வீட்டில் இருந்தபடியே உங்கள் இஷ்ட தெய்வத்தை அருகில் காண விருப்பமா? 

மெய்நிகர் உண்மை தொழில்நுட்பம் மற்றும் இமேஜ் பிராசசிங் வாயிலாக தெய்வத்தை நேரடியாக வழிபட உதவும் ஸ்டார்ட் அப்! 

0

’வி ஆர் டிவோட்டி’ ‘VR Devotee' பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப். அபுல் நஹாதா, ஜான் குருவில்லா, அஷ்வானி கார்க் ஆகியோர் இதன் நிறுவனர்கள். மெய்நிகர் உண்மை தளத்தில் வழிபாட்டுத் தலங்களில் இருந்து நேரலையில் மத சடங்குகளைக் காணும் அனுபவத்தைப் பெற உதவுகிறது. ப்ரீ சீரிஸ் ஏ நிதியாக 5,00,000 டாலர்களை ஹெச்என்ஐ நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது.

காலையில் படுக்கையிலிருந்து எழும் நேரம் வந்ததும் உங்களது இஷ்ட தெய்வத்தின் புகைப்படத்தைப் பார்த்து கடவுளின் ஆசிகளுடன் கண் விழிக்கும் பழக்கம் உங்களில் எத்தனை பேருக்கு உள்ளது?

நிச்சயம் நம்மில் பலருக்கு இந்த வழக்கம் இருக்கும். அதே போல புனித யாத்திரை செல்ல திட்டமிட்டு பல்வேறு காரணங்களால் அது தடைபட்டிருக்கலாம். உங்கள் மனைவி கருவுற்றதால் செல்லமுடியாமல் போயிருக்கலாம். உங்கள கணவர் பணி தேடுவதால் நிறைவேறாமல் இருக்கலாம். அல்லது உங்கள் பெற்றோர் வயதானவர்களாக இருப்பதால் செல்ல முடியாமல் போயிருக்கலாம். இப்படி எந்த காரணமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப்பான கல்ப்னிக் (Kalpnik), இந்த கவலையைப் போக்குகிறது. உங்களது இஷ்ட தெய்வத்திற்கு நடக்கும் பூஜைகளையும், இதர சம்ப்ரதாயங்களையும்  VR Devotee என்கிற மெய்நிகர் உண்மை தளத்தின் வாயிலாக உங்களது வீட்டு வரவேற்பறைக்கே கொண்டு சேர்க்கிறது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்தத் தளத்தில் 150 கோயிகள் இணைந்துள்ளன. ஏற்கெனவே ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து 5,00,000 டாலர்கள் நிதி உயர்த்தியுள்ளது. 1.27 லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன் சீரிஸ் ஏ நிதி உயர்த்தும் முயற்சியில் உள்ளது.

இந்த ஸ்டார்ட் அப் அனுபவத்தினால் உருவானதாகும். அபுல் நஹாதா, ஜான் குருவில்லா, அஷ்வானி கார்க் ஆகிய மூன்று நிறுவனர்களின் கூட்டு அனுபவம் 80 ஆண்டுகள். அபுலும் ஜானும் ஏற்கெனவே தொழில்முனைவு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஜான் ஏர் டெக்கானில் பணியாற்றியுள்ளார். பல்வேறு விளம்பர நிறுவனங்களுடனும் ஓபராய் நிறுவனத்துடனும் பணியாற்றியுள்ளார். 

அபுல் டெலிகாம் பிரிவில் ஒரு ஸ்டார்ட் அப்பை உருவாக்கினார். இந்த ஸ்டார்ட் அப் 17 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது. அதன் பிறகு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்குதான் ஜானை சந்தித்தார். அஷ்வானி ஜானின் இருப்பிடத்திற்கு அருகில் வசிப்பவர். இவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக இண்டெல் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.

”இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நாங்கள் அனைவரும் பணியை விட்டு விலகப்போவது ஒருவருக்கொருவர் தெரியாது. அபுல் விமானத்தில் இருக்கும்போது பணியை விட்டு விலகியது குறித்து என்னிடம் கூறினார். அடுத்த நாள் அஷ்வானியைச் சந்தித்தேன். அவரும் பணியை விட்டு விலகிவிட்டதாக தெரிவித்தார். நானும் என்னுடைய ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருந்தேன். அப்போதுதான் நாங்கள் அனைவரும் அடுத்து என்ன செய்வது என திட்டமிட்டோம்,” 

என்றார் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப்பான கல்ப்னிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜான். இது 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது.

