ரத்தன் டாடாவை சந்தித்த அனுபவம் - டீபாக்ஸ் நிறுவனர்! 

0

ரத்தன் டாடா பற்றி எனக்கு பிடித்த சம்பவம் ஒன்று நினைவில் இருக்கிறது. 2008ம் ஆண்டு ஃபோர்ட் நிறுவனத்திலிருந்து ஜாகுவாரை வாங்கியது டாடா நிறுவனம். அதன்பிறகு ஜாகுவார் மிகப்பிரபலமடைந்தது. நல்ல லாபம் ஈட்டியது. டாடா நிறுவனம் வாங்கியதால் மட்டுமே அது லாபத்தை ஈட்டியது என்று நான் சொல்ல மாட்டேன். ரத்தன் டாடாவின் அணுகுமுறையே அதற்குக் காரணம். ஜாகுவார் நிறுவனத்திடம் என்ன பிரச்சினை என்று கேட்டார். அதை சரிசெய்ய முழு சுதந்திரமும் அளித்தார். இந்த அணுகுமுறை தான் டாடா குழுமத்திற்குள் 90+ நிறுவனங்களை வைத்திருக்க உதவியிருக்கிறது.

டிசம்பர் 2015ல் ரோஹனுக்கும் எனக்கும் ரத்தன் டாடாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரோஹன் எங்கள் நிறுவனத்தின் இன்பவுண்ட் மார்கெட்டிங் பிரதிநிதி. ரத்தன் டாடாவை சந்திக்கப்போகிறோம் என்ற எண்ணமே ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் அவர். அவரை சந்தித்து ப்ரசண்டேஷன் காட்டுவது எல்லோருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு.

குஷால் துகர்,ரத்தன் டாடா மற்றும் ரோகன் ஜஹாகிர்தர்.
குஷால் துகர்,ரத்தன் டாடா மற்றும் ரோகன் ஜஹாகிர்தர்.

தெற்கு மும்பையில் இருக்கும் எல்பின்ஸ்டோன் பில்டிங், டாடா அலுவலகத்தின் மூன்றாவது ஃப்ளோரில் அவரை சந்தித்தோம். அது ஒரு அலுவலகம் என்றே கணிக்க முடியாத ஒரு இடம். டீபாக்ஸ் என்ற இளம் நிறுவனத்தை ரத்தன் டாடாவிற்கு பிடித்திருக்க வேண்டும். அதனாலோ என்னவோ எங்களை சந்திக்க அழைத்திருந்தார். அவருடன் பேசிய நில நிமிடங்களில் நானும் ரோஹனும் சகஜமானோம். அவர் மிரட்டும் தொனியில் பேசாமல், நட்புடன் பேசினார். உண்மையில் நாங்கள் பேசினோம் என்பதை விட வாதிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.

புதிதாக ஒரு டீ வேண்டும் என மக்கள் ஏன் விரும்புகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? என்ற ஒரு அடிப்படையான கேள்வியை அவர் எழுப்பினார். ஒரு ஐடியாவை விரும்புவதற்கு முன்பு பலவிதமான கேள்வி கேட்டே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவர் எங்களுக்குக் காட்ட விரும்பினார்.

“என்னிடம் ஒரு தியரி இருக்கிறது” என்றார் ரத்தன் டாடா. அவரது மேனேஜர் இந்த தியரியை பல முறை கேட்டிருக்க வேண்டும் எனவே அவர் சொன்னார். இந்த காரில் என்ன பிரச்சினை என்று ஒருவரிடம் கேட்டீர்களென்றால் அவருக்கு அது தெரியாது. ஆனால் அதே காரை எங்களிடம் எடுத்துவாருங்கள், நாங்கள் சரி செய்கிறோம் என்றால் அவர்கள் அதற்கு தயாராகவே இருப்பார்கள். இதுதான் கார் உரிமையாளரின் பிரச்சினையை கச்சிதமாக புரிந்துகொள்வதென்பது.

