செல்லப் பிராணிகளை கவனித்துக் கொள்ள உதவும் பிரத்யேக செயலி 'Tails Life'

0

ஐந்தறிவு ஜீவராசிகளான நாய், பூனை, முயல், கிளி உள்ளிட்டவற்றை வீட்டில் வைத்து செல்லமாக வளர்ப்பதென்றால் பலருக்கும் அலாதி பிரியம். ஆனால் ஆசையாய் வளர்க்கும் செல்லப் பிராணியை எப்படி பராமரிப்பது, விடுமுறைக்குச் செல்லும் போது அவற்றை எங்கே விட்டுச் செல்வது என்பதில் தொடங்குகிறது பிரச்சனை. இது போன்ற சிக்கலில் தவிப்பவர்களுக்கு கைகொடுக்கிறது செல்லப்பிராணிகளுக்கான பிரத்யேக செயலி "டெய்ல்ஸ் லைஃப்" (Tails life). தமிழகத்திலேயே முதல்முறையாக செல்லப்பிராணிகளுக்கான செயலியை அறிமுகம் செய்து அவற்றை பிரபலப்படுத்தி வருகிறார் டெய்ல்ஸ் லைஃப்பின் நிறுவனர் பாலாஜி ரமேஷ்.

பாலாஜி ரமேஷின் இந்த தொழில்முனைவுக்குப் பின்னால் இருக்கும் நெகிழ்ச்சியான கதையை அவர் தமிழ் யுவர்ஸ்டோரி யிடம் பகிர்ந்து கொண்டார்:

“எனக்கும் என் மனைவிக்கும் என் அன்புத் தங்கை ஒரு காக்கர் ஸ்பானியல் நாய்குட்டியை பரிசளித்தார். என் அம்மா அதற்கு ஆசையாய் பெப்பர் என பெயரிட்டார். பெப்பரை வளர்ப்பதில் எங்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. அவனுக்கு முடி வெட்ட, அழகுப்படுத்த என அன்றாட சேவைகள் எங்கு கிடைக்கிறது என்று தெரியாமல் கஷ்டப்பட்டோம்”. 

சில நேரங்களில் பெப்பருக்கு தேவையான வசதிகளை செய்து கொள்ள நகருக்கு வெளியே பயணிக்கவும் வேண்டி இருந்தது. பெப்பர் எங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர்போல பார்க்கப்பட்டதால் நாங்கள் உணவகங்களுக்குச் சென்றால் கூட செல்லப்பிராணிகளுக்கு உகந்த உணவகத்தையே தேர்வு செய்ததாக குறிப்பிடுகிறார் அவர்.

'டெய்லிஸ் லைஃப்' தொடக்கம்

பெப்பரை வளர்ப்பதில் தினந்தோறும் பல்வேறு போராட்டங்கள் இருந்த போதும் அதை மகிழ்வோடே செய்ததாகக் கூறுகிறார் பாலாஜி ரமேஷ். “நாய்கள் வளர்ப்பு பற்றி புத்தகங்கள் மற்றும் இணையத்தில் பலவற்றை படித்துத் தெரிந்து கொண்டேன், இதை ஒரு தொழிலாக எடுத்துச் செய்யும் நோக்கில் நேர்த்தியான தொழில்முறையை கடைபிடிக்கும் சிலரை சந்தித்தேன். இறுதியில் செல்லப்பிராணிகளுக்கான அனைத்து காரணிகளையும் உள்ளடக்கிய ஒரு செயலியை உருவாக்கலாம் என முடிவு செய்தேன். செல்லப் பிராணி வளர்ப்போர் ஒரே கிளிக்கில் தங்களின் வீட்டு விலங்கிற்கு தேவையான சேவைகள் அனைத்தையும் பெற முடியும் என்பதே இதன் நோக்கம்.” டெய்ல்ஸ் லைஃப் செயலியை கூகுள் ப்ளேஸ்டோர் மற்றும் ஆன்டிராய்டு போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செல்லப்பிராணிகளுக்காக செயலி உருவாக்கும் எண்ணத்தை தனது நண்பர்களோடு பகிர்ந்து கொண்ட போது அவர்கள் பச்சைக்கொடி காட்டியதாக கூறுகிறார் பாலாஜி ரமேஷ். அதைத் தொடர்ந்து என் பெற்றோர், மனைவி மற்றும் என்னைச் சார்ந்தவர்களும் ஊக்கமளிக்கவே நான் செயலிக்கான என் முயற்சியை முழுவீச்சில் தொடங்கினேன் என்கிறார் அவர்.