’விஆர் டிவோட்டி’ துவக்கம்

பின்னர் மூவரும் சந்தித்து சொந்தமாக நிறுவனம் துவங்குவது குறித்து கலந்தாலோசிக்கத் துவங்கினர். அவர்கள் முன்வைத்த ஒவ்வொரு திட்டமும் ஏற்கெனவே பலர் பின்பற்றி வந்த முயற்சியாக இருந்தது. எண்ணற்ற வழக்கமான மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருந்தது.

ஒருமுறை அவர்கள் அனைவரும் அபுலின் குடும்பத்தினருடன் மும்பையில் இரவு உணவு சாப்பிட்டனர். அப்போது திடீரென்று அபுலின் பெற்றோர் ஒரு பெரிய மதச்சடங்கு ஒரு கோயிலில் நடைபெறுவது குறித்தும் அவர்களுக்கு வயதான காரணத்தால் அங்கு செல்லமுடியவில்லை என்றும் பகிர்ந்துகொண்டனர்.

அப்போதுதான் ஜான், அபுல், அஷ்வானி மூவரும் மத வழிபாடுகளை பக்தர்களுக்கு நேரலையில் கொண்டு சேர்ப்பது குறித்து விவாதித்தனர். இதைத் தொலைக்காட்சி வாயிலாக இல்லாமல் மெய்நிகர் உண்மை தொழில்நுட்பம் வாயிலாக சாத்தியப்படுத்துவது குறித்தும் விவாதித்தனர்.

55 லட்சம் முதலீடு செய்து நிறுவனத்தை பதிவு செய்து இந்தப் முயற்சிக்கு செயல் வடிவம் கொடுக்கத் துவங்கினர். முதலில் மத வழிபாட்டுத் தலத்திலிருந்து ஆதரவு பெறவேண்டியிருந்தது. ஜான் அடிக்கடி செல்லும் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள லெபாக்‌ஷி பகுதியில் அமைந்திருக்கும் பழமையான கோயிலுக்கு மூவரும் சென்றனர். கோயிலில் உள்ள அர்ச்சகரிடம் இந்த திட்டம் குறித்து தெரிவித்தனர். இந்த முயற்சியால் பலர் கோயிலின் தெய்வத்தை வழிபடலாம் என்பதால் அவர் உற்சாகமானார்.

"சுவாரஸ்யமாக நாங்கள் பேசிய சில முதலீட்டாளர்களைக் காட்டிலும் அர்ச்சகர்கள் விரைவாக எங்களது முயற்சியை ஆதரித்தனர்,” என்றார் அஷ்வானி. 
VR Devotee நிறுவனர்கள்
VR Devotee நிறுவனர்கள்

அப்போதுதான் வி ஆர் டிவோட்டி ப்ராண்ட் உருவானது. கோயில் முடிவானதும் மூவரும் வழிபாட்டுத் தலத்தில் உயர் ரக கேமிராக்களை பொருத்தி பிரார்த்தனைகளையும் சடங்குகளையும் பதிவு செய்யத் துவங்கினர். ”நாங்கள் முதல் இரண்டு கோயில்களில் செயல்படத் துவங்கியபோது சில குறைபாடுகள் இருந்தது. ஆனால் ஒரு முயற்சியின் ஆரம்பக் கட்டம் என்பது படிப்பினைகளும் வணிக மாதிரியைத் தொடர்ந்து மேம்படுத்தும் பணிகளும் நிறைந்ததாகவே இருக்கும்,” என்றார் ஜான்.

இரண்டு முறைகளில் செயல்படலாம் என தீர்மானித்தனர். மெய்நிகர் அனுபவமில்லாத ஒரு செயலி வாயிலாக கிட்டத்தட்ட தெய்வத்தின் அருகில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவது முதல் வகை. மெய்நிகர் அனுபவத்துடன்கூடிய ஒரு செயலி மற்றும் ஹெட்செட் வாயிலாக வழங்குவது இரண்டாவது வகை. மேலும் முதல் வணிக மாதிரியில் செயலி பயன்பாட்டிற்கான கட்டணத்தைக் கோயில் செலுத்தியது.

