டவுன் சிண்ட்ரோம் உள்ள சென்னை மாணவனின் போலீஸ் கனவை நிறைவேற்றிய பெற்றோர்கள்!

0

19 வயதாகும் ஸ்டீவன் மேத்யூ, ‘நான் ஒரு போலிஸ் ஆவேன்’ என்ற மந்திரத்தை தினமும் சொல்லிக்கொண்டே வளர்ந்தவர். சிறு வயதில் திரைப்படங்களை பார்த்து காவல்துறை மீது ஈர்ப்பு கொண்டதால் அந்த ஆசை அவர் மனதில் வளர்ந்தது. ஆனால் டவுன் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்ட அவரால் இந்த கனவை அடைவது கடினம் என்பதால் அவரின் பெற்றோர்கள் மகனின் கனவை ஒரு நாளேனும் நிறைவேற்ற முடிவெடுத்தனர்.

பட உதவி: தி ஹிந்து மற்றும் டெக்கன் க்ரானிக்கல்
பட உதவி: தி ஹிந்து மற்றும் டெக்கன் க்ரானிக்கல்

சென்னையைச் சேர்ந்த மேத்யூவின் குடும்பம் தற்போது கத்தாரில் வசிக்கிறது. சென்னைக்கு விடுமுறைக்கு வந்தபோது ஒரு சமயம், மேத்யூவின் தந்தை ராஜீவ் தாமஸ் சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து, தன் மகன் ஒரு தினம் மட்டும் காக்கி உடை அணிந்து போலீசை போல் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தி ஹிந்து செய்தியில் தந்தை ராஜீவ் கூறுகையில்,

“அவன் திரையில் நடிகர்கள் விஜய், சுரேஷ் கோபி மற்றும் பலரை பார்த்து போலீஸ் என்றால் வியந்து பார்க்கத்தொடங்கினான். அவனுக்கு தான் ஒரு காவல்துறை அதிகாரி ஆக விருப்பம். அதனால் நான் விடுமுறையில் சென்னை வந்தபோது சென்னை ஆணையருக்கு மெயில் அனுப்பினேன். அதை அடுத்து அவர்கள் மேத்யூவிற்காக போலீஸ் சீருடையை தைத்து அதில் இரண்டு ஸ்டார்களையும் சேர்த்திருந்தனர்,” என்றார். 

சென்னை துணை ஆணையர் வின்சண்ட் ஜெயராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் சூர்யலிங்கம், ஸ்டீவன் மேத்யூவை முதல் நாளே சந்தித்து அவரை அந்த சிறப்பு தினத்துக்கு தயார் செய்தனர். 

மேத்யூ ஸ்டேஷனுக்கு போலீஸ் உடையில் சென்றபோது அங்குள்ளவர்கள் மலர்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். அவருக்கு தனி டெஸ்க், வாக்கி-டாக்கி கொடுக்கப்பட்டது. ஒரு முழு நாள் போலீஸ் ஸ்டேஷனில் கழித்தார் ஸ்டீவன் மேத்யூ.

காவல்துறையினரின் அடிப்படை பணிகள் என்ன என்பதை அவருக்கு எடுத்துச் சொன்னார்கள். ஒரு அதிகாரியோடு மேத்யூவும் ரோந்து பணிக்கு சென்று, குற்றங்களை தடுப்பது எப்படி என்று தெரிந்து கொண்டார். அவருடன் இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் ஜீப்பில் சென்றது மேத்யூவிற்கு மகிழ்ச்சியை தந்தது. 

ஸ்டீவன் மேத்யூ, சென்னையில் உள்ள ஒரு சிறப்புப் பள்ளியில் படிக்கிறார். அது பற்றி பேசிய அவரின் தந்தை,

”மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறைபாடுள்ள குழந்தைகள் கொண்டுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தில் வாய்ப்புகள் கிடைக்க உதவிட வேண்டும். அவர்கள் விரும்பியதை செய்ய முயற்சிக்கவேண்டும்,” என்றார்.

கட்டுரை : Think Change India