அன்றும், இன்றும் வல்லமை மிக்க இந்திய பெண்கள்...

0

பண்டைய காலத்திலிருந்தே இந்திய வரலாற்றில் பெண்கள் முக்கிய பங்கு வகித்து வந்தனர். வேதம் அல்லது உபநிஷத காலத்தில் மைத்ரேயி, கார்கி போன்றவர்கள் ரிஷிகளின் இடங்களை பிரம்மன் குறித்த தங்களது வாதத் திறமையால் பிடித்தனர். வேதங்களில் அறிவார்ந்த ஆயிரக்கணக்கான பிராமணர்கள் கூடியிருந்த மன்றத்தில் பிரம்மனைப் பற்றிய விவாதத்தில் கார்கி தைரியமாக யஞ்சபால்காவிற்கு சவால் விடுத்தார்.

சுதந்திரத்திற்கு முன்பு இருந்த காலகட்டத்திலும் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டில் பெண்கள் பங்கெடுத்துள்ளனர். 1950-ல் உலகளவில் தங்கள் குடிமக்களுக்கு வாக்குரிமை வழங்கிய ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இளம் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்கள் வழி வகுத்தனர். இன்று பெண்கள் அரசியல், வணிகம், விளையாட்டு, ஆயுதப்படை, ராக்கெட் விஞ்ஞானம் என அனைத்திலும் முன்னணி வகிக்கின்றனர். பெண்கள் தடைகளை தகர்த்து ஒவ்வொரு நாளும் முன்னேறி வருகின்றனர்.

பட உதவி: Pinterest
பட உதவி: Pinterest

1999-ல் துவங்கப்பட்ட ’நாரி சக்தி புரஸ்கார்’ நடைமுறை நிலைமைக்கு சவால் விடும் வகையிலும் மகளிர் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து பங்களித்து வரும் பெண்களை அங்கீகரிக்கிறது. பெண்களுக்காக சேவைபுரியும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசாங்கம் இந்த விருதுகளை வழங்குகிறது. பெண்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் முன்னுதாரணமாக விளங்கி குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்தவர்களுக்கே புரஸ்கார் வழங்கப்படும்.

இந்த வருட நாரி சக்தி விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. பெரும் எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டு சமூக தொழில்முனைவு, கலை, தோட்டக்கலை, யோகா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஜர்னலிசம், நடனம், சமூக பணி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணி வகித்தவர்களை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தேர்ந்தெடுத்தது. 

குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் முத்திரை பதித்துள்ளனர். வெற்றிக்கு பாலினம் ஒரு தடையல்ல என்று நிரூபித்துள்ளனர். 

விருதுகளை பெற்றுக்கொண்டவர்கள் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களை உருவாக்குவது, ஆர்கானிக் முறையை ஊக்குவிப்பது, நிலையான சுற்றுச்சூழலை உருவாக்க பாடுபடுவது போன்ற வளர்ந்து வரும் துறைகளில் சாதித்தவர்கள். இவ்வாறு பெண்கள் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து முன்னணி வகிப்பது எதிர்கால வளர்ச்சியை நோக்கி பயணிக்க அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

விருது பெற்றவர்கள் விண்வெளி ஆராய்ச்சி, ரயில்வே, மோட்டார் சைக்கிளிங், மலையேறுதல் போன்ற துறைகளுக்கு வெளிச்சம் பாய்ச்சி பெண்கள் தொடர்புடைய ஒரே மாதிரியான நம்பிக்கைகளுக்கு சவால்விட்டுள்ளனர். இவர்கள் சாதனைகள் மட்டும் புரியவில்லை வரலாற்றில் பெண்கள் பங்கெடுக்காத துறைகளிலும் சிறப்பாக பிரகாசித்துள்ளனர். ISRO-வைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள், முதல் டீசல் இரயில் ஓட்டுநரான மும்தாஜ் காசி (Mumtaz Kazi), மோட்டார் சைக்கிளிஸ்டான பல்லவி ஃபாஸ்தார் (Pallavi Fauzdar), மலையேறுதலில் பங்கெடுத்த சுனிதா சொக்கன் (Sunita Choken) போன்றோர் மற்றவர்கள் தங்களது கனவை நோக்கி பயணிக்க வழிகாட்டியுள்ளனர். 

விருது பெற்றவர்கள் மாறி வரும் இந்தியாவை பிரதிபலிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலையிலுள்ள பெண்களுக்காக பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் பெண்களுக்கு அரசாங்கம் விருது வழங்கியது. அதாவது வன்முறையை எதிர்கொள்பவர்கள், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்துவது, பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை ஊக்குவிக்கும் விதத்திலான வாழ்வாதார வாய்ப்புகளை அளிப்பது, பெண் விவசாயிகள் மேம்பாட்டிற்கும் நாட்டின் மூலைமுடுக்குகளில் இருப்பவர்களின் உண்மையான வளர்ச்சிக்கும் பணியாற்றுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. 

