'தகவல் திங்கள்': ஃபேஸ்புக் காலத்தில் காபி கோப்பை மூலம் நட்பு வளர்க்கும் இணையதளம்

0

ஒரு நல்ல இணையதளத்திற்கான இலக்கண அம்சங்களில் அதன் வடிவமைப்பு, உள்ளடக்க நேர்த்தி என பல விஷயங்களை பட்டியலிடலாம். இந்த பட்டியலில் முதலில் அல்லது கடைசி அம்சமாக அந்த தளத்தின் அக்கரையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது எந்த ஒரு நல்ல இணையதளமும் பயனாளிகள் மீது அக்கரை கொண்டிருக்க வேண்டும்.

இணையதளத்தின் சேவை அல்லது தீர்வு அதன் இலக்கு பயனாளிகளின் பிரச்சனையை தீர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். இல்லை ஏதோ ஒரு குறிப்பிட்ட விதத்தில் அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் தேவையை கண்டறியுங்கள். அதை நிறைவேற்றும் சேவை அல்லது தீர்வு மூலம் வெற்றிகரமான புதிய நிறுவனத்திற்கு வழி பிறக்கும் என்று சொல்லப்படுவதை இணையதளங்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம். இணையவாசிகளுக்கு இருக்கக் கூடிய எண்ணற்ற தேவைகளில் ஒரு சின்ன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட எளிமையான இணையதளம் கூட அருமையான தளமாக அமையும்.

நன்றி: Thinkstock
நன்றி: Thinkstock

கோவொர்கர்காபி.காம் (coworkercoffee.com) இதற்கான அழகான உதாரணம். இந்த தளம் என்ன செய்கிறது என்றால் உங்கள் மீதும், உங்கள் நட்பு அல்லது நட்பின்மை மீது அக்கரை கொள்கிறது. அதனால் அதற்கு தீர்வாக ஒரு கோப்பை காபி சுவையுடன் உங்கள் சக ஊழியரை சந்தித்து பேசுங்களேன் என்கிறது.

இதற்கு உதவும் வகையில் ஒவ்வொரு வாரமும் வேறு ஒரு சக ஊழியருடன் காபி அருந்த வழி செய்கிறது. வழி செய்கிறது என்பதைவிட ஊக்கம் அளிக்கிறது என்று கூறலாம். ஏனெனில் காபி சந்திப்புகளை நீங்களே ஏற்பாடு செய்து கொள்ளலாம், ஆனால் இதுவரை சந்திக்காத நபர்களை ஒரு கோப்பை காபி மூலம் அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் என நட்பாக நச்சரிப்பதை தான் இந்த தளம் செய்கிறது.- இதற்கு உங்கள் அனுமதியையும் கேட்கிறது.

காபி சந்திப்புகளும்,தேநீர் உரையாடல்களும் நாம் எல்லோரும் அறிந்தது தான். அனுபவித்து மகிழ்வது தான். பகல் நேரத்தில் அல்லது மாலை நேரத்தில் அலுவலக ஊழியர்கள் ஒரு குழுவாக சென்று காபி அல்லது டீ குடித்த படி உரையாடி மகிழ்வது வழக்கம் தான் அல்லவா? பல அலுவலகங்களில் நண்பர்கள் இப்படி ஒரு குழுவாக குறித்த நேரத்தில் செல்வதை பார்க்கலாம்.

இந்த குழு அம்சம் தான் கவனிக்க வேண்டியதாகிறது. காபி சந்திப்புகள் நட்பு வளர்க்க உதவுகின்றன. பல நேரங்களில் இந்த சந்திப்புகள் அடிப்படையேலேயே நட்பும் உருவாவது உண்டு. ஒரு கப் காபி சாப்பிடலாமா? என்று கேட்பதன் மூலமே ஒருவரை நண்பராக்கிக் கொண்டு விடலாம். ஆனால் என்ன சிக்கல் என்றால் பெரும்பாலான அலுவலகங்களில் காபி சந்திப்புகள் ஒரு குழுவுக்குள் முடங்கி விடுகின்றன என்பது தான்.