நம்மைப்பற்றி நன்கு புரிந்துகொண்டவர்கள் தொழில் தொடங்க உதவியாக இருந்தால் நிச்சயம் வெற்றிகிடைக்கும் என்பது பாலாஜி ரமேஷின் வாழ்வு உணர்த்துகிறது.

“தொழில் தொடங்கத் தேவையான வாடிக்கையாளர் கொள்கைகள், செயலி டெவலப்பர்கள் என பல நண்பர்களுடன் சேர்ந்து ஆலோசனை செய்தேன். திட்டம், எண்ணம், செயல்முறை என அனைத்திலும் பல்வேறு நல்ல முன்னேற்றங்கள் அந்த காலகட்டத்தில் நடந்தது. குறிப்பாக, நியூஸிலாந்தில் படித்துவிட்டு இந்தியா திரும்பிய எனது நண்பர் துஷ்யந்த் உதவ தயாராக இருந்தார். அதேப்போல், எனது மனைவி பிராச்சியும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு டேட்டா பேஸை உண்டாக்க உதவினார்” என்று பெருமூச்சுடன் பேசுகிறார் பாலாஜி ரமேஷ். 

சட்டரீதியான பதிவுக்கான ஆவணங்கள், வங்கி அமைப்புகள் என பல வகையான உதவிகளை இந்த இருவரும் சேர்ந்து செய்வதாக சொல்கிறார் பாலாஜி.

'டெய்ல்ஸ் லைஃப்' பயணம்

7-8 மாத தொடக்கப் பணிகளுக்குப் பிறகு, நவம்பர் 13, 2015 அன்று செயலியை துவக்கியுள்ளதாகவும், தம்மைச் சுற்றியுள்ளவர்களின் மதிப்பீட்டிற்கு பிறகு, சந்தையின் மதிப்பீடு எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள தற்போது ஆர்வமாக காத்திருப்பதாக குதூகலிக்கிறார் பாலாஜி. “செல்லப்பிராணி விரும்பிகள் குழுவாக இணைந்து தொடங்கிய டெயில்ஸ் லைஃப் செயலி நிச்சயம் பிராணி வளர்ப்பவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருக்கும்” என நம்பிக்கை தெறிக்க பேசுகிறார் பாலாஜி.

“செல்லப்பிராணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் எங்குள்ளன? பிராணிகளுக்கான ஸ்பா எங்கிருக்கிறது? அங்கு என்ன சேவையெல்லாம் கிடைக்கிறது? விடுப்பில் வெளியூர் செல்லும்போது பிராணிகளை எங்குவிட்டு செல்லலாம்? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இந்த செயலியில் பதில் கிடைக்கும்” என உறுதியாக பேசுகிறார் பாலாஜி. அத்தோடு, நிபுணர்களின் விளக்கங்கள், தினசரி தகவல்கள் என அனைத்தும் ஒரு செயலில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சேவை குறித்து ஒரே கிளிக்கில் பட்டியலை பார்க்கமுடியும். சேவை வழங்குபவர்களுடன் பேசலாம், மதீப்பீடுகளை கொண்டு அளவிடலாம், அவர்களின் இடத்தை கண்டறியவும் இந்த செயலி உதவியாக இருக்கும்” 

என்கிறார் தொடர்பியலில் முதுகலை பட்டதாரியான பாலாஜி ரமேஷ்.

