ஜீகா வைரஸ்-க்கு விரைவில் மருந்து:  ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்திய விஞ்ஞானி!

0

இந்திய விஞ்ஞானி டாக்டர். ராஜ்னீஷ் கிரி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) மண்டியில் ஜீகா வைரஸின் ப்ரோட்டீன் அமைப்பை ஆராய்ந்து வருகிறார். தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விளாதிமிர் யுவர்ஸ்கி மற்றும் ஆராய்ச்சி அறிஞரான புஷ்பேந்திரா மணி மிஷ்ரா ஆகியோர் அவருக்கு உதவுகின்றனர்.

கணக்கீட்டு ஆய்வுகள், உயிர் இயற்பியல் ஆய்வுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வைரஸ் மூலக்கூறுகளின் கட்டமைப்பை இக்குழுவினர் ஆராய்ந்தார். இந்த ஆய்வு ‘ஜர்னல் ஆஃப் மாலிக்யூலர் பயாலஜி’யில் வெளியிடப்பட்டது.

Dr. Rajnish Giri, பட உதவி: The Week
Dr. Rajnish Giri, பட உதவி: The Week
டாக்டர். ராஜ்னீஷின் ஆய்வு ஜிகா வைரஸ் மூலக்கூறுகளில் மனிதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் பகுதியில் கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்படுகிறது.

இதற்கு முன்பு இந்த ஆய்வு அதிக நேரம் எடுக்கக்கூடிய சிக்கலான பணியாக இருந்தது. ஏனெனில் இந்த வைரஸின் வளர்ச்சி ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய நிலை இருந்தது. அறிவியலில் ஒரு புதிய பிரிவான உயிரித் தகவலியல் பிரிவின் சமீபத்திய வளர்ச்சியானது விஞ்ஞானிகள் வைரல் ப்ரோட்டீன்கள் மற்றும் ஜீன்களின் தகவல்களைப் பயன்படுத்தி உடனடி கணக்கீட்டு ஆய்வு மேற்கொள்ள உதவுகிறது.

’தி ட்ரிப்யூன்’ உடனான நேர்காணலில் ராஜ்னீஷ் கூறுகையில்,

“மருந்துகளை வடிவமைப்பதிலும் வைரஸ் மூலம் பரவும் நோய்களை எதிர்த்துப் போராடும் சிகிச்சை வழிமுறைகளிலும் வைரல் உயிரி தகவலியல் புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் வைரஸின் ப்ரோட்டீனில் உள்ள MRF பகுதிகளை கண்டறிவதற்காக MRF ஆய்வுகளை கணக்கீடு செய்யும் டூல்களைப் பயன்படுத்துகிறோம். UniProt என்கிற ஜீகா வைரஸ் ப்ரோட்டீன் டேட்டாபேஸில் இருந்து ப்ரோட்டீன் தகவல்களைப் பயன்படுத்தினோம்,” என்றார்.

2006-ம் ஆண்டு முதல் 70 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ஜீகா வைரஸ் இருப்பதற்கான ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக நோய் கிருமி பாதித்த ஏடிஸ் கொசு கடிப்பதன் மூலமே இது பரவுகிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் மனித உடலில் பரவி நரம்பு செல்களை தாக்கக்கூடியதாகும். இதில் பொதுவாக பாதிக்கப்படுவது வயிற்றில் இருக்கும் கரு. ஏனெனில் அதன் நரம்பு செல்கள் இன்னமும் உருவாகும் கட்டத்திலேயே இருக்கும். இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தி கருச்சிதைவு, இறந்து பிறத்தல், மூளைச் சிதைவு போன்ற நிலையை ஏற்படுத்தும்.

கட்டுரை : THINK CHANGE INDIA