’செல்லாக்காசு ஆகிய ரூ500,ரூ1000’ பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பிரபலங்களின் கருத்து என்ன?

0

நேற்று நள்ளிரவு முதல் 500ரூபாய் மற்றும் 1000ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது இந்திய நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசு மருத்துவமனைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் வரும் 11ம் தேதி நள்ளிரவு வரை மட்டும் இந்த நோட்டுக்கள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கையில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் வரும் டிசம்பர் 30ம் தேதிக்கு முன்பாக கொடுத்து, புதிய வகை ரூபாய் நோட்டுக்களை மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்!

பிரதமரின் இந்த அதிரடி முடிவு, கறுப்புப்பணம் புழக்கத்தை குறைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த இந்திய பிரபலங்களின் கருத்துக்களை பார்ப்போம்.

வங்கியாளர்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு, ”தைரியமான முடிவு மற்றும் புரட்சிகரமான நடவடிக்கை” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை நிர்வாகி அருந்ததி பட்டாச்சார்யா இது பற்றி கருத்து தெரிவிக்கையில்,

“ஏடிஎம்’ களில் பணத்தை உடனடியாக நிரப்ப கடுமையாக உழைப்போம். சீக்கிரமாக மக்கள் பயன்படுத்த செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம். அவசர தேவைகளுக்கான சலுகைகளை அரசு வழங்கியுள்ளது. நாங்கள் 24 மணி நேரம் பணி செய்து எங்களின் வாடிக்கையாளர்களுக்கு தகுந்த உதவிகளை செய்வோம்,” என்றுள்ளார்.   

இது பற்றி மேலும் பேசிய அருந்ததி, “இது போன்ற சூழலை வங்கிகள் கடந்த காலத்திலும் சந்தித்துள்ளது, அதனால் அதேபோல் இப்பொழுதும் சமாளிப்போம்” என்றார்.

ஐசிஐசிஐ வங்கி தலைவர் சந்தா கோச்சர் இதுபற்றி பேசுகையில்,

“இந்திய பொருளாதாரத்தில் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடை கொண்டுவர எடுக்கப்பட்ட மாபெரும் முடிவு இது. முறையான பண பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமையும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் நிலையான அதேசமயம் வேகமான வளர்ச்சியை வருங்காலத்தில் காணமுடியும்,” என்றார். 

எச்டிஎப்சி அடமானப்பிரிவுத் தலைவர் தீபக் பரேக் கருத்தின்படி,

“யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய சீர்திருத்த முடிவு இது. தங்களின் கணக்குகளை காட்டாமல், வரி கட்டாமல் பணத்தை பதுக்கி வைத்துள்ளோர்களுக்கு சரியான அடி இது. ரியல் எஸ்டேட் துறை பெரும்பாலும் பண பரிவர்த்தனைகளை நம்பியுள்ளதால், அதில் பெரும் அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கட்டுமான பணிகள் தொய்வடையும். இருப்பினும் நீண்டகால பலனுக்காக இந்த குறுகிய கால வலியை தாங்கிக்கொள்ள வேண்டியது அவசியம்,” என்றார்.  


மஹிந்திரா குழுமம் துணை தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.

“வெற்றியின் பின் ஒரு ஆச்சர்யம் இருக்கவேண்டும், இது ஒரு அதிரடியான முடிவு அதுவும் ரகசியமாக வைக்கப்பட்ட முடிவு,” என்றார். 

ஆந்திர பிரதேச முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியின் இந்த முடிவை வரவேற்று ட்வீட் செய்தார்,

“நரேந்திர மோடி அவர்களின் இந்த முடிவை வரவேற்கிறேன். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு. ஊழலை ஒழிப்பதற்கான தைரியமான அடி இது.” 

உத்தர பிரதேச முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டரில்,

“கிராமப்புறங்கள் மற்றும் மாவட்டங்களில் கூடுதல் வங்கி சேவை மையங்களை வைத்து அங்குள்ள மக்கள், விவசாயிகளுக்கு உதவவேண்டும்,” என்று பதிவிட்டுள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பங்குக்கு ட்விட்டரில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

“ஹேட்ஸ் ஆப் மோடி ஜி, புதிய இந்தியா பிறந்துள்ளது, ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டார். 

JSW குழுமம் சஜ்ஜன் ஜிண்டால் கருத்து தெரிவிக்கையில்,

“கறுப்பு பணத்தை முடக்க அற்புதமான தைரியமான முடிவு இது. இந்த முடிவை மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டிற்கு அறிவித்ததை பாராட்டுகிறேன்,” என்றார். 

பணமில்லா பரிவர்த்தனை வழங்கும் தளம் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா, 

“இது ஒரு சிறந்த முடிவு, டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க உதவும் முடிவு இது,” என்றார்.