பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளை மீட்டெடுக்க ’மில்லட் மம்மா’ தொடங்கிய பொறியாளர்!

0

பர்கர் அல்லது பாஸ்தா கடைகள் அமைப்பது லாபகரமான வணிகமாக கருதப்படும் சூழலில் பெங்களூருவில் உள்ள ஒருவர் பாரம்பரிய உணவு முறையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 26 வயதான அபிஷேக் ‘மில்லெட் மம்மா’ என்கிற உணவகம் மற்றும் உணவு கேட்டரிங் சேவையை பெங்களூருவின் சவுத் எண்ட் சர்கிள் பகுதியில் துவங்கியுள்ளார். இதில் இந்தியாவின் வளர்ச்சியுறா பகுதிகளின் உணவான சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சூடான சுவையான உணவு பரிமாறப்படுகிறது.

ஆனால் இந்த நிறுவனரின் நோக்கமே மில்லட் மம்மாவை வேறுபடுத்திக் காட்டுகிறது. உடல் நலத்திற்கு ஏற்ற சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நலன்கள் குறித்து அபிஷேக் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அத்துடன் கழிவுகளற்ற வாழ்க்கை முறையை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட இந்த நிறுவனர் உணவு வணிகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்பதற்கும் சான்றாக விளங்குகிறார். 

மில்லட் மம்மா வளாகத்தில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட அல்லது நன்கொடையாக கிடைத்த ஃபர்னிச்சர்கள் காணப்பட்டது. அபிஷேக் ’தி இண்டியன் எக்ஸ்பிரஸ்’-க்கு தெரிவிக்கையில்,

கே ஆர் மார்கெட்டில் விற்பனையாளர்கள் பொது குளியலிடங்களில் குளிப்பார்கள். இங்கு நாற்காலி அல்லது டேபிள் விறகாக பயன்படுத்தப்படும். நான் அவற்றை 75 ரூபாய்க்கு வாங்கினேன். அப்புறப்படுத்தப்பட்ட மர கூடைகளை பழக்கடைகளிலிருந்து இலவசமாக பெற்றுக்கொண்டு அவற்றை புத்தக அலமாரியாக மாற்றினேன். சணல் பைகள் தலையணை உரைகளாக பயன்படுத்தப்பட்டது. தும்கூரைச் சேர்ந்த கிராமப்புற கைவினைஞர்களிடம் இருந்து மூங்கில் கூடைகள் வாங்கி விளக்கு தாங்கிகளாக பயன்படுத்தும் விதத்தில் மாற்றினேன்.

இந்தத் தகவல்களால் நீங்கள் வியப்படையவில்லை எனில் அபிஷேக் தேர்ந்தெடுக்கும் ஊழியர்கள் குறித்து கேள்விப்பட்டால் நீங்கள் நிச்சயம் வியந்து போவீர்கள். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே தினமும் சிறுதானிய உணவு வகைகளைத் தயாரிக்கின்றனர். அவர் கூறுகையில்,

சிறுதானிய உணவு வகைகள் அனைத்திலும் இந்தப் பெண்களே புதுமைகள் படைக்கின்றனர். சமீபத்தில் என்னுடைய அம்மா இணைந்துள்ளார். தற்போது அவர் என்னுடைய வணிக பார்ட்னர்.

பொங்கல், வடை, லட்டு, ரசம், சாம்பார் என சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பயனர்களைச் சென்றடைந்து வருகிறது. அபிஷேக் இந்த உணவுப் பொருட்களை நிகழ்வுகளுக்கு எடுத்துச் செல்லும்போது சிறுதானிய உணவு உட்கொள்வதன் அவசியத்தை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறார். அவர் கூறுகையில்,

இந்த உணவகம் சிறுதானியங்களை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நலன்களை நன்கறிந்தவர்களுக்கானது. நான் மிகப்பெரிய பார்ட்டிகளுக்கு உணவளிக்கும்போது சிறுதானியம் குறித்து அறியாத வாடிக்கையாளர்கள் சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் அனைத்து உணவு வகைகளையும் சாப்பிடலாம் என்பதை உணர்வார்கள்.

அபிஷேக் லாபமோ நஷ்டமோ இல்லாத நிலையை எட்டியுள்ளதாகவும் இந்த வணிகம் மூலம் ஈட்டப்பட்ட அனைத்து வருவாயும் திரும்ப வணிகத்திற்காகவே முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மில்லட் மம்மா பெங்களூருவின் பசவனகுடி மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு உணவு விநியோகிப்பதாக ’ஏசியானட் நியூஸபிள்ஸ்’ தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA