அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தை ஆடிப்பாடி கற்பிக்கும் பார்வையற்ற ஆசிரியை!

ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறக்கும் கடமையோடு, கூடுதலாக தான் கற்ற ஆங்கிலத்தை எளிய முறையில் மற்றவர்களுக்கும் கற்பித்து அனைவரின் பாராட்டுகளையும் அள்ளி வருகிறார் பார்வையற்ற பெண் ஆசிரியை பாப்பாத்தி.

0

வாங்கும் சம்பளத்திற்கு வேலை பார்த்தால் போதும் என எல்லை வகுத்துக் கொண்டு செயல்பட முடியாத பணிதான் ஆசிரியர் பணி. தான் கற்றுக் கொண்ட அறிவுச் செல்வங்களை எல்லாம் மாணவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை. அப்படிப்பட்ட நல்லாசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவர். ஆசிரியை பாப்பாத்தியும் அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான்.

பாப்பாத்தி டீச்சர் பள்ளி மாணவர்களுடன்
பாப்பாத்தி டீச்சர் பள்ளி மாணவர்களுடன்

பார்வையற்ற பெண் ஆசிரியையான பாப்பாத்தி, அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு எளிய முறையில் ஆங்கில பாடம் கற்பித்து அசத்தி வருகிறார்.

பெரம்பலுார் மாவட்டம், பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள யூனியன் நடுநிலைப் பள்ளி ஆசிரியை தான் இந்த பாப்பாத்தி. ஆங்கில பட்டதாரியான இவர், பார்வையற்ற மாற்றுத்திறனாளி. தற்போது 29 வயதாகும் இவர் 2012-ம் ஆண்டு முதல் இங்கு பணியாற்றி வருகிறார்.

“எனக்கு ஒன்றரை வயதான போது மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். அப்போது எனது பார்வை பறி போனது. புற உலகைப் பார்க்க இயலாவிட்டாலும், என்னாலும் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். கலெக்டராக வேண்டும் என்பது தான் எனது ஆரம்பகால லட்சியமாக இருந்தது. ஆனால், அது பார்வையற்றவர்களுக்கு ஏற்ற துறையல்ல என தெரிந்து கொண்டதால் எனது கவனம் ஆசிரியர் பணி பக்கம் திரும்பியது,”

 என தான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறார் பாப்பாத்தி. பிரெய்லி முறையில் பள்ளிப் படிப்பை முடித்து, பார்வையற்றோருக்கான பிரிவில் பன்னிரண்டாம் வகுப்பில் 930 மதிப்பெண்கள் எடுத்து பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல் மாணவியாக தேர்வானவர். இதற்கென பல பரிசுகளும் அவர் பெற்றுள்ளார்.

பள்ளிப் பருவத்தில் கலெக்டராக வேண்டும் என்ற லட்சியத்தில் தான் படித்துள்ளார். ஆனால், அது எட்டாக்கனி எனப் புரிந்து கொண்டதும் தன் எதிர்காலம் என்ன என்ற கேள்வி அவருக்குள் எழுந்துள்ளது. அப்போது, அவரது ஆசிரியை ரூபி என்பவர் தான், பாப்பாத்திக்குள் இருந்த ஆங்கிலத் திறமையை அடையாளம் கண்டுள்ளார். அவரை மேற்கொண்டு ஆங்கில இலக்கியம் படிக்கவும் அவர் உத்வேகம் அளித்துள்ளார்.

“ரூபி டீச்சர் வழிகாட்டுதலின்படி தான் ஆங்கில இலக்கியம் படித்தேன். பின்னர் பிஎட் முடித்து இந்தப் பள்ளியில் ஆசிரியையாக பணியில் அமர்ந்தேன். பல்வேறு போராட்டங்களை கடந்து வாழ்க்கையில் ஒவ்வொரு படியாக முன்னேறி வருகையில், என் பெற்றோர் இறந்து விட்டனர். அப்போது என் அண்ணன் குடும்பத்தார் தான் எனக்கு ஆதரவும், அரவணைப்பும் தந்தனர்,”

எனக் கூறும் பாப்பாத்திக்கு இரண்டு அண்ணன் மற்றும் அக்கா உள்ளனர். சமூக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஐஏஎஸ் ஆக வேண்டும் என விரும்பியுள்ளார் பாப்பாத்தி. ஆனால், காலத்தால் ஆசிரியை ஆன போதும், பாதை வேறானாலும் தான் சென்று சேர வேண்டிய இடம் ஒன்று தான் என தற்போது வேறு வகையில் சமூகமாற்றத்திற்கான செயல்களை அவர் செய்து வருகிறார்.

