எந்திரமயமாகும் ஐடி துறை, பொறியாளர்களை வேலை இழக்கச் செய்யுமா?

0

கடந்த பத்து வருடங்களில் தகவல் தொழில்நுட்பத் துறை பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளது. எந்திரமயமாக்கம் (Automation,Robotics), மேகக்கணினி (Cloud Computing), பிக் டேட்டா (Big Data) போன்றவைகள் இந்த துறையில் எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. இந்த மாற்றங்களினால் பெரு நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க முடிகின்றது. இந்த மாற்றங்களின் விளைவு தான் இந்தியாவில் அதிக தொடக்க நிறுவனங்கள் (Startup) முளைக்க காரணமாக அமைந்தது. 

இவைகளில் இன்று பெரும் அளவு விவாதிக்க படுவது, எந்திரமயமாக்கம் ஆகும். பெரு நிறுவனங்கள் எந்திரமயக்கத்திற்கு பெரிய அளவில் முதலீடு செய்து வளரும் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இருக்கின்றனர். இன்றைய சூழ்நிலையில் இந்த துறையில் தான் அதிகமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றது. வளரும் இந்த துறை பற்றிய ஒரு சில தகவல்களின் தொகுப்பு தான் இந்த கட்டுரை.

எந்திரமயமாக்கம் (Automation) என்றால் என்ன ??

மனிதர்களின் தேவைகளை, பொறியாளர்கள் மூலம் கணினியில் தீர்வு கண்டது அந்த காலம். இனி மனிதர்களின் தேவைகளை கணினி மூலம் கணினி தீர்வு காண்பதே எந்திரமயமாக்கம். ஒரு பொறியாளர் கணினி மூலம் செய்யக் கூடிய வேலையை கணினி தானாய் செய்வது தான் எந்திரமயமாக்கம்.

எதற்கு இது ?

வாடிக்கையாளர்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே உள்ளது. ஒரு சில துறைகளில் தேவைகளுக்கு குறைவாகவே பொறியாளர்கள் உள்ளனர். குறிப்பாக Service Desk எனப்படும் வாடிக்கையாளர் பிரதிநிதி வேலைக்கு பொறியாளர்கள் பெரும் அளவு ஈடுபாடு காட்டுவதில்லை. ஆனால் தேவைகளோ அதிகமாகிக்கொண்டு இருக்குகின்றது. இதற்கு ஒரே தீர்வு அவைகளை எந்திரமயமாக்குவது என்று பெரு நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றது.

என்ன பலன்?

எந்திரமயமாக்கத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் வளரும் அதிகமான தேவைகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க இயலும். பொறியாளர்கள் கடினமாக நினைக்கும் வேலைகளை இதன் மூலம் எளிமையாக செய்ய முடியும். எளிமையாக மட்டும் இல்லமால், துல்லியமாக செய்து முடிக்க இயலும். ஆனால் ஒரு போதும் பொறியாளர்களின் நுண் அறிவை எந்திரங்களால் ஈடு செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

வேலையின்மை அபாயமா?

எந்திரமயமாக்கத்தின் விளைவாக பெரும் அளவில் பொறியாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்ற கருத்து பரவலாக பரவி வருகின்றது. இது முழுமையாக உண்மை இல்லை. எந்திரங்கள் மனிதர்களுக்கு உதவ மட்டுமே முடியும், மனிதர்களை ஒரு போதும் ஈடு செய்ய முடியாது. மனிதர்கள் என்றுமே எந்திரங்களுக்கு ஒரு படி மேல் தான். எந்திரங்களுக்கு ஈடு கொடுக்க முடியாத பொறியாளர்கள் தங்களை மெருகேற்றி முன்னேறி செல்வதே புத்திசாலித் தனம்.

பொறியாளர்கள் மட்டும் அல்லாமல், இந்த துறைக்கு வரும் மாணவர்களும் Automation, Robotic, Aritifical Intelligence, Cloud Computing போன்றவைகளை பற்றி தெரிந்து கொள்வது வருங்காலத்தில் நல்ல வாய்ப்புகளை தரும்.

(பொறுப்பு துறப்பு: கட்டுரையாளர் பிரவீன் குமார் ராஜேந்திரன் ஒரு மென்பொருள் பொறியாளர். கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். யுவர்ஸ்டோரி இதற்கு பொறுப்பேற்காது)