இந்த வணிக மாதிரியில் வளர்ச்சியடைய முடியாது என்பதை மூவரும் உணர்ந்தனர். 2017-ம் ஆண்டு கோடைக்காலத்தில் கோயில்களுக்கு கட்டணம் ஏதும் விதிக்காமல் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தும் வகையில் உள்ள வணிக மாதிரிக்கு மாற தீர்மானித்தனர். இதன் பிறகு தயாரிப்பு வளர்ச்சியடையத் துவங்கியது. கோயில்கள் செயலியை சந்தைப்படுத்தத் துவங்கியது. அதன் பிறகு மக்கள் சேவையைப் பயன்படுத்தத் துவங்கினர்.

”கடந்த ஆண்டு வரை இலவசமாக சேவை வழங்கினோம். ஆண்டு சந்தா அடிப்படையிலான சேவையை அறிமுகப்படுத்தியதும் நாங்கள் நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் அதிகமாக செலுத்த மக்கள் முன்வந்தனர்,” என்றார் அஷ்வானி.

அனைத்து பிரார்த்தனைகளையும் காண்பதற்கு இக்குழுவினரால் மாதத்திற்கு 99 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வணிக ரீதியாக செயல்படத் துவங்கியது.

”ஆன்மீகம் மற்றும் மதம் சார்ந்த வணிகம் மிகப்பெரியது. தொலைக்காட்சி வாயிலான ஆன்மீகமானது தெய்வத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தாது. வி ஆர் ஹெட்செட் மற்றும் டான்கிள் பயன்படுத்தி மெய்நிகர் வடிவிலான பூக்கள், சூடம், தூபம், தண்ணீர் ஆகியவற்றுடன் கடவுளை வழிபட மெய்நிகர் அனுபவம் உதவுகிறது,” என்றார் ஏஞ்சல் முதலீட்டாளர் பாபி ரெட்டி. நீங்கள் இந்த செயலி வாயிலாக 150 கோயில்களைக் கண்டறியலாம். 

”காட்சிகள் தத்ரூபமாக இருக்கவும் தெய்வத்திற்கு மிக அருகில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தவும், பயனர்களுக்கு நெட்வொர்க் வாயிலாக தொய்வின்றி காட்சிப்படுத்துவதிலும் இக்குழுவினர் பணியாற்றினர்,” என்றார் ஜான்.

அடுத்த ஆண்டு முதல் வி ஆர் டிவோட்டி வருவாய் ஈட்டத் துவங்கும். பல ஆன்லைன் ஜோதிடம் மற்றும் மத சேவையளிக்கும் நிறுவனங்களுடன் இந்நிறுவனம் போட்டியிடுகிறது. கேபிள் டிவியில் மதத்தினை சேவையாக வழங்கும் டிவி சானல்களுடன் போட்டியிடுகின்றனர்.

மதம் தொடர்பான வணிகம் 40 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இந்திய ஊடகங்கள் மதிப்பிடுகிறது. சந்தை அளவு குறித்த அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவும் இல்லை. எனினும் இந்தியா நம்பிக்கை சார்ந்த நாடு என்பதும் இங்குள்ள மக்களுக்கு அவர்களது ஊதியத்தைப் போன்றே மதமும் முக்கியமானது என்பதும் உலகம் முழுவதும் அறிந்த விஷயமாகும்.

ஆனால் இன்றைய நவீன காலத்தில் கடவுள்களே தங்களது செய்தியை உலக மக்களிடையே பரப்புவதற்கு க்ளௌட் பயன்படுத்தவேண்டிய நிலை உள்ளது. இதற்கு முன்பு பக்தியை ஏற்படுத்த புத்தகங்கள், வானொலி, திரைப்படம், டிவி, வலைதளம் போன்றவை பயன்படுத்தப்பட்டது.

வருங்காலத்தில் மக்களிடையே செய்திகளைக் கொண்டு சேர்க்கும் இத்தகைய செயல்முறையில் மெய்நிகர் உண்மை தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும். இந்த மூவரும் கடவுளின் அடுத்தகட்ட நடவடிக்கையை சரியாக புரிந்துகொண்டுள்ளனர்.

ஆங்கில கட்டுரையாளர் : விஷால் கிருஷ்ணா | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL