திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட ரூபாவின் தொழில்முனை பயணம்

0

பெண்கள் மீதான திராவக வீச்சு சம்பவங்கள் இந்தியாவின் சாபக்கேடு. கடந்த பத்து ஆண்டுகளில் இத்தகைய சம்பவங்கள் பெருகி உள்ளன. கடந்த வருடம் மட்டுமே முன்னூற்றி நாற்பத்தியொன்பது பெண்கள் திராவக வீச்சால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்கிறது இந்திய ஆசிட் சர்வைவர் பௌண்டஷன். இது 2013 ஆம் ஆண்டை விட மூன்று மடங்கு அதிகமாகவும்; 2010 ஆம் ஆண்டை விட நான்கு மடங்கு அதிகம் என்று கூறும் இந்த தன்னார்வு நிறுவனம், இதில் பாதிக்கு மேல் வெளியில் தெரிவதில்லை என்றும் கூறுகின்றனர்.

திருமணம் புரிந்து கொள்ள மறுப்பது, பாலியல் விருப்பத்திற்கு உடன்படாமல் இருப்பது மற்றும் வரதட்சணை போன்றவையே காரணங்களாக உள்ளன. இதை தவிர இருபது விழுக்காடு சொத்து மற்றும் பணியிட வாக்குவாதங்கள் ஆகிவையால் நேர்கின்றன. பலமான காயங்கள் மட்டுமின்றி, சிலர் இறக்கவும் நேரிடுகிறது. இதிலிருந்து மீண்டவர்கள் பெரும்பாலும் வெளியில் வருவதில்லை, அவமானத்தால் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

திராவக வீச்சிற்கு ஆளான போதிலும் தன்னுடைய அடையாளத்தை விட்டுக் கொடுக்காமல் போராடி நிலை நிறுத்திக் கொண்ட ஒரு பெண்ணின் கதை இதோ...

முசாபர் நகரில் அருகில் ஒரு கிராமத்தில் வசிப்பவர் ரூபா. 2008 ஆம் ஆண்டு ஒரு நாள் தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கையில், அவருடைய சித்தி ரூபாவின் முகத்தில் திராவகம் வீசினார். அப்பொழுது ரூபா பதினைந்து வயது சிறுமி. இச்சம்பவம் அவரின் தோற்றத்தை சிதைத்ததோடு, அவரின் எதிர்கால கனவுகள், அவரின் குழந்தைத்தனம் என அத்தனையும் சேர்த்தே சிதைத்து.

குடும்பத்தின் ஆதரவு இல்லாத நிலையில், அவருடைய மாமா தான் சரியான நேரத்தில் அவரை மீட்டெடுத்தார். சிகிச்சைக்கான மொத்த செலவை அவருடைய மாமா ஏற்றிருந்தாலும், சிதையுண்ட முகம் அவரை மிகுந்த மன அழுத்தத்தில் தள்ளியது, நான்கு சுவருக்குள் தன்னை முடக்கிக் கொண்டார்.

அச்சமயத்தில் தான் "ஸ்டாப் ஆசிட் அட்டாக் கேம்ப்பயின்" பற்றி அறிய நேரிட்டது. மேலும் இதை பற்றி அறியும் ஆர்வத்தில் கலந்து கொண்டார். இவரை போல் பல பேரை அங்கு சந்தித்தார், தீவிர ஆலோசனை மற்றும் பயிற்சி பெற்றார். மற்றவர்களை போல் இவர்களாலும் வாழ முடியும் என்ற நம்பிகையை இந்த பயிற்சி மற்றும் ஆலோசனை ஏற்படுத்தியது. புது வாழ்க்கையை ஆரம்பிக்க தயாரானார்.

சாதனை பெறத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தனக்கென இடமும் நிதி சுதந்திரமும் பெற்றல் அவசியம் என்று பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர் விர்ஜினா வொல்ப் தனது "எ ரூம் ஒப் ஒன்ஸ் ஒன் (1929)" என்ற கட்டுரையில் கூறியுள்ளார். இந்த சிந்தனையே ரூபாவை தையல் கலையை மேற்கொள்ள தூண்டியது. இயற்கையாகவே தன்னிடம் டிசைன் திறமை இருப்பதாய் உணர்ந்தார். ஸ்டாப் ஆசிட் அட்டாக் மூலமாக கிடைத்த நண்பர்களும் ரூபாவின் இந்த முயற்சிக்கு ஆதரவாக இருந்தனர்.

மிக விரைவில் அவருடைய டிசைன்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ரூபா கிரியேஷன்ஸ் என்ற தனது சொந்த பிராண்டையும் தொடங்கினார்.

தற்பொழுது அவரது கடை, தாஜ் மஹால் அருகே உள்ள ஷேரோஸ் ஹாங்அவுட் (Sheroes Hangout) என்ற இடத்தில இயங்குகிறது. ரூபா மற்றும் அவரை போன்ற நான்கு பெண்கள் கொண்டு இந்த கடை இயங்குகிறது. இவர்கள் அணியும் ஆடை கூட ரூபா வடிவமைத்தது தான். ரூபாவின் மேல் அதிக பாசமும் மரியாதையும் வைத்துள்ளனர் இவர்கள். அவருடைய அடுத்த இலக்கு பற்றி கேட்டால் புன்னகையுடன் பதில் தருகிறார் ரூபா.

"ஆன்லைன் வர்த்தகம் மூலம் என்னுடைய டிசைன்களை விற்க எண்ணம் இருக்கிறது. இதற்காக என்னுடைய நண்பர்கள் நிதி திரட்டியுள்ளனர். ஷேரோஸ் ஹாங்அவுட்டில் உள்ள கடை மூலமாக மாதம் இருபாதியிரம் சம்பாதிக்கிறேன், அதில் கொஞ்சம் சேமித்தும் வைத்துள்ளேன்".

அவரின் கனவு இதோடு நிற்கவில்லை, எதிர்காலத்தை பற்றி நிறையவே திட்டமிட்டுள்ளார்.

"பெண்களுக்கான தொழிற் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளி தொடங்கி, நிறைய பெண்களை பொருளாதாரத்தில் தன்னிலை பெற உதவ வேண்டும். இது அவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு மதிப்பை மட்டுமின்றி தன்னம்பிக்கையையும் தரும்" என்கிறார் ரூபா.

இருபத்தி இரண்டு வயதே ஆகும் ரூபா, மற்றவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார் என்று கேட்ட பொழுது "ஒவ்வொரு பெண்ணும் அவர்களின் உரிமைக்காக , சுய மரியாதைக்காக போராட வேண்டும்." எந்த துயரமும் வெல்லக் கூடியது தான் என்கிறார் புன்னகையுடன்.