யூட்யூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான ஒரு ஸ்டாரின் பயணம்!

0

ஸ்ருதி அர்ஜுன் ஆனந்த் சலிப்பாக உணர்ந்த சமயத்தில் பாயிண்ட் அண்ட் ஷூட் கேமிரா பயன்படுத்தி யூட்யூப் வீடியோ ஒன்றை முதலில் உருவாக்கினார். அதிகம் பேர் இதைப் பார்வையிட்டதால் லாபகரமான வணிக வாய்ப்பு இருப்பதை உணர்ந்தார். அவரது கணவரும் அவருடன் இணைந்துகொண்டார். விரைவில் பல உறவினர்களும் அவர்களது வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக ஸ்ருதியுடன் இணைந்துகொண்டனர். 

இன்று ஸ்ருதி மேக்அப் & பியூட்டி பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் ஸ்ருதிக்கு சொந்தமான நிறுவனமும் 700 வீடியோக்களும் உள்ளன. அத்துடன் 1,616,616 சந்தாதாரர்களும் உள்ளன.

யுவர்ஸ்டோரி : உங்களது யூட்யூப் சானலை எப்படித் துவங்கினீர்கள்?

ஸ்ருதி அர்ஜுன் ஆனந்த்: நான் அமெரிக்காவில் இருந்தேன். என்னுடைய முதல் வீடியோ சிகை அலங்காரம் தொடர்பானது. வீடியோவை எடுப்பதற்கு முன்பு பலவகையான சிகை அலங்காரத்தை முயற்சி செய்வேன். மக்களுக்கு பிடித்திருந்தது. இதுவே எனக்கான பகுதி என நினைத்தேன். அது 2012-ம் ஆண்டு. எனக்கு ஓய்வு நேரம் கிடைத்ததால் படைப்பாற்றலுடன் கூடிய விஷயத்தில் ஈடுபட விரும்பினேன். 

சில யூட்யூப் சானல்களைப் பார்த்து வந்தேன். சிகை அலங்கார வகுப்பு குறித்த வீடியோவை எடுக்கலாம் என நினைத்தேன். என்னுடைய பாயிண்ட் அண்ட் ஷூட் கேமிராவில் சில வீடியோக்களை எடுத்து அதை எடிட் செய்யாமல் வெளியிட்டேன். இப்போது அதைப் பார்க்கையில் முழுமையாக நிபுணத்துவம் இல்லாத நிலையில் எடுக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. இருப்பினும் அது என்னுடைய முதல் வீடியோ. 

யுவர்ஸ்டோரி : அதன் பிறகு என்ன நடந்தது? எப்படி இந்த முயற்சியில் தீவிரமாக இறங்கினீர்கள்?

ஸ்ருதி அர்ஜுன் ஆனந்த்: என்னுடைய முதல் வீடியோவிற்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அதிகம் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது.

நான் ஒரு பொறியாளர். எனக்கு டீகோடிங் மீது ஆர்வம் அதிகம். மென்பொருள் கற்றுக்கொண்டு வீடியோக்களை மேம்படுத்தத் துவங்கினேன். மக்கள் இதை கவனித்து பாராட்டினர். 2013-ம் ஆண்டு துவக்கத்தில் யூட்யூப் பார்ட்னர் ப்ரோக்ராம் (YPP) வாயிலாக எனக்கு பணம் கிடைத்தது. 

தற்போது 2018-ம் ஆண்டு நீங்கள் பணம் ஈட்டவேண்டும் என்றால் 1,000 சந்தாதாரர்களுடன் ஒரு ஆண்டில் 4,000 மணி நேரம் பார்வையிடப்பட்டிருக்கவேண்டும். அப்போது நிலைமை வேறுமாதிரியாக இருந்தது.

நாங்கள் இந்தியா திரும்பியபோது நொய்டாவில் இருந்தோம். நான் வேலை தேடியபோது அனைத்து பணி வாய்ப்புகளும் குர்கானில் இருந்தது. பயண தூரம் அதிகம் என்பதால் நான் காத்திருந்தேன். கூடுதலாக சில வீடியோக்களை உருவாக்கினேன். அப்போதும் அதை ஒரு பொழுதுபோக்காகவே கருதினேன். அந்த சமயத்தில்தான் என்னுடைய கணவர் அர்ஜுன் இதை முழு நேர பணியாக மேற்கொள்ள ஊக்குவித்தார். இதில் நான் மகிழ்ச்சியாக ஈடுபட்டதால் இதைத் தொடரவேண்டும் என அவர் விரும்பினார். அவர் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் பணிபுரிந்து வந்தார். நானும் பணிபுரியவேண்டும் என ஊக்குவித்தார். யூட்யூபில் தீவிரமாக செயல்படத் துவங்கினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.

யுவர்ஸ்டோரி: எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது?

