ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியின் உயிரைக் காப்பாற்றிய கூட்டுநிதி முயற்சி!

0

மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் விதத்தில் கேரளாவிலுள்ள இரண்டு கிராமங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளியின் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக ஐந்து மணி நேரத்தில் 11 லட்ச ரூபாயை கூட்டுநிதி மூலம் திரட்டியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 45 வயதான சலவைத் தொழிலாளி குளத்துப்பரம்பில் ஜெயன். இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதற்கு 10 லட்ச ரூபாய் செலவாகும். அக்டோபர் மாதம் 15-ம் தேதி கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கவனம் மற்றும் பள்ளம் ஆகிய பகுதியில் வசிப்பவர்கள் கைகளில் பக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு கிராமம் முழுவதும் சென்று நிதி திரட்டினர்.

பட உதவி: The Indian Express
பட உதவி: The Indian Express

கடந்த 20 ஆண்டுகளாக ஜெயன் அவரது பகுதியில் வசிப்பவர்களின் துணிகளை இஸ்திரி செய்து வந்தார். தன்னார்வலர்கள் ஒன்றுதிரண்டு ’ஜெயன் உயிர் காக்கும் சமிதி’ என்கிற பெயரில் நிதி திரட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர் என்று ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. கத்தோலிக்க பாதிரியாரால் ஊக்குவிப்பு அமர்வுகள், வீடு வீடாக பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட ஒரு மாத கால முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தனக்கு கிடைத்த ஆதரவு குறித்து அறிந்த ஜெயன் உணர்ச்சிவசப்பட்டு கூறுகையில்,

”கடந்த 20 வருடங்களாக என்னுடைய இஸ்திரி செய்யும் தள்ளுவண்டியுடன் சிங்கவனம் மற்றும் பள்ளம் பகுதியில் வீடு வீடாகச் செல்வதால் அங்குள்ள அனைவருக்கும் என்னைத் தெரியும். பணம் இல்லாத காரணத்தால் நான் இறந்துவிடுவேன் என்றே பயந்தேன். இந்தப் பகுதியிலுள்ள மக்கள் என்னை எந்த அளவிற்கு விரும்புகிறார்கள் என்பதை இப்போதுதான் உணர்ந்தேன்.”

ஜெயனின் சிகிச்சை இந்த மாதம் திட்டமிடப்பட்டுள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. தானமளிப்பவர்கள் பட்டியலில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்கள் முதல் தினக்கூலித் தொழிலாளிகள் வரை நீண்டுள்ளது. இது குறித்து நகராட்சி கவுன்சிலர் மற்றும் சமிதி தலைவர் டினோ கே தாமஸ் கூறுகையில்,

கோட்டயம் நகராட்சிக்குட்பட்ட ஐந்து வார்டுகளைச் சேர்ந்த 2,000 முதல் 2,500 வீடுகளை நிதி திரட்ட அணுகினோம். 10 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. இந்த பிரச்சாரம் மூலம் 11.25 லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டது. தினக்கூலிகள் தாங்கள் ஒரு நாள் கூலியாகப் பெறும் சுமார் 500 ரூபாய் தொகையை அளிக்க சமிதி கோரிக்கை விடுத்தது. மக்கள் 50 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை அளித்தனர். யாருக்கு வேண்டுமானாலும் சிகிச்சைக்கு அதிக தொகை தேவைப்படும் அவசர உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதை பாதிரியார் செபஸ்டியன் பன்னசேரி சுட்டிக்காட்டினார். இது பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

கட்டுரை : Think Change India