பெரும்பாலும் அதே நண்பர்கள் தான் தினமும் வெளியே வருவார்கள். டீ அல்லது காபி சாப்பிடுவார்கள். நட்பை பரிமாறிக்கொள்வார்கள். இதில் எந்த தவறும் இல்லை தான். ஆனால், ஒரே அலுவலகத்தில் இருக்கும் நபர்கள் ஏன் ஒரே நண்பர்களுடன் காபி சாப்பிட செல்ல வேண்டும்?

இந்த கேள்விக்கு பதிலாக நட்பு, பழக்கம், இணக்கம் என பல காரணங்கள் இருக்கலாம். அதை இங்கு ஆய்வு செய்ய வேண்டாம். விஷயம் என்ன என்றால், அலுவலகத்தில் உள்ள வேறு சக ஊழியர்களுடன் நீங்கள் அவ்வப்போது காபி சுவைக்கு மத்தியில் சந்தித்து பேசிக்கொண்டால் என்ன? அருகாமையும், புன்னகையும் நட்பையும், நல்லுணர்வையும் ஏற்படுத்தி தரும் அல்லவா?

இதைத் தான் கோவொர்கர்காபி தளம் செய்கிறது. ஒவ்வொரு வாரமும் வேறு வேறு சக ஊழியர்களை சந்திக்க நினைவூட்டுகிறது இந்த தளம். அட, நல்ல யோசனையாக இருக்கிறதே என நினைப்பவர்கள் இதில் தங்கள் இமெயில் முகவரியை சமர்பித்து உறுப்பினராக இணையலாம். ஆனால் ஒன்று ஹாட்மெயில், ஜிமெயில் முகவரி எல்லாம் சரிபடாது. உங்கள் அலுவலக இமெயில் முகவரி வேண்டும். அதன் பிறகு நீங்கள் சந்திக்க விரும்பும் சக ஊழியர்கள் மூவரின் இமெயில் முகவரியை இதில் சமர்பிக்க வேண்டும். இந்த முகவரியில் இருந்து ஒரு முகவரியை தேர்வு செய்து திங்கள் அன்று காலை உங்களுக்கு அனுப்பி வைத்து நினைவூட்டும்.

வாரத்தில் ஏதேனும் ஒரு நாள் அந்த ஊழியருடன் நீங்கள் காபி சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம். ஒரே அலுவலகத்தில் பணி புரிந்தால் கூட பலரை பார்த்திருப்போம். புன்னகையுடன் கடந்து சென்று விடுவோம். அலுவல் நிமித்தமின்றி வேறு விதமாக பேசிக்கொண்டிருக்கக் கூட மாட்டோம். பெரிய அலுவலகங்கள் மற்றும் பல துறைகளையும் பிரிவுகளையும் கொண்ட பெரிய நிறுவனங்கள் என்றால் இந்த பாராமுகம் இன்னும் பரவலாக இருக்கும்.

இதை யதார்த்தம் என்று ஏற்றுக்கொள்வதை விட ஒரு கைகுலுக்கல் மூலம் சரி செய்ய முயன்றால் என்ன? வாரந்தோறும் ஒரு புதிய சக ஊழியரை காபிக்கு அழைத்து பேசுவது என்பது நல்ல அனுபவமாகத் தானே இருக்கும். ராமன்-குகன் போன்ற ஒரு மகத்தான நட்புக்கான பாலமாக கூட இது அமையலாம். மனந்திறந்த உரையாடலுக்கு, மேம்பட்ட புரிதலுக்கு வித்திடலாம். அலுவலக நோக்கில் கூட இது நல்லதாகவே அமையும். அலுவலக சூழல் அல்லது கூட்டு முயற்சி பற்றி விவாதிகலாம். இல்லை என்றாலும் கவலையில்லை ஒரு மாலைப்பொழுது நன்றாகவே கழியும்.

