பெண் எலக்ட்ரிசியன், வெல்டரை பாத்ததுண்டா? நாகப்பட்டினம் பக்கம் வாருங்கள்... 

பெண்கள் வெல்டிங், எலக்ட்ரிக் பணிகள் செய்ய பயிற்சி அளித்து வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித்தரும் மையம்! 

1

எலக்ட்ரிசியன், பிளம்பிங் வேலை அல்லது வீட்டை பழுதுபார்க்கும் எந்த வேலை என்றாலும் நமக்கு முதலில் தோன்றுவது ஆண்கள் தான். இந்த வேலைகளை என்றைக்காவது பெண்கள் செய்து பார்த்ததுண்டா? இல்லை அதற்கான வாய்ப்புகள் தான் அமைந்ததுண்டா? 

வீட்டில் ஒரு பல்பை மாற்ற வேண்டும் என்றால் கூட வீட்டின் ஆண்களையே நாம் முன்னிறுத்துகிறோம். இந்த போக்கினை மாற்றி பெண்களுக்கும் இந்த வேலைகளை கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கிறது இந்த பன்னாட்டு நிறுவனத்தின் சமூக பிரிவு மையம்.

ஜெர்மனியைச் சேர்ந்த Freudenberg Group என்ற ஆட்டோமொபைல் நிறுவனம், வாகனம், இயந்திரம் மற்றும் ஆலை பொறியியல், ஜவுளி, கட்டுமானம், ஆற்றல், இரசாயன, எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் புதுமையான தொழில்நுட்பத் தயாரிப்புகள் மற்றும் பல சேவைகள் வழங்குகின்றனர். தங்களது சிஎஸ்ஆர் பணிகளின் ஒரு பகுதியாக ஊரக பெண்களுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க சிறப்பு மையங்களை தமிழகம், கர்நாடகா என்று பல மாநிலங்களில் நிறுவியுள்ளது இந்நிறுவனம்.

இந்நிறுவனத்தின் மையங்கள் குறிப்பாக பெண்களுக்கு மெக்கானிக்கல், ஆட்டோமேஷன் தொடர்பான திறனை வளர்க்கும் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றனர். 

“கடந்த 2 ஆண்டுகளில் 892 பெண்கள் ஆட்டோமேஷன் வல்லுனர்களாகவும், 457 பெண்கள் கணினி கணக்கு ஆப்பரேட்டர்களாகவும் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்,” என Freudenberg Group-ன் பயிற்சி மைய ப்ரின்சிபால் ஹரிஹரன் கூறினார்.

90 வருடங்களாக இந்தியாவில் செயல்படும் இந்நிறுவனம், 2004ல் தமிழ்நாடு சுனாமியால் பாதிக்கப்பட்ட பிறகு, உதவி அதிகம் தேவைப்படும் மாவட்டத்தைக் கண்டறிந்து தங்களது பயிற்சி மையத்தை நிறுவி அங்குள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பு அமைத்து தந்திட திட்டமிட்டனர்.

அப்பொழுது அதிகம் சேதமடைந்த நாகப்பட்டினத்தை தேர்வு செய்து அங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க முன்வந்தனர்.

“மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வெல்டர், மெக்கானிக், மோட்டார் வாகன இயக்கவியல் எலக்ட்ரிசியன் போன்ற வேலைகளை கற்றுக்கொடுக்க தொழிற் பயிற்சி மையம் அமைத்தனர். இதில் முக்கிய அம்சம் இந்த மையத்தில் பெண்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது,” என்கிறார் ஹரிஹரன்.

வாழ்வாதாரம் அமைத்துத் தரும் நோக்கில் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் மக்களுக்கு உதவ 2008ல் இம்மையத்தை துவங்கிய இந்நிறுவனம் நிலையான விகிதங்களை விட மிகக் குறைந்தக் கட்டணத்தையே பெறுகின்றனர்.

இதுபோன்ற பயிற்சி மையத்தில் பெண்களுக்கு பெரும்பாலும் இடம் கிடையாது. ஆனால் இந்நிறுவனம் பெண்களும் சொந்த காலில் நிற்க வேண்டும் என எண்ணி பெண்களுக்கும் அனுமதி அளித்துள்ளனர். இதன் மூலம் பல குடும்பத்தலைவிகள் பயன் அடைந்ததாக தெரிவிக்கின்றனர்.

