேவை என்றும் கூறலாம். ஏனெனில் அது தான் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமின்மைக்கான வேறுபாடாக இருக்கிறது. ஆனால் நவீன வாழ்க்கை மற்றும் மக்கள் நெரிசலால் உண்டாகி இருக்கும் நீர் பற்றாக்குறை, விநியோக முறையை சிக்கலாக்கியுள்ளது. போதிய தகவல்கள்யினமை மற்றும் நிதி வசதியின்மை, கிராமப்புறங்களில் நீர் விநியோகத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இந்த பிரச்சனையை நன்குணர்ந்த பால் சத்தியநாதன், வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு மற்றும் கழிவறை வசதி அமைக்க மைக்ரோ ஃபைனான்ஸ் எனப்படும் நுண்கடன் வழங்கும் "கார்டியன்" நுண்கடன் (Guardian) அமைப்பை நிறுவியுள்ளார்.

20 ஆண்டுகள் அரசுப்பணி மற்றும் ஐந்தாண்டுகள் என்.ஜி.ஒ க்களில் பணியாற்றியதன் மூலம் அவர் நுண்கடன் பற்றி நன்றாக தெரிந்து கொண்டார். இந்தியாவில் தற்போதுள்ள நுண்கடன் அமைப்பால் அதிருப்தி அடைந்து அவர் கார்டியன் அமைப்பை துவக்கினார். "இந்திய சூழலில் பல நுண்கடன் நிறுவனங்கள் பெட்டி கடைகள், காய்கறி விற்பனை, ஆடு மாடு வளர்ப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக நுண்கடன் வழங்குகின்றன. ஆனால் இதன் வட்டி விகிதம் அதிகம் என்பதால் ஏழை மக்களுக்கு ஏற்றதாக இல்லை”.

இதன் விளைவாக ‘இந்த நிறுவனங்களிடம் கடன் பெறுபவர்கள் மேலும் ஏழ்மை நிலை அடைகின்றனர் என்கிறார் அவர். கூட்டு வட்டியால் அதிகரித்த சுமை காரணமாக பல குடும்பங்கள் தங்கள் நிலங்களை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. "ஆந்திராவில் நுண்கடன் துறை நெருக்கடிக்குப்பிறகு மத்திய அரசு வட்டி விகிதத்தை நிர்ணயிப்பது மற்றும் கிரிடிட் பியூரோ அறிக்கைகள் மூலம் பல நிறுவனங்களிடம் கடன் வாங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்கிறார் அவர்.

பிரச்சனை நுண்கடனில் இல்லை என்றும் அது புரிந்து கொள்ளப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்ட விதத்தில் தான் இருக்கிறது. "இதுவரை எந்த இந்திய நுண்கடன் நிறுவனமும் ஏழைகள் குடிநீர் குழாய் அமைக்க, கழிவறை அமைக்க உதவி செய்ய நுண்கடன் வழங்க முன்வரவில்லை. பல நிறுவனங்கள் லாபம் ஈட்ட மட்டுமே விரும்புகின்றன. இது போன்ற கடன்களை திரும்பி வசூலிப்பது கடினம் என்பதால் நடைமுறையில் சாத்தியமாகவில்லை” என்கிறார் அவர்.

அண்மையில் சில நுண்கடன் நிறுவனங்கள் குடிநீர் மற்றும் கழிவறை வசதி கடன்களை தங்கள் வர்த்தகத்தில் சேர்த்துக்கொண்டுள்ளன. ஆனால் கார்டியன் மட்டும் தான் குடிநீர் மற்றும் கழிவறை வசதி கடன் மட்டுமே வழங்கும் நுண்கடன் நிறுவனமாக இருக்கிறது. உலகிலேயே இத்தகைய முதல் நிறுவனம் இதுதான் என்கிறார் பால்.