சான்வ் ஃபவுண்டேஷன் (Chhanv Foundation), சிக்‌ஷித் ரோஜ்கர் கேந்திரா பிரபாந்தக் சமிதி (Shikshit Rojgar Kendra Prabandhak Samiti), சாதனா மஹிலா சங்கம் (Sadhana Mahila Sangha) மற்றும் தனது ‘ஹேண்ட் இன் ஹேண்ட்’ நிறுவனம் வாயிலாக Dr. கல்பனா ஷங்கர் ஆகியோர் சமூகத்தின் பெண்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றினர்.

சூழ்நிலை வரம்புகளை புதுமையான எண்ணங்களால் மீறலாம் என்று விருது பெற்றவர்கள் நிரூபித்துள்ளனர். நிதி பற்றாக்குறையை சீர்செய்ய பெண்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக நிதி உயர்த்தினர். இயற்கை பேரழிவிற்குப் பின்னர் உள்ளூர் மக்களுக்கு மறுவாழ்வளிக்க அசாதாரண வழிமுறைகளை கண்டறிந்தனர். பொருளாதார வாய்ப்புகள் இல்லாததால் பெண்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தை அணுகினார்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சவால்களுக்கு பெண்கள் சிகிச்சைக்கான மாற்றுவழிகளை பின்பற்றினர். சமூக நிராகரிப்புகளை எதிர்கொள்ள தங்கள் வாழ்க்கையை கையில் எடுத்துக்கொண்டு மற்றவர்கள் தங்களை பின்பற்ற ஒரு முன்னுதாரணமாக விளங்கினார்கள். 

விருது பெற்றவர்களில் ஒருவரான ஸ்மிதா டண்டி (Smita Tandi) சமூக ஊடகங்கள் வாயிலாக பணம் சேகரித்து மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு உதவினார். ஷரன் (SHARAN) நிறுவனரான Dr. நந்திதா ஷா சர்க்கரை நோயற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் உணவை மருந்தாக்குவதில் உதவினார். மேலும் டெக்ஸ்டைஸ் வடிவமைப்பாளரான  கல்யாணி ப்ரமோத் பாலகிருஷ்ணன் பாரம்பரிய கைத்தொழில்களை ஊக்குவித்து ஏழை நெசவாளர்களுக்கு உதவினார். 

யாரும் அதிகம் பயணிக்காத பாதையை துணிந்து மேற்கொண்டால் வெல்ல முடியாத சவால்களே இல்லையென்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர்.

இந்த வருடம் நாரி சக்தி புரஸ்கார் வென்ற அனைவரும் பொதுவான விஷயம் என்னவென்றால் அதிக தூரம் பயணிக்கவேண்டும் என்கிற அவர்களது விருப்பமும் விடாமுயற்சியும்தான் எனலாம். அரசாங்கமும் அரசு சாரா நிறுவனங்களும் பத்தாண்டுகளுக்கும் மேலாக தங்களது பகுதியிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த போராடி வந்தனர். மக்கள் வீட்டிலுள்ள தங்களது வசதியைத் துறந்து மற்றவர்களையும் தங்களுடன் இணைத்துக்கொண்டு ஒரு முக்கிய காரணத்திற்காக போராடுவதையே தங்கள் வாழ்க்கையாகக் கொண்டுள்ளனர். மாற்றம் மெதுவாகத்தான் நிகழும். 

இந்த பெண்களும், நிறுவனங்களும் உறுதியான முயற்சி இறுதியில் நேர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று காட்டியுள்ளனர். மனஉறுதியிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று விருது பெற்றவர்கள் நிரூபத்துள்ளனர். 

டியாஸா அத்யா (Tiasa Adhya) மற்றும் பானோ ஹராலு (Bano Haralu) தங்கள் பகுதியிலுள்ள ஃபிஷிங் கேட் மற்றும் இடம் பெயர்ந்த அமூர் ஃபால்கன்ஸ் ஆகியவற்றை வேட்டையாடுவதற்கு தடைவிதிக்க போராடினார்கள். யோகா ஆர்வலரான வி.நன்னம்மாள் பலருக்கு யோகா கற்றுக்கொடுத்துள்ளார். இவரது மாணவர்கள் தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் யோகா பயிற்சியளிக்கின்றனர்.

இந்த வருட நாரி சக்தி புரஸ்கார், நமது நாட்டில் பெண்களுக்கான பங்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பளித்துள்ளது. விருது பெற்றவர்கள் ஊக்கம், அர்ப்பணிப்பு, புதுமை ஆகியவற்றிக்கு உதாரணமாகவும் முறையான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சி மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் என்கிற நம்பிக்கையையும் அளித்துள்ளனர். மேலும் பலர் இணைந்துகொள்ள ஊக்குவித்து சிறந்த இந்தியாவை உருவாக்குவோம்.

ஆங்கில கட்டுரையாளர்: லீனா நாயர். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் செயலாளர்.