ஃபேஸ்புக் யுகத்தில் நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என நட்பு வட்டத்தை பெருக்கிக் கொண்டு லைக்குகள் மூலம் பேசிக்கொள்கிறோம். ஆனால் ஒரே கூரையின் கீழ் இருக்கும் சக ஊழியர்களிடம் நட்பாக நாலு வார்த்தைகள் பேச வேண்டியதும் அவசியம் அல்லவா?

வலைப்பின்னல் காலத்தில் இணையவாசிகளின் அலுவலக நட்பு பற்றிய கரிசனத்தின் விளைவாக உதயமாகி இருக்கிறது இந்த இணையதளம். இணையதள கண்டறியும் சேவையான பிராடகட் ஹண்டில் அறிமுகமாகி 100க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று முகப்பு பக்கத்திற்கு முன்னேறி பலரது பாராட்டை பெற்றுள்ளது இந்த தளம்.

ஆம், இது போன்ற ஒரு சேவையை தான் எதிர்பார்த்தோம் என்று பலரும் ஆமோதித்துள்ளனர். இந்த வரவேற்பின் விளைவாக இந்த எளிமையான சேவையில் கூடுதல் அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற காபி சந்திப்புகளை குறித்து வைக்கும் வசதி மற்றும் நண்பர்கள் தங்கள் நிறுவனம் அல்லது லிங்க்டுஇன் கணக்கில் உள்ள புகைப்படத்தை இடம்பெறச்செய்யும் வசதி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக, ஒருவரை இரண்டாம் முறை காபி சந்திப்பிற்கு அழைக்கும் வாய்ப்பும் அறிமுகமாக உள்ளது.

ஆக, தொழில்நுட்ப சேவைகளின் தாக்கத்தால் போதிய சமூக சந்திப்புகள் நிகழ்வதில்லை எனும் நம் காலத்து பிரச்சனைக்கு அதே தொழில்நுட்பம் மூலம் புதுமையான தீர்வை வழங்கி இருக்கிறது இந்த தளம்.

யோசித்துப்பாருங்கள் இந்த சேவை எத்தனை பயனுள்ளதாக இருக்கும். இவ்வளவு ஏன், ஒரு நாள் உங்கள் இன்பாக்சில் கூட சக ஊழியர் ஒருவரின் காபி சந்திப்பிற்கான அழைப்பு எட்டிப்பார்க்கலாம். எனக்கும் கூட இந்த எண்ணம் உற்சாகம் அளிக்கவே செய்கிறது. நீங்களும் கூட விரும்பினால் என்னை காபி சந்திப்பிற்கு அழைக்கலாம்.: enarasimahan@gmail.com

வால்; இந்த கட்டுரையை மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை பாலுமகேந்திரா உரையாற்றிய நிகழ்ச்சியில் செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்தேன். அப்போது அவர் தான் திரைப்பட இயக்குனராக விரும்பிய தருணம் பற்றி விளக்கிக் கூறினார். அதே உரையில் நல்ல சினிமா என்றால் என்ன எனும் கேள்வி கேட்டு, அதை கரிசனம் மிக்க அம்மா சமையலுடன் ஒப்பிட்டு ரசிகன் மீது அக்கரை உள்ள சினிமாவே நல்ல சினிமா என்று கூறினார். நல்ல இணையதளத்திற்கான அம்சமாக இணையவாசிகள் மீதான அக்கரையை முக்கிய அம்சம் என குறிப்பிடும் போது எனக்குள் பாலுமகேந்திராவின் குரல் தான் கேட்கிறது.

தகவல் திங்கள் தொடரும்... 

முந்தைய பதிவுகள்:

தகவல் திங்கள்: ரெஸ்யூமின் சரியான நீளம் என்ன?

ஊழியர்கள் பார்வையில் ஸ்டார்ட் அப் கதைகள்!