எங்கள் விற்பனைத்திட்டத்தில் என்ன இருக்கிறது என அவர் புரிந்துகொள்ள விரும்பியே அந்த கேள்வியைக் கேட்டார். இது எப்படி வேலை செய்யும், வாடிக்கையாளர்களிடம் இதற்கு என்னவிதமான தேவை இருக்கிறது என்றெல்லாம் அவர் யோசித்தார். ரத்தன் டாடா மாதிரியான ஒருவரிடம் எங்கள் நிறுவனம் பற்றி விளக்கி, அவரது விமர்சனங்களைக் கேட்க கிடைத்த ஒருவாய்ப்பாகவே நாங்கள் இதை எடுத்துக்கொண்டோம்.

நாங்கள் டீபாக்ஸ் நிறுவனம் மூலம் செய்ய விரும்புவதெல்லாம் ஒன்று தான். இது ஒரு இந்திய நிறுவனம் ஆனால் உலகம் முழுவதும் சென்றடையக்கூடிய ஒரு பிராண்டாக இருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் டாடா முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. அது உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு பிராண்ட். குறிப்பாக எங்கள் துறையிலேயே இருக்கிறார்கள். டெட்லி டீ என்ற நிறுவனம் டாடா குழுமத்தின் ஒரு அங்கம். அது உலகின் இரண்டாவது பெரிய டீ நிறுவனம். அது டாடா டீயை விட மூன்று மடங்கு பெரிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டீ சந்தைக்கு இது போன்ற துணிச்சல் தான் தேவை. ரத்தன் டாடா பற்றிய பல கதைகள் என்னை கவர்ந்தவை. நான் பேசிய முதல் 40 நிமிடங்களில் அவற்றை குறிப்பிட்டேன். அது எனக்கு என்றைக்கும் நினைவில் இருக்கும்.

அந்த சந்திப்பு முடிந்தது. போட்டோ எடுத்துக்கொண்டோம். அதன்பிறகு மாலை ரத்தன் டாடாவின் மேனேஜர் போன் செய்தார். எங்கள் நிறுவனத்தில் நிச்சயமாக ரத்தன் டாடா முதலீடு செய்வார் என்று தெரிவித்தார். டீ விற்பனை மீது எங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை அவர் புரிந்துகொண்டிருக்கிறார். நீங்கள் வழக்கமான டீ நிறுவனம் போல இல்லை என்று தெரிவித்தார். “நீங்கள் ஒரு டீ நிறுவனத்திலிருந்து வருவதாக என்னிடம் சொல்லியிருக்கவில்லை என்றால் உங்கள் பிராண்டிங் மற்றும் பேக்கேஜை பார்த்து என்னால் கணித்திருக்கவே முடியாது” என்று ரத்தன் டாடாவுடன் பேசிய தருணத்தில் அவர் குறிப்பிட்டார்.

பின்னாளில் ரத்தன் டாடாவிடமிருந்து எங்களுக்கு நிதி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

(குறிப்பு : யுவர்ஸ்டோரியிலும் ரத்தன் டாடா முதலீடு செய்திருக்கிறார்)

இந்த செய்தி முதலில் டீபாக்ஸ் தளத்தில் ப்ளாகில் வெளியானது.

இதை எழுதியவர் குஷால். இவர் டீபாக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி. அவரது குடும்பம் 1940ம் ஆண்டில் இருந்து டீ விற்பனைத்துறையில் ஈடுபட்டு வருகிறது. பாரம்பரியமான டீ விற்பனையை மாற்றியமைக்கும் முயற்சியில் குஷால் ஈடுபட்டிருக்கிறார். அதற்கான விதை தான் டீபாக்ஸ்.

(இந்த பத்தியில் குறிப்பிடப்பட்டிருப்பவை எல்லாம் குஷாலின் சொந்த கருத்து. யுவர்ஸ்டோரிக்கும் இதற்கும் தொடர்பில்லை)

தமிழில் : ஸ்வரா வைத்தீ

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

'ரத்தன் டாடா'- ஸ்டார்ட் அப்களின் காதலர்! 

அடுத்த மாபெரும் புரட்சி? கல்வியை இலவசமாக்க, கான் அகாடமியுடன் கைகோர்க்கும் ரத்தன் டாடா