ஸ்ருதி அர்ஜுன் ஆனந்த்: சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

இரண்டாம் நிலை நகரங்களைச் சேர்ந்த சிலர் அழகு நிலையம் வைத்திருப்பதாகவும் என்னுடைய வீடியோ உந்துதலளித்ததாகவும் தெரிவித்தனர். மிகுந்த மனநிறைவு கிடைத்தது. யாரோ ஒருவருக்கு உதவுகிறோம் என்கிற உணர்வை ஏற்படுத்தியது. என்னுடைய பார்வையாளர்கள் 15-30 வயதினைச் சேர்ந்த பெண்கள்.

முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களைச் சேர்ந்தவர்கள். நான் உருவாக்கிய உள்ளடக்கம் மக்களுக்கு பிடித்திருந்தது. மக்கள் என்னுடைய வீடியோக்களைக் கண்டு ரசிக்கவேண்டும் என விரும்பினேன். அதிக நம்பிக்கையுடன் நேர்மறையாக செயல்படுவதில் கவனம் செலுத்தினேன். அதுவே என்னுடைய பார்வையாளர்களிடமும் பிரதிபலித்தது.

யுவர்ஸ்டோரி: இளம் பார்வையாளர்களுக்கான உள்ளடக்கத்தை எவ்வாறு திட்டமிடுகிறீர்கள்?

ஸ்ருதி அர்ஜுன் ஆனந்த்: இளம் பார்வையாளர்கள் என்பதால் நான் மிகுந்த கவனத்துடன் உள்ளடக்கத்தை உருவாக்குகிறேன். நான் முதலில் 4-5 முறை வீடியோவைப் பார்ப்பேன். அதன்பிறகு என் கணவரும் எடிட்டர்களும் பார்ப்பார்கள். ஏதோ ஒரு வகையில் சற்றே அநாகரிகமாக புரிந்துகொள்ளப்படலாம் என்று தோன்றினாலும் அதை நீக்கிவிடுகிறோம்.

உதாரணத்திற்கு மாதவிடாய் சமயத்தில் பயன்படுத்தக்கூடிய மென்சுரல் கப் குறித்த வீடியோவில் பணியாற்றியபோது நான் பயன்படுத்திய சில வார்த்தைகளை மாற்றுமாறு என் குடும்பத்தினர் அறிவுறுத்தினர். அதை சரிசெய்தேன். யூட்யூபில் பலர் இவ்வாறு செய்வதில்லை என நினைக்கிறேன். மற்றவர்களது வீடியோவிற்கு வரும் கருத்துகளிலும் என்னுடைய வீடியோவிற்கு வரும் கருத்துகளிலும் இருக்கும் வித்தியாசத்தை என்னால் பார்க்கமுடிந்தது.

யுவர்ஸ்டோரி: உங்களுடைய குடும்பத்தினர் எவ்வாறு உங்கள் வணிகத்தில் இணைந்துகொண்டனர்?

ஸ்ருதி அர்ஜுன் ஆனந்த்: யூட்யூப் எப்போதும் புதிய வழிமுறைகளைக் கொண்டது. எனவே வழக்கமான பணியைப் போன்றல்லாது நீங்கள் ஈட்டும் வருவாயை அதிகரிக்கா முடியாது. தொடர் மாற்றம் காரணமாக குறைவான வருவாயே ஈட்டமுடியும். எனவே ப்ராண்ட் இணைப்பு போன்றவை அவசியமாகிறது. ஆரம்பத்தில் எனக்கு அது சிறப்பான யோசனையாக தோன்றவில்லை. பிறகு நான் சரியான முடிவை எடுக்க அர்ஜுன் உதவினார். என்னுடைய உறவினரின் பெண்ணுக்கும் இதில் ஆர்வம் இருந்தது. அவரது வீடியோக்கள் சிலவும் மக்களிடையே பிரபலமானது. 

அவர் பள்ளி மாணவி என்பதால் நேரம் கிடைக்கும்போது அவருடன் வீடியோக்கள் உருவாக்கினோம். என்னுடைய நாத்தனார் நன்றாக சமைப்பார். அதுபற்றிய வீடியோக்கள் சிலவற்றை எடுத்தோம். மெல்ல என் குடும்பம் இந்த முயற்சியில் இணைந்துகொண்டது.

யுவர்ஸ்டோரி: உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

ஸ்ருதி அர்ஜுன் ஆனந்த்: தற்சமயம் எனக்கு சற்று குழப்பமாகவே இருக்கிறது. என்னுடைய இலக்கை எட்டிவிட்டதாகவே உணர்கிறேன். ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளேன். ஊழியர்கள் உள்ளனர். அந்த சமயத்தில் யூட்யூப் பொழுதுபோக்காக மட்டுமே இருந்தது. தற்போது சரியான SEO, சரியான கவர் ஃபோட்டோக்கள் போன்றவை முக்கியம். 

நான் துவங்கியபோது மக்கள் பார்வையிடும் நேரம் சிறப்பாக இருந்தால் வீடியோக்களுக்கு பார்வையாளர்கள் கிடைப்பார்கள். இதை எவ்வாறு தொடர்ந்து செய்வது என்பது குறித்தே எப்போதும் சிந்தித்து வருகிறேன்.

ஆங்கில கட்டுரையாளர் : தேவிகா சிட்னிஸ் | தமிழில் : ஸ்ரீவித்யா