நாட்டில் முதல்முறையாக திருநங்கையருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்த கேரள அரசு முடிவு!

0

கேரள மாநிலத்தில் திருநங்கையர் சமுதாயத்தினரின் வாழ்வை மேம்படுத்த அரசு பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதையடுத்து கேரள மாநில விளையாட்டுத் துறை, திருநங்கையர்களுக்கான மாநில அளவிலான போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. 

நகரத்தின் முக்கிய மைதானத்தில் நடக்கவிருக்கும் இப்போட்டிகளில் 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், 4  4x100 மீட்டர் ஸ்ப்ரிண்ட் போட்டி மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சி ஏற்பாட்டின் மூலம் கேரள மாநிலம் நாட்டின் பிறமாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

இப்போட்டிகளுக்கான முன்முயற்சியைத் துவங்கியது கொச்சியிலுள்ள சஹஜ் சர்வதேசப் பள்ளி. சஹஜ், பிரபல நடிகையும், கவிஞரும் திருநங்கை உரிமை ஆர்வலருமான கல்கி அவர்களால் டிசம்பர் 2016-ல் துவங்கப்பட்ட கல்வி நிறுவனம் ஆகும்.

ஷ்யாமா எஸ். என்ற திருநங்கை இப்போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். பள்ளிப்பருவத்தில் தன் பெண் உடல் பாவனைகளுக்காக சகமாணவர்களால் கேலிக்குள்ளாக்கபட்ட இவருக்கு இவ்வாய்ப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதேயான இப்போட்டியின் அமைப்பாளர் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்திருக்கும் பேட்டியில் கூறும்போது, 

’ஏன் பெண்பிள்ளை மாதிரி ஓடுகிறாய்?’ இந்தக் கேள்விதான் எங்களை பள்ளியிலும் கல்லூரியிலும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள விடாமல் தடுத்து வைத்திருந்தது. மிமிக்ரி, மேடைநாடகம், மோனோ ஆக்டிங் ஆகியவற்றில் எங்களுக்கு அடையாளம் இருந்தாலும் விளையாட்டுப் போட்டியில் எங்களை நிரூபிக்க இதுவே எங்களுக்கு கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பாகும்.”

போட்டியின் ஒருங்கிணைப்பாளர் அனில் அர்ஜுனன் Quint இணைய இதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில், 

”திருநங்கையருக்கான போட்டிகளை அரசு முன்னெடுத்து நடத்துவது இதுவே முதல் முறையாகும். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 20 போட்டியாளர்கள் எதிர்பார்க்கப் படுகிறார்கள். ஒவ்வொரு மாநில போட்டியாளர்களுக்கு மத்தியிலும் பிரதிநிதிகள் தலைமையில் போட்டிகள் நிகழ்த்தப்படும். கூடுதலாக போட்டியாளர்களுக்கு தத்தமது மாநிலத்திலேயே பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன,” என்றார்.

ஏப்ரல் 28, அன்று திருவனந்தபுரம், பாளையம் பகுதியில் உள்ள சென்ட்ரல் விளையாட்டரங்கத்தில் போட்டி நடைபெறும். கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகாரத்துறை அமைச்சர் எ.சி.மொய்தீன், சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பலி ஆகியவர்கள் இத்திட்டத்திற்கு துணை செய்துள்ளனர். இதன் மூலம் கேரள அரசு திருநங்கையர் சமூகத்தினரை மேம்படுத்தும் முயற்சி எடுத்து வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

கட்டுரை: Think Change India