மக்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் 17 வயது மாணவியின் 'புதிய பார்வை'!

0

பார்வை என்பதற்கு திறன் என்றோ அல்லது கண்ணால் பார்க்கும் நிலை என்றோ விளக்கம் தரலாம். ஆனால், அந்தச் சொல்லுக்குள் புதைந்துள்ள துல்லியமான அர்த்தத்தை வெளிப்படுத்துவது என்பது எளிதல்ல. உணவு, உடை வழங்குவது அல்லது கல்வி அளிப்பது என நம்மில் பலரும் நம்மால் இயன்றவரை வெவ்வேறு வகையில் பிறருக்கு உதவி செய்து வருகிறோம். அப்படி மெச்சத்தகுந்த உதவிகளைச் செய்து வருகிறார் இந்த 17 வயது மாணவி ஆருஷி குப்தா.

பிராமெரிகா ஸ்பிரிட் ஆஃப் கம்யூனிட்டி விருதுகள் நிகழ்ச்சியில் ஆருஷி
பிராமெரிகா ஸ்பிரிட் ஆஃப் கம்யூனிட்டி விருதுகள் நிகழ்ச்சியில் ஆருஷி

புதுடெல்லியின் பாரகம்பா சாலையில் உள்ள மார்டன் ஸ்கூலில் ப்ளஸ் 2 படிக்கும் ஆருஷி, 2009-ல் இருந்து 'ஸ்பெக்டாக்குலர் டிரைவ்' (Spectacular Drive) என்ற பெயரில் பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவி செய்து வருகிறார். தன்னைச் சுற்றியுள்ள மக்களால் பயன்படுத்தப்பட்டு, குப்பைத் தொட்டிகளுக்குச் செல்ல காத்திருக்கும் கண்ணாடிகளை திரட்டி, அவற்றை ஹெல்ப் ஏஜ் இந்தியா, ஜன் சேவா ஃபவுண்டேஷன், கூஞ்ச் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் அளித்து வருகிறார்.

இந்த வித்தியாசமான முயற்சி பற்றி விவரித்த ஆருஷி, "எனக்கு 10 வயதில் இந்த யோசனை வந்தது. என்னுடைய பழைய கண்ணாடிக்கு பதிலாக புதிதாக கண்ணாடி வாங்கியபோது, பழசை குப்பையில் போட்டு வீணாக்குவதற்கு பதிலாக தேவைப்படும் நபருக்கு கொடுத்து உதவலாமே என்ற எண்ணம் வந்தது" என்றார். அப்படி ஓர் எண்ணம் வந்தவுடன், இதையே பெரிய அளவில் செய்யலாமே என்று நினைத்தவர், அதுபற்றி ஆய்வுகளைச் செய்திருக்கிறார். இந்த முயற்சியில் உள்ள சாதக - பாதகங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். மிக இளம் வயது என்பதால் நடைமுறையில் சாத்தியமா என்ற தயக்கமும் இருந்திருக்கிறது. எனினும், பிறருக்கு உதவுவது என்ற தனது கனவைச் சிறுக சிறுக நிஜமாக்கத் தொடங்கினார் ஆருஷி.

இந்தியாவில் 15 கோடிக்கும் மேலான மக்கள் கண்ணாடி அணியும் நிலை கொண்டவர்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலானோருக்கு வசதியின்மை காரணமாகவே கண்ணாடி அணிய முடிவதில்லை. தன் சமூக முயற்சியின் விளைவாக, தனது சுற்றத்தார், உறவினர்கள், நண்பர்கள், கண் மருத்துவர்கள், மருத்துவமனைகள், பல்வேறு அமைப்புகளில் இருந்து பயன்படுத்தப்பட்ட கண்ணாடிகளைத் திரட்டும் ஆருஷி, அவற்றை ஹெல்ப் ஹேஜ் இந்தியா, கூஞ்ச், ஜன் சேவா ஃபவுண்டேஷன் முதலான தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் நன்கொடையாக அளிக்கிறார். மக்களுக்கு மலிவு விலையில் கண்ணாடிகளை வழங்குவதுடன், பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, தன்னார்வலர்களுடன் உதவியுடன் கண் சிகிச்சை முகாம்களை நடத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

திரட்டிய கண்ணாடிகளில் ஒரு பகுதியுடன் ஆருஷி
திரட்டிய கண்ணாடிகளில் ஒரு பகுதியுடன் ஆருஷி

ஆருஷி பல்வேறு வழிகளில் மக்களுக்கு உதவி செய்து வருவதை, அவரது பெற்றோர் ஊக்குவிப்பதுடன் உறுதுணையாகவும் இருந்து வருகிறார்கள். குறிப்பாக, தான் பயிலும் பள்ளியிடம் இருந்தும் தக்க உறுதுணையைப் பெற்று சேவையாற்றுகிறார் ஆருஷி. இப்படி பல வழிகளில் ஆதரவு கிடைத்தாலும், தன் நோக்கத்தை நிறைவேற்றுவது என்பது அவருக்கு எளிதான வேலையாக இல்லை. பழைய கண்ணாடிகளைத் திரட்டுவதற்காக, சம்பந்தப்பட்ட மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுக்குப் புரியவைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அந்த அளவுக்கு சவால் நிரம்பியது இந்தப் பணி. சிலர் கொஞ்சம் கூட காதுகொடுக்காமல் உதாசீனப்படுத்திவிட்டு கடந்து போய்விடுவார்கள். அவர்களையும் கடக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்கிறார் ஆருஷி.

பொதுமக்கள் தங்களது கண்ணாடிகளை இடுவதற்காக, பொது இடங்களில் பெட்டிகளை வைத்திருக்கிறார் ஆருஷி. பொதுமக்கள், நிறுவனங்கள், ஊழியர்கள் என பல தரப்பினரையும் நேரில் சந்தித்து, தனது முயற்சியின் பலன்கள் குறித்தும், இந்த உதவியின் உன்னத பலன்கள் குறித்து விரிவாக எடுத்துரைப்பதையும் கடமையாகக் கொண்டுள்ளார். இதன் பலனாக, அதிக எண்ணிக்கையிலான கண்ணாடிகளைத் திரட்ட முடிகிறது.

இவரது இந்த அபார முயற்சிகளின் விளைவாக, இதுவரை 1,500 பேர் பலனடைந்து இருக்கிறார்கள் என்பது வியத்தக்கு தகவல். "நன்கொடை அளிப்பதால் உங்களுக்கு எந்தச் செலவும் இல்லை; ஆனால், பலரது நன்றிகடனுக்குச் சொந்தக்காரர் ஆகிறீர்கள்" என்பதே அவர் அனைவரிடமும் அடிக்கடிச் சொல்லும் உத்வேக மந்திரம்.

சமூக அக்கறை மிகுந்த முயற்சிகளுக்காக, 4-வது ஆண்டு பிராமெரிகா ஸ்பிரிட் ஆஃப்ட் கம்யூனிட்டி விருதுகள் வழங்கும் சர்வதேச நிகழ்ச்சியில், பள்ளிகளுக்கு தொண்டு செய்வோர் பிரிவில் ஆருஷி கவுரவிக்கப்பட்டார்.

மக்களின் பாராட்டும், உறுதுணையும் பிறருக்கு உதவும் மனப்பான்மையை மென்மேலும் உயர்ந்திட வழிவகுப்பதாக நெகிழ்கிறார் ஆருஷி.