கோயம்புத்தூரிலிருந்து பெங்களூர் சென்றது பற்றி

பெங்களூரில் தற்போது இடம்பெயர்ந்துள்ள பாலாஜி ரமேஷ், பிறந்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில், இதனால் “தற்போது எனக்கு பரிட்சயமான இரண்டு ஊர்களான பெங்களூரு, கோயமுத்தூர் ஆகிய பகுதிகளின் தகவல்களை கொண்ட செயலியில், விரைவில் மற்ற பெரு நகரங்களின் தகவல்களும் இடம்பெறச்செய்வோம்” என்கிறார் பாலாஜி.

தனது மனைவி ப்ராச்சி குப்தா, நண்பர்கள் துஷ்யந்த் ராவ் மற்றும் அவின் படக்கி ஆகியோருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட முனைப்புதான் இந்த செயலி என்று சொல்லும் பாலாஜி, எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் நண்பர்கள் உதவினார்கள் என்கிறார். அந்த வகையில் தான் அதிர்ஷ்டசாலி என்கிறார் பாலாஜி. பாலாஜி ரமேஷ், ப்ராச்சி, துஷ்யந்த் மூவரும் முதுகலை பட்டதாரிகள் என்பதோடு அவர்களுக்கு மார்க்கெட்டிங் துறையில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலான முன் அனுபவம் உள்ளது. இதுவே அவர்களின் செயலி வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்க உதவுகிறது.

”செல்லப்பிராணிகளுக்கான சேவைகள் இன்னும் ஒருங்கிணைக்கப்படாத துறையாகவே இருக்கிறது. அதேபோல், வளர்ந்துவரும் துறையாக இருக்கிறது” என்று கருதுகிறார் பாலாஜி.

சவால்கள் இல்லாமல் எந்த தொழிலும் இல்லை. “தகவல்களை திரட்டுவதில் கடுமையான சவாலை எதிர்கொண்டோம். அதேப்போல், அவற்றை சரிபார்ப்பதிலும்” என்கிறார் பாலாஜி.

வளர்ச்சி

இதுவரை மொத்தமாக 7-8 லட்ச ரூபாய் சுயமுதலீடு செய்துள்ளதாகச் சொல்லும் பாலாஜி, தமது வளர்ச்சிப்பாதையின் தூண்களாக தமது பெற்றோர்களைக் கருதுவதாக சொல்கிறார். 

“லாபத்தை பற்றி மட்டும் நினைத்தால் ஒரு தொழிலில் வெற்றி பெற முடியாது. முதலில் ஒரு தொழில் வெற்றிபெற வாடிக்கையாளர்களின் அறிமுகம் தேவை, அதன் பின்னரே லாபத்தை பற்றி யோசிக்க முடியும். இதனால் தற்போது டெய்ல்ஸ் லைஃப் செயலியின் சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அடுத்தகட்டமாக இதை கட்டணத்துடன் கூடிய கூடுதல் செயலியாக அடுத்த வெர்ஷனில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும்” சொல்கிறார் பாலாஜி ரமேஷ்.

ஒரு தொழிலைச் செய்யவேண்டும் என்றால் முழு ஈடுபாட்டுடன் செய்வதே நல்லது என்று தொழில் தொடங்கவுள்ளவர்களுக்கு அறிவுரையாக கூறுகிறார் பாலாஜி. “ஆரம்பம் என்பது ரோலர் கோஸ்ட்டர் மாதிரி தொடர் ஓட்டம். ஆரம்பித்துவிட்டால், தொழிலை மீண்டும் மீண்டும் காதலித்துக்கொண்டே இருக்கவேண்டும்” என்று நகைக்கிறார்.

சண்டையிடும் நாய் எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை விட, நாயின் சண்டைத் திறன் எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதே முக்கியம் என்ற மார்க் டிவைன் கருத்தை சொல்லி முடிக்கிறார் பாலாஜி.

இணையதள முகவரி : TailsLife

ஃபேஸ்புக் பக்கம், ட்விட்டர்


Stories by Gajalakshmi Mahalingam