நாகப்பட்டினத்தை சேர்ந்த 32வயதான தமிழ் நாயகி ஓர் குடும்பத்தலைவி, ஆட்டோ ஓட்டுனரான தனது கணவரின் சம்பாதியத்தில் குடும்பத்தை நடத்தி வந்தவர், தனது இரண்டு பிள்ளைகளையும், குடும்பச் சூழ்நிலையையும் உயர்த்த சுய தொழில் பற்றி கற்றுக்கொள்ள முன் வந்துள்ளார்.

“பண்ணிரிண்டாம் வகுப்பு முடித்த எனக்கு செவிலியர் ஆக வேண்டும் என விருப்பம் ஆனால் என் குடும்ப நிதிநிலையால் என்னால் படிக்க முடியவில்லை. அதன் பின் 2016ல் இம்மையத்தில் ஒரு வருட இலவச எலக்ட்ரிசியன் பயிற்சிக்குச் சேர்ந்தேன்,” என்கிறார் நாயகி.

30 வயதிற்கு மேல் சீருடை அணிந்து பயிற்சி மையத்திற்கு செல்வதைப் பார்த்து பலர் கேலி செய்தும் அதைப் பொருட்படுத்தாமல் ஹவுஸ் வயரிங், பழுது மற்றும் வீட்டு உபகரணங்கள் பராமரிப்பு, மோட்டார்கள் வேகச் சோதனை நுட்பம், பல்வேறு சோதனை முறைகளை கற்றுக்கொண்டுள்ளார் இவர். மேலும் ஒரு வருடத்தில் ஆங்கிலம் பேசவும் கற்றுக்கொண்டதாக தெரிவிக்கிறார். கூடியவிரைவில் பணியில் அமரவிருக்கிறார் இந்த குடும்பத்தலைவி.

இதுவரை 30க்கும் மேலான பெண்கள் இப்பயிற்சி மையத்தில் இணைந்துள்ளனர். விழிப்புணர்வு இல்லாத கிராமங்களில் இருந்து இத்தனை பெண்கள் வெளியில் வருவதையே வெற்றியாக நினைக்கிறது இம்மையம். பெரும்பாலான பெண்கள் எலக்ட்ரிசியன் ஆக பயிற்சிபெறவே விரும்புகின்றனர். ஒரு சில பெண்கள் மட்டுமே வெல்டிங் பயிற்சியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

பெண்களுக்கு இப்பயிற்சிகளை அளிக்க இம்மையம் முன்வந்த நிலையிலும் அக்கிராம மக்கள் பெண்களை மையத்திற்கு அனுப்பத் தயங்கினர். பண்ணிரிண்டாம் வகுப்பிற்கு பிறகு துணிக் கடை போன்ற இடங்களுக்கு வேலைக்கு அனுப்ப பெற்றோர்கள் தயாராக இருந்தனர் ஆனால் பயிற்சி பெற அல்ல, என்கிறார் ஹரிஹரன்.

“பதினோராம் வகுப்பிற்கு பிறகு என் உடல்நிலை காரணமாக என்னால் படிப்பை தொடர முடியவில்லை. அதன் பின் பெண்கள் வளர்சிக்காக இம்மையம் அளிக்கும் பயிற்சியில் சேர முன்வந்தேன் ஆனால் இது ஆண்களுக்கான இடம் என என் பெற்றோர்கள் மறுத்துவிட்டனர்...” என்கிறார் நாகப்பட்டினம், வடகரை கிராமத்தை சேர்ந்த துர்காதேவி.

அதன் பின் பெண்கள் வளர்ச்சிக்காக இப்பயிற்சிகளை அளிக்கிறோம் என இம்மையம் சுற்றியுள்ள கிராமங்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை அளித்த பின்னரே தனது பெற்றோர் அனுமதித்ததாக தெரிவிக்கிறார் துர்காதேவி. இப்பொழுது படிப்பை முடித்த இவர் ஓசூர் டிவிஸ் மோட்டாரில் பணிபுரிகிறார்.

பயிற்சி அளிப்பதோடு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துகிறது இந்நிறுவனம். இன்னும் பல பெண்களின் வாழ்க்கைக்கு வழிகாட்ட தயாராக இருக்கிறது இந்த சமூக அக்கறைக் கொண்ட நிறுவனம்.