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கிலப் பாடம் எடுக்கும் பாப்பாத்தி, மாணவ மாணவியருக்கு எளிதில் புரியும் வகையில் பாடங்களை ஆடிப்பாடி எளிமையாக சொல்லிக் கொடுக்கிறார். வகுப்பிற்குள் முடிந்தவரை மாணவர்கள் கட்டாயம் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்பதே இவரது அன்புக் கட்டளை.

பள்ளி இடைவேளை நேரங்களில் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் பயிற்சி அளிக்கிறார். இதனால் பாடப்புத்தகத்தைத் தாண்டியும் ஆங்கிலம் மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவதாக அவர் கூறுகிறார்.

“இந்த போட்டி உலகில் ஆங்கிலம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனவே, ஏட்டுச் சுரைக்காயாக புத்தகத்தில் உள்ளதை மாணவர்கள் படித்தால் பத்தாது. அதனால் தான் நகரத்தில் பயிலும் மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாக பேச என்னால் இயன்ற பயிற்சிகளை அளித்து வருகிறேன். 

ஆங்கிலம் கடினமான பாடம் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் பதிந்து விடக் கூடாது என்பதால், மறுநாள் சொல்லிக் கொடுக்க இருக்கும் பாடங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, ஆடிப்பாடி எளிய முறையில் கற்பிக்கிறேன். இதனால் மாணவர்கள் சுலபமாக ஆங்கிலம் கற்றுக் கொள்கின்றனர்,”

என தன் வெற்றியின் ரகசியம் சொல்கிறார் பாப்பாத்தி. வேலைக்கு சேர்ந்த பின் எம்.ஏ. படித்த பாப்பாத்தி, தற்போது எம்.பில் படித்து வருகிறார். இவர் போதிக்கும் விதத்தால், தங்களது பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக ஆங்கிலம் பேசுவதாக சக ஆசிரியர்கள் பாராட்டுகின்றனர்.

தான் கற்பிக்க வேண்டிய பாடப் புத்தகங்களை பாப்பாத்தி பிரெய்லி முறையில் தான் வைத்துள்ளார். அது தவிர கணினி, மொபைல் என தொழில்நுட்பங்களின் துணை கொண்டும் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்து வருகிறார்.

பாப்பாத்தியின் வீடு இருக்கும் இடத்தில் இருந்து அவர் வேலை பார்க்கும் பள்ளி 15 கிமீ தொலைவில் உள்ளது. ஆனபோதும் யாருடைய துணையும் இன்றி தினமும் தனியாக பேருந்தில் பள்ளிக்குச் சென்று வருகிறார். பாடம் நடத்துவதில் மட்டுமின்றி, பள்ளிக்கு சரியான நேரத்தில், வந்து செல்வதையும் பாப்பாத்தி வழக்கமாக வைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வை இல்லாதது ஒரு குறை இல்லை எனக் கூறும் அவர், தன்னைப் போல பலரும் படித்து வெளிச்சத்திற்கு வர வேண்டும் எனக் கூறுகிறார். அதோடு அரசுப்பணியில் தற்போது இருக்கும் இட ஒதுக்கீடு பத்தாது என ஆதங்கப்படும் பாப்பாத்தி, மற்றவர்களைப் போல தங்களுக்கும் அரசு வேலை அளிக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறார்.

“ஐஏஎஸ் ஆகியிருந்தால் வேறு மாதிரி என் வேலைகள் அமைந்திருக்கும். ஆனால், இப்போது தினமும் மாணவர்களுடன் பேசி, கற்பித்து வருவதால் எப்போதும் இளமையாகவும், உற்சாகமாகவும் இருப்பதாகவே உணர்கிறேன். ஆசிரியராக மற்றவர்களின் கல்விக் கண்ணை திறப்பதற்கு நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்தவகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. மற்ற ஆசிரியர்களை விட மாணவர்கள் என்னிடம் மிகவும் அன்பாக பழகி வருகின்றனர்,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் பாப்பாத்தி.