கார்டியன் நிர்வாக குழு, பால் சத்தியநாதன் மற்றும் எம்.செந்தில்குமார் ஆகியோரை கொண்டுள்ளது. மேலும் ஆறு பேர் கொண்ட நிர்வாக குழு உள்ளது. தமிழகத்தின் திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், பெரம்பலூர், கரூர் மற்றும் சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 22 பகுதிகளில் கார்டியன் செயல்படுகிறது. ஒவ்வொரு கிளையிலும் ஒரு மேலாளர், ஒரு கம்ப்யூட்டர் ஊழியர் மற்றும் ஐந்து கடன் அதிகாரிகள் உள்ளனர்.

கார்டியனின் கடன் திட்டங்கள் ஆறு விதமான பணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளன: புதிய கழிவறை, புதிய நீர் இணைப்பு, ஏற்கனவே உள்ள நீர் இணைப்பு மற்றும் கழிவறை வசதிகளை புதுப்பிப்பது, தண்ணீர் சுத்திகரிப்பு வசதி, மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் பயோ கேஸ் அமைப்பு. இவை ஒவ்வொன்றுக்கும் ரூ.5,000 முதல் ரூ.14,000 வரை கடன் வழங்கப்படுகிறது.18 மாத காலத்தில் திருப்பு செலுத்தலாம்.

"இந்த கடன்கள் எல்லாமே குறையும் 21 சதவீத வட்டி கொண்டது மற்றும் கடன் தொகையில் ஒரு சதவீதம் செயல்முறை கட்டணமாக பிடித்தம் செய்யப்படுகிறது" என்கிறார் பால். இந்த வகை நுண்கடனில் முன்னோடி என்பதால் கார்டியன் நிறுவனம் பல சவால்களை எதிர்கொள்கிறது.

"நிதி அமைப்புகள் இன்னமும் கூட முன்னுரிமை துறைகளின் கீழ் கடன் நிதி வழங்க தயங்குகின்றன. நுண்கடன் நிறுவனங்கள் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கி ஆகியவற்றிடம் பல முறை கோரிக்களை வைத்துள்ளன” என்கிறார் அவர்.

"மேலும் ஆரோக்கியமான சுகாதார பழக்கங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துச்சொல்வதும் கடினமாக உள்ளது. இவர்கள் பல காலமாக கழிவறைகள் பயன்படுத்தியதில்லை. கழிவறைகளை பயன்படுத்துவது ஆரோக்கியமானது, அதிக செலவில்லாதது என புரிய வைக்க கலாச்சார மாற்றம் தேவைப்படுகிறது”என்கிறார் அவர்.

இவற்றை மீறி கார்டியன் நிறுவன குழு தங்கள் வீச்சை அதிகமாக்கி, செயல்திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. பிரதமரின் அழைப்புக்கு ஏற்ப கார்டியன் தமிழகத்தில் 2020 வாக்கில் ஒரு லட்சம் வீடுகளில் கழிவறை வசதி அமைத்து கொடுக்க கடனுதவி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

“மேலும் 10 மாவட்டங்களில் 5 கிளைகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். ஊக்கம், விழிப்புணர்வு, கிராம கூட்டங்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை பங்கேற்க வைப்பதன் மூலம் உள்ளூர் ஊழியர்களை பணிக்கு அமர்த்த உள்ளோம். கழிவறை கடன் திட்டங்களை பிரபலமாக்கி தேவையை உருவாக்குவோம். வீடுகளில் குழாய் அமைப்பது மற்றும் கழிவறை அமைப்பது ஆகியவற்றில் கார்டியன் குழு, வாடிக்கையாளர்கள், மேஸ்திரி மற்றும் பஞ்சாயத்து தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும். மேலும் அவற்றின் பயன்பாடு மற்றும் பராமரிப்பையும் தொடர்ந்து கண்காணிக்கும்” என்கிறார் பால்.

கார்டியனின் அனுபவம் வாய்ந்த குழு, தங்கள் அனுபவம் மூலம் கனவு திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வருகிறது. முன்னோடி முயற்சியில் ஈடுபடுவதன் சிறப்பு அதில் உள்ள ஒவ்வொரு தருணத்திலும் புதிதாக கற்றுக்கொள்வது தான். உண்மையில் ஏற்கனவே அறிந்ததை விட இன்னமும் கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதில் தான் சவாலே